விளையாட்டு

டாஸ்; பவர்ப்ளே; டெத்.. சி.எஸ்.கே-வின் தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள் என்ன?

ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணி இதுவரை முதல் இரண்டு போட்டிகளை தோற்றதே இல்லை. அது இந்த முறை நிகழ்ந்திருக்கிறது. சென்னை அணி சீக்கிரமே மீண்டு வர வேண்டும்.

டாஸ்; பவர்ப்ளே; டெத்.. சி.எஸ்.கே-வின் தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 200+ ரன்களை எடுத்தும் அந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் சென்னை அணி தோற்றிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

டாஸ்:

டாஸை வெல்லும் அணிகள் ஸ்கோரை சேஸ் செய்ய விரும்புவதே வாடிக்கையாக இருக்கிறது. அப்படி டாஸை வென்று சேஸ் செய்யும் அணிகளே அதிகமாக போட்டியையும் வென்றிருக்கின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளில் ஒரே ஒரு போட்டி மட்டுமே இதற்கு மாறாக முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது. இதற்கு பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்கள் ஒரு காரணமாக இருந்தாலும், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் பந்து ஈரமடைந்துவிடுவதால் அதை சரியாக பிடித்து வீச பௌலர்கள் சிரமப்படுகின்றனர். சிஎஸ்கேவிற்கும் நேற்று இதுதான் நடந்திருந்தது. டாஸில் தோற்றார்கள். இதனால் இரண்டாவதாக பந்துவீச வேண்டி வந்தது. பனியின் தாக்கம் இருந்தது. பந்து ஈரப்பதம் ஆனது. 211 ரன்களை அடித்தும் டிஃபண்ட் செய்ய முடியாமல் சென்னை தோற்றது. இதுபற்றி கேப்டன் ஜடேஜாவும் போட்டிக்கு பிறகு பேசியிருந்தார். 'அடுத்த போட்டிக்கு முன்பாக ஈரமான பந்தை அதிகம் பயிற்சி பெற வேண்டும் என கூறியிருந்தார். ஒருவேளை டாஸ் சென்னைக்கு சாதகமாக அமைந்து சென்னை சேஸ் செய்திருந்தால் போட்டியின் முடிவு அப்படியே தலைகீழாக மாறியிருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

பௌலிங் பவர்ப்ளே:

பந்துவீச்சில் சென்னை அணிக்கு லக்னோவின் தொடக்க விக்கெட்டுகள் கிடைக்கவே இல்லை. முதல் விக்கெட்டே 11 வது ஓவரில் லக்னோ 99 ரன்களை எட்டியபோதுதான் வந்தது. குறிப்பாக, முதல் 6 ஓவர் பவர்ப்ளேயில் சென்னை ரொம்பவே சுமாராக வீசியிருந்தது. கே.எல்.ராகுல் மற்றும் டீகாக்கை செட்டில் ஆக வைத்து 50+ ரன்களை கொடுத்திருந்தனர். அனுபவமற்ற துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் சௌத்ரியால் லக்னோவின் ஓப்பனர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த போட்டி என்றில்லை, கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியிலுமே கூட பவர்ப்ளேயில் சென்னையின் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்கவில்லை. பவர்ப்ளேயில் சென்னையின் மிகப்பெரிய நம்பிக்கையான தீபக் சஹார் இந்த தொடரில் காயமடைந்திருப்பது சென்னைக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் அணிக்கு திரும்புகிறாரோ அவ்வளவு சீக்கிரம் சென்னை அணி பவர்ப்ளேயில் சிறப்பாக செயல்படும்.

டெத் ஓவர் சொதப்பல்:

லக்னோவின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லும் சூழல். இந்த சமயத்தில் திடீரென அதுவரை ஓவரே வீசிடாத சிவம் துபேவின் கைக்கு பந்து செல்கிறது. சிவம் துபே வீசிய அந்த 19 வது ஓவரில் மட்டும் 25 ரன்களை வாரி வழங்கினார். அங்கேயே சென்னை அணிக்கு இருந்த சிறுநம்பிக்கையும் கரைந்துவிட்டது. கடைசி ஓவரில் மூன்று பந்துகளை மீதம் வைத்தே லக்னோ வென்றுவிட்டது. மொயீன் அலியை முன்னமே இடையில் ஒரு ஓவரை வீச வைத்திருந்தால் 19 வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது. ப்ராவோ / ப்ரெட்டோரியஸ் ஆகியோருக்கு இன்னும் ஒரு ஓவரை விட்டு வைத்திருந்தால் கூட போட்டி கடைசி பந்து வரை சென்றிருக்கும். இவை எதுவும் இல்லாமல் அதுவரை பந்து வீசிடாத 6 வது பௌலிங் ஆப்சனான துபேவையும் அனுபவமற்ற முகேஷ் சௌத்ரியையும் டெத் ஓவரில் பந்து வீச வைத்தது ரொம்பவே தவறான முடிவாக அமைந்தது.

இந்த தவறுகள் சென்னை அணியின் வரலாற்றில் இதுவரை நடந்திராத சோக ரெக்கார்ட் ஒன்று படைக்கப்பட காரணமாக இருந்திருக்கிறது. ஆம், ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணி இதுவரை முதல் இரண்டு போட்டிகளை தோற்றதே இல்லை. அது இந்த முறை நிகழ்ந்திருக்கிறது. சென்னை அணி சீக்கிரமே மீண்டு வர வேண்டும்.

banner

Related Stories

Related Stories