விளையாட்டு

டெத் ஓவர் திரில் வெற்றி.. T20 தொடரை வென்ற இந்தியா!

100வது ஐ.பி.எல் போட்டியை வென்றது இந்திய அணி.

டெத் ஓவர் திரில் வெற்றி.. T20 தொடரை வென்ற இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்த போட்டியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியே டாஸை வென்றிருந்தது. அவர்கள் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட் செய்திருந்தது. டார்கெட்டை டிஃபண்ட் செய்யும் போது பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பேட் செய்யும் போது சராசரியை விட இந்திய அணி அதிக ஸ்கோரை எடுக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ப இந்திய அணியும் சிறப்பாக 180+ ஸ்கோரை எடுத்திருந்தது.

ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவுடன் இறங்கிய இஷன் கிஷன் கடந்த போட்டியை போன்றே சொதப்பியிருந்தார். கடந்த போட்டியில் நீண்ட நேரமாக க்ரீஸில் நின்று அடிக்க முடியாமல் சொதப்பிய இஷன் கிஷன் இந்த முறை வந்த வேகத்திலேயே பெரிய ஷாட் ஆடி அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ரோஹித் சர்மா 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, நம்பர் 3 இல் களமிறங்கிய விராட் கோலி நின்று சிறப்பாக ஆடினார். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 76 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் இந்திய அணி 110 ரன்களை சேர்த்திருந்தது.

இந்த அதிரடிக்கு காரணம் ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரே. விராட் கோலி நின்று ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி 41 பந்துகளில் 52 ரன்களை அடித்து ரஸ்டன் சேஸின் பந்தில் போல்டாகியிருந்தார். இதன்பிறகுதான் இடது கை பேட்ஸ்மேன்களான பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தங்களது வேலையை காட்டினர்.

இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களை லெக் சைடில் பெரிய சிக்சர்களாக அடித்து திணறடித்தனர். இருவரும் 14 வது ஓவரில் கூட்டணி சேர்ந்திருந்தனர். 19 வது ஓவர் வரை 6 ஓவர்களில் ஓவருக்கு 12 ரன்களுக்கு குறைவாக எடுக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து குறைவான நேரத்தில் 76 ரன்களை சேர்த்திருந்தனர். ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆகியிருந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை சேர்த்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 187 ரன்களை எடுத்தாக வேண்டும். கைல் மேயர்ஸ் 9 ரன்களில் அவுட் ஆக, இன்னொரு ஓப்பனரான ப்ராண்டன் கிங் 30 பந்துகளில் 22 ரன்களை அடித்து ஏமாற்றம் அளித்தார். தொடக்கம் சரியாக அமையாவிடிலும் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருந்தனர். பூரனும் பவலும் நின்று விக்கெட்டை விடாமல் அதிரடியாகவும் ஆடினர். இருவரும் அரைசதத்தையும் கடந்திருந்தனர்.

பூரன் 41 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அவுட் ஆக, பொல்லார்ட் க்ரீஸுக்குள் வந்தார். ஆட்டம் பரபரப்பான இறுதிக்கட்டத்திற்கு நுழைந்தது. டெத் ஓவர்களை புவனேஷ்வர் குமாரும் ஹர்ஷல் படேலும் வீசியிருந்தனர். இருவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்களின் பந்துவீச்சே இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. 18 வது ஓவரை வீசிய ஹர்ஷல் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இவரின் ஸ்லோயர் ஒன்களை சரியாக கணித்து அடிக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 19 வது ஓவரை புவனேஷ்வர் குமார் இன்னும் சிறப்பாக 4 ரன்களை மட்டுமே கொடுத்து பூரனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். கடைசி 4 பந்துகளில் 4 சிக்சர்களை அடித்தால் வெற்றி என்ற நிலையில் பவல் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை அடித்து அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்த இரண்டு பந்துகளையும் சிறப்பாக வீசிய ஹர்ஷல் படேல் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா வென்றிருக்கிறது. முழுநேர கேப்டனான பிறகு ரோஹித் தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது தொடர் இது.

banner

Related Stories

Related Stories