விளையாட்டு

"எங்களின் கனவுகளை சிதைத்துவிட்டீர்கள்" : கொதிக்கும் இந்திய பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!

'எங்கள் கனவுகளை சிதைத்துவிட்டீர்கள்' என இந்திய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளரான தாமஸ் டெனர்பி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

"எங்களின் கனவுகளை சிதைத்துவிட்டீர்கள்" : கொதிக்கும் இந்திய பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெண்களுக்கான AFC ஆசியக்கோப்பை கால்பந்து தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றிருந்த இந்திய பெண்கள் கால்பந்து அணியை சேர்ந்த வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி இந்த தொடரிலிருந்து விலகியிருக்கிறது. இந்நிலையில் 'எங்கள் கனவுகளை சிதைத்துவிட்டீர்கள்' என இந்திய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளரான தாமஸ் டெனர்பி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

இந்திய அணி கடைசியாக 2003ஆம் ஆண்டே இந்த AFC ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்றிருந்தது. அதன்பிறகு, இந்த தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு அமையவே இல்லை. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. தொடரை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் இந்திய அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 1979ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து இந்த தொடர் நடைபெற்றிருந்தது. அதன்பிறகு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. வருடக்கணக்கான காத்திருப்பிற்கு பிறகு கைகூடி வந்த இந்த வாய்ப்பை இந்திய அணியால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

20 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி இரானுடன் மோதியிருந்தது. அந்த போட்டி 0-0 என டிராவில் முடிந்தது. சீன தைபேவுடன் இரண்டாவது போட்டியில் ஆட இந்தியா தயாரானது. அப்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய வீராங்கனைகள் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே இந்திய அணியை இந்த தொடரிலிருந்து வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டது. வேறு வழியின்றி இந்திய அணியும் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த ஆதங்கத்தையே இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளரான தாமஸ் டெனர்பி இப்போது கொட்டித்தீர்த்திருக்கிறார்.

வீராங்கனைகளுக்கான பயோபபிள் நடைமுறைகளை ஆசிய கால்பந்து கூட்டமைப்பே செய்திருந்தது. டெனர்பியின் பேட்டியில் இந்த கூட்டமைப்பின் மீதே அதிக கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். 'நவி மும்பையில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மூலமே எங்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஊழியர்களை நாங்கள் குறைசொல்லவில்லை. தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால், ஊழியர்களின் பரிசோதனை முடிவுகளை AFC ஏன் அவ்வளவு தாமதமாக வெளியிட்டது? 17ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 18ஆம் தேதி AFC க்கு முடிவுகள் கிடைத்துவிட்டன. ஆனால், 19ஆம் தேதியே எங்களுக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், ஹோட்டல் ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையே பரிசோதனை செய்யப்படுகிறது. பயோபபிளை இவர்களுக்கு கையாளத் தெரியவில்லை. என்ன காரணம் சொன்னாலும் அந்த தாமத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

முதல் போட்டியில் ஆடி முடித்தபோது பல வீராங்கனைகளுக்கும் உடல்நிலை சரியில்லை. பரிசோதனையில் 7 வீராங்கனைகளுக்கு தொற்று பாதிப்பு இருந்தது. அதன்பிறகான தொடர் பரிசோதனையில் இப்போது 19 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களை விலகச் சொன்னார்கள். நாங்கள் ஒரு தீர்வை வேண்டி AFC அமைப்புடன் ஆக்கப்பூர்வ உரையாடலில் ஈடுபட முயன்றோம். ஆனால், அவர்கள் அதற்கு தயாராக இல்லை. இவ்வளவு மோசமாக நான் எப்போதுமே உணர்ந்ததில்லை. கடந்த 6 மாதமாக இந்த தொடருக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எந்த கொண்டாட்டத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. எங்களின் ஒரே இலக்காக இந்த தொடர் மட்டுமே இருந்தது. இவர்கள் எங்களின் கனவுகளை சிதைத்துவிட்டார்கள்' என ஆதங்கத்தோடு பேசியிருந்தார்.

ஒரு கூட்டமைப்பின் அலட்சியம் ஒரு அணியின் மாபெரும் கனவை சுக்குநூறாக்கியுள்ளது. இந்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் கனவுமே கலைந்து போயிருக்கிறது. இந்த பின்னடைவிலிருந்து இவர்கள் மீண்டு வந்து அடுத்தடுத்த தொடர்களுக்கு உத்வேகத்தோடு தயாராக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories