விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய பூஜா-ராணா கூட்டணி.. வெற்றியோடு உலகக்கோப்பையை தொடங்கிய இந்தியா!

பாகிஸ்தானை சுலபமாக வீழ்த்தி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

பாகிஸ்தானை வீழ்த்திய பூஜா-ராணா கூட்டணி.. வெற்றியோடு உலகக்கோப்பையை தொடங்கிய இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களுக்கான உலகக்கோப்பை தொடர் நியுசிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பிறகு சரிவிலிருந்து மீண்டு பாகிஸ்தானை சுலபமாக 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர்கள் ஸ்நே ராணா மற்றும் பூஜா வஸ்தராக்கர் ஆகியோரே. இந்த இருவரும்தான் பேட்டிங்கின் போது பெரும் தடுமாற்றத்தில் இருந்த இந்திய அணியை நிலைப்படுத்தி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். இந்திய அணியின் கேப்டனான மிதாலி ராஜே டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்திய அணியை பொறுத்தவரைக்கும் கடந்த சில ஆண்டுகளாக சேஸிங் செய்வதுதான் அவர்களுக்கு சாதகமானதாக இருந்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் பெரும்பாலும் தோல்வியையே தழுவியிருக்கிறார். பாகிஸ்தான் கொஞ்சம் சுமாரான ஃபார்மில் இருக்கும் அணி என்பதால் அவர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கக்கூடும்.

இந்திய அணியின் 50 ஓவர் பேட்டிங்கை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் 34 ஓவர்கள் ஒரு பகுதி. அந்த பகுதியில் இந்திய அணி தனது சம்பிரதாயப்படி கடுமையாக சொதப்பியிருக்கவே செய்தது. ஸ்மிருதி மந்தனாவுடன் ஓப்பனிங் இறங்கிய ஷெஃபாலி வர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தீப்தி சர்மா மற்றும் மந்தனா கூட்டணி கொஞ்சம் நம்பிக்கை அளித்தாலும் நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்க்ஸாக மாற்றுவதில் இருவருமே சொதப்பியிருந்தனர். தீப்தி 40 ரன்களிலும் மந்தனா 52 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்திய பூஜா-ராணா கூட்டணி.. வெற்றியோடு உலகக்கோப்பையை தொடங்கிய இந்தியா!

இதன்பிறகு, மிடில் ஆர்டரில் முக்கிய பேட்டர்களான மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் மூவருமே கடுமையாக சொதப்பினார். குறிப்பாக, மிதாலி ராஜ் தனது வழக்கமான தவநிலையிலான இன்னிங்ஸை ஆட இன்னொரு முனையில் ரன்ரேட் அழுத்தத்தில் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தது. மிதாலி க்ரீஸில் நின்ற 12 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே வந்திருந்தது.36 பந்துகளில் 9 ரன்களை அடித்த மிதாலி அவரும் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடாமல் அவுட் ஆகினார். ஆக, முதல் 34 ஓவர்களில் அதாவது முதல் பகுதியில் தீப்தியும் மந்தனாவும் ஆடிய சில ஓவர்களை தவிர மற்ற ஓவர்களிலெல்லாம் இந்திய அணி தடுமாறியிருந்தது. 34 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 115-6 எனும் தடுமாற்ற நிலையிலேயே இருந்தது. ரன்ரேட் மூன்றை சுற்றியே இருந்தது. ஆட்டம் முழுவதும் பாகிஸ்தான் கையிலேயே இருந்தது.

இப்போது இரண்டாம் பகுதிக்கு வருவோம். கடைசி 16 ஓவர்களை இரண்டாம் பகுதி என எடுத்துக்கொள்வோம். இந்த பகுதியில்தான் ஆட்டம் பாகிஸ்தானின் கையிலிருந்து இந்தியாவின் கைக்கு முழுமையாக வந்து சேர்நது. முதல் 34 ஓவர்களில் 115 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி அடுத்த 16 ஓவர்களில் 129 ரன்களை எடுத்திருந்தது. ஒட்டுமொத்தமாக அணியின் ஸ்கோர் 244 ஆக உயர்ந்திருந்தது.

இதற்கு காரணம் ஸ்நே ராணா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் அமைத்த பொறுப்பான கூட்டணி. மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடிய போது நீண்ட நேரமாக பவுண்டரியே வராமல் இருந்தது. ஆனால், பூஜா க்ரீஸுக்குள் வந்த வேகத்திலேய்ர்ர் அடுத்தடுத்து பவுண்டரிக்களாக அடித்து அசத்தினார். ஸ்பின்னர்களை ஆஃப் சைடில் கட் ஷாட்களாக அடித்து வெளுத்தெடுத்தார். அவருக்கு துணையாக ஸ்நே ராணா சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து அவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரி அடித்து அசத்தினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அணியை பயங்கர இக்கட்டான சூழலிலிருந்து ராணா மீட்டிருப்பார். அதேபோன்றதொரு இன்னிங்ஸைத்தான் இங்கே மீண்டும் பூஜாவுடன் கைக்கோர்த்து பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆடினார். பூஜா கடந்த டிசம்பரில் நடந்த உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். அதே ஃபார்மை இங்கேயும் தொடர்ந்தார். இருவரும் அரைசதம் கடந்தனர். இருவரும் இணைந்து 122 ரன்களை எடுத்தனர். ராணா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, பூஜா கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.

பாகிஸ்தானை வீழ்த்திய பூஜா-ராணா கூட்டணி.. வெற்றியோடு உலகக்கோப்பையை தொடங்கிய இந்தியா!

இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணி அதளபாதளத்திலிருந்து மீண்டு 245 ரன்களை பாகிஸ்தானுக்கு டார்கெட்டாக நிர்ணயித்திருந்தது. இவ்வளவு பெரிய ஸ்கோரை பாகிஸ்தான் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் பயிற்சி போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக 230 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த நம்பிக்கையோடு பாகிஸ்தான் களமிறங்கியது.

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாகிஸ்தான் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜூலன் கோஸ்வாமி மற்றும் மேக்னா சிங் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி ரன்னே கொடுக்காமல் அழுத்தம் ஏற்ற 10 ஓவருக்கு மேல் ஸ்பின்னர்களிடம் பாகிஸ்தான் பேட்டர்கள் வரிசையாக வீழ்ந்தனர். ராஜேஸ்வரி கெய்க்வாட் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதல் போட்டியையே வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் இந்திய அணி அடுத்த போட்டியில் மார்ச் 10 அன்று நியுசிலாந்தை எதிர்கொள்கிறது. சமீபத்தில் நியுசிலாந்துக்கு எதிராக 1-4 என ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. எனவே, அந்த போட்டி இந்திய அணிக்கு கடும் சவால்மிக்கதாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories