விளையாட்டு

U19 World cup : இங்கிலாந்தை வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்தியா !

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது.

U19 World cup : இங்கிலாந்தை வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆண்டிகுவாவின் சர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே ஜொலித்த ராஜ் பவாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் டாம் ப்ரெஸ்ட்டே டாஸை வென்றிருந்தார். பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்த தொடரில் இந்திய அணி இதற்கு முன் ஆடிய 5 போட்டிகளிலும் இந்திய பௌலர்கள் ஒரு முறை கூட எதிரணிக்கு 200 ரன்களுக்கு மேல் கொடுத்ததில்லை. அதை இந்த போட்டியிலும் கடைபிடித்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் ரவிக்குமார் மற்றும் ராஜ் பவா என்ற இரண்டு வீரர்கள் மிகச்சிறப்பாக வீசியிருந்தனர்.

முக்கிய பேட்ஸ்மேன்களான ஓப்பனர் பெத்தேல், கேப்டன் டாம் ப்ரெஸ்ட் ஆகியோரின் விக்கெட்டை இடது கை வேகப்பந்து வீச்சாளரான ரவிக்குமார் தொடக்கத்திலேயே வீழ்த்தியிருந்தார். ரவிக்குமார் தொடங்கி வைத்த இங்கிலாந்தின் வீழ்ச்சியை ராஜ் பவா தொடர செய்தார். தொடர்ச்சியாக 7 ஓவர்களை வீசிய ராஜ் பவா இந்த ஸ்பெல்லில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 100-120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்ற சூழலில் ஜேம்ஸ் ரிவ் என்ற வீரர் மட்டும் நின்று நிதானமாக ஆடி ஓரளவிற்கு இங்கிலாந்தை மீட்டார். இவரோடு சேல்ஸ் எனும் வீரர் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து நின்றார். இருவரும் இணைந்து 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிவ் 95 ரன்களில் ரவிக்குமாரின் ஷார்ட் பாலில் அவுட் ஆக, எஞ்சியிருந்த விக்கெட்டுகளும் வேகமாக விழுந்து இங்கிலாந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணிக்கு 190 ரன்கள் இலக்கு. எளிதான ஸ்கோர் என்றாலும் இந்திய அணி கடைசி வரை இழுத்து பரபரப்பை கூட்டியே வென்றிருந்தது. ஓப்பனரான ரகுவன்ஸி முதல் ஓவரிலேயே இங்கிலாந்தின் மெயின் பௌலரான டாம் பெய்டனிடம் டக் அவுட் ஆகினார். இன்னொரு ஓப்பனரான ஹர்னூர் சிங்கும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இங்கிலாந்தை போன்று விக்கெட்டுகளை வேகமாக இழக்கக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

U19 World cup : இங்கிலாந்தை வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்தியா !

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ஸ்கோரும் மெது மெதுவாக உயர்ந்தது. அணியின் துணை கேப்டனான சேக் ரஷீத் நின்று அரைசதம் அடித்து ஓரளவிற்கு காப்பாற்றினார். அவருக்கு பிறகு நிஷாந்தும் ராஜ் பவாவும் கூட்டணி போட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியிருந்தனர். ராஜ் பவா 35 ரன்களில் அவுட் ஆக, நிஷாந்த் அரைசதத்தை கடந்தும் நாட் அவுட்டாக இருந்தார். கடைசியில் அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் பனா 48 வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றி பெற வைத்தார். 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. பந்துவீச்சில் 5 விக்கெட்டும் பேட்டிங்கில் 35 ரன்களும் எடுத்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

இந்திய U19 அணி வெல்லும் ஐந்தாவது உலகக்கோப்பை இது. கடந்த முறையும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. ஆனால், வங்கதேசத்திற்கு எதிராக தோற்றிருந்தது. கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை மறக்கடிக்கும் வகையில் மிகச்சிறப்பான வகையில் இந்த முறை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. கெய்ஃப், கோலி, உன்முகுந்த் சந்த், ப்ரித்திவி ஷா வரிசையில் யாஷ் துல்லும் U19 உலகக்கோப்பையை வென்றவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார். இந்த இந்திய அணியில் ஆடி கலக்கிய வீரர்கள் வெகு சீக்கிரமே ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பெரிய விலைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அடுத்தக்கட்ட வீரர்களுக்கான தேடலில் இருக்கும் இந்திய சீனியர் அணியிலும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories