விளையாட்டு

“அரை மணிநேரம் கெடு..”: தடுப்பூசி விவகாரத்தில் ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்!

ஜோக்கோவிச்சை அரைமணி நேரத்தில் காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராகவே நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

“அரை மணிநேரம் கெடு..”: தடுப்பூசி விவகாரத்தில் ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

செர்பியாவை சேர்ந்த பிரபலமான டென்னிஸ் வீரரான நோவக் ஜோக்கோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜோக்கோவிச்சின் விசாவிற்கு ஒப்புதல் அளித்து அவரை அரைமணி நேரத்தில் காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராகவே நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் இருவருக்கும் பிறகு டென்னிஸ் உலகில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நோவக் ஜோக்கோவிச்சே. ரசிகர்களின் எண்ணிக்கையில் இவர் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் சாதனைகளில் ஃபெடரரையும் நடாலையும் வெகுவிரைவில் முந்திவிடும் நிலையில் இருக்கிறார். மூன்று பேருமே இதுவரை 20 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கின்றனர். இன்னும் ஒரு க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்பவர் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீரராக இருப்பார்.

சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ்களின் படி இந்த சாதனையை முதலில் நிகழ்த்தும் வீரராக ஜோக்கோவிச்சே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த ஆண்டில் அமெரிக்க ஓபனை தவிர மீதமுள்ள 3 க்ராண்ட்ஸ்லாம்களையும் ஜோக்கோவிச்சே வென்றிருந்தார். இந்நிலையில்தான் இந்த ஆண்டின் முதல் க்ராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க தயாராகி வந்தார். 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த தொடரில் பங்கேற்க கடந்த வாரம் மெல்பர்னுக்கு பயணப்பட்டிருந்தார். அங்கே விமான நிலையத்திலேயே ஜோக்கோவிச் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தடுப்பூசி செலுத்தாத நபர் என்பதால் அவரை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் விசாவும் ரத்து செய்யப்பட்டது. ஹோட்டலில் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் ஜோக்கோவிச் வைக்கப்பட்டார். உலகளவில் நம்பர் 1 டென்னிஸ் வீரராக இருப்பவர் இப்படி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜோக்கோவிச்சும் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கிற்கான விசாரணை சில மணி நேரங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

“அரை மணிநேரம் கெடு..”: தடுப்பூசி விவகாரத்தில் ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்!

இதில் நோவக் ஜோக்கோவிச்சிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 'ஜோக்கோவிச்சிற்கு தடுப்பூசி சம்பந்தமாக விளக்கமளிக்க அவர் வந்திறங்கிய அன்றைக்கு மறுநாள் காலை 8:30 மணி வரை நேரம் கொடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், காலை 7:42 மணிக்கே விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அரைமணி நேரத்தில் அவர் தனக்குரிய நபர்களிடம் பேசி முறையான விளக்கம் அளித்திருக்கக்கூடுமே?' என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜோக்கோவிச் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தீர்ப்பு வெளியான அரைமணி நேரத்திற்குள் அவர் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஜோக்கோவிச் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருக்கின்றனர்.

ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவிற்கு எதிராக தீர்ப்பு வந்திருப்பதால் அரசாங்கம் சார்பில் மேற்கொண்டு நடிவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை உச்சபட்ச கண்டிப்போடு கடைபிடிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இது அந்த நாட்டிற்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் ரசிகர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கிறதென்பதில் மாற்று கருத்தில்லை. கடந்த 2020 டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தபோது, இந்திய வீரர்களுமே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காபாவில் நடைபெற வேண்டிய கடைசிப்போட்டி நடைபெறுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், இந்திய வீரர்கள் ஒருவழியாக சமாளித்து ஆடி அந்த தொடரையும் வென்றுவிட்டு வந்தனர்.

அதேபோல தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் பலருமே அந்த நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர். விருப்பமிருந்தால் ஆடுங்கள் இல்லையெனில் தொடரை விட்டு விலகுங்கள் என ஆஸ்திரேலிய வீரர்கள் தரப்பில் கொஞ்சம் நக்கலாகவே இங்கிலாந்திற்கு பதில் கிடைத்தது. பீட்டர்சன் போன்ற முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் கமெண்டேட்டர்கள் கூட இப்படி இறுக்கிப்பிடிக்கும் கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய முடியாது என பின்வாங்கியிருந்தனர்.

கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதே அறமாகும். சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருப்பதாலயே சலுகைகளை எதிர்பார்ப்பது சரியில்லை.

banner

Related Stories

Related Stories