விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சென்ச்சூரியனில் சாதனைக் கொடி நாட்டிய இந்தியா! #IndvsSA

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்ச்சூரியனில் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி எனும் பெருமையையும் இந்தியா பெற்றிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சென்ச்சூரியனில் சாதனைக் கொடி நாட்டிய இந்தியா! #IndvsSA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்ச்சூரியனில் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி எனும் பெருமையையும் இந்தியா பெற்றிருக்கிறது.

இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாக தடைபட்டிருந்ததால் போட்டி இன்று பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 211 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன. மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியிருந்தது. மழை குறுக்கிட்டால் போட்டி டிராவை நோக்கி நகரும் வாய்ப்பிருந்தது. அப்படி நடந்தால் அது இந்தியாவிற்கு பின்னடைவாக அமையும். வெல்ல வேண்டிய போட்டி டிராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் அடி விழும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இந்திய அணி மழை குறுக்கிடுவதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தி போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டது.

இன்றைய நாளில் இந்திய பௌலர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய வீரர்களாக மூன்று பேர் இருந்தனர். தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், டீகாக், பவுமா இந்த 3 பேரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் இந்தியா எளிதில் வென்றுவிடும் என்ற சூழலே இருந்தது. டீன் எல்கர் நேற்றே அரைசதத்தை கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். பவுமா இன்றுதான் எல்கருடன் கைக்கோர்த்திருந்தார். இந்த இருவருமே இன்று தற்காப்பாக ஆடாமல் கொஞ்சம் வேகமாகவே ரன்கள் சேர்த்தனர். ஓவருக்கு 4 ரன்கள் என்ற விகிதத்தில் ஸ்கோர் செய்து கொண்டிருந்தனர். இது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவை உண்டாக்கியது.

ஆனாலும் இந்திய பௌலர்கள் சோர்வடைந்து டிஃபன்ஸிவ்வாக யோசிக்கவே இல்லை. தொடர்ந்து டைட்டாக ஆங்கிள் இன் டெலிவரிக்களாக வீசிக்கொண்டிருந்தனர். இதற்கு பலனும் கிடைத்தது. ஆனால், டீன் எல்கர் கொடுத்த ஒரு கேட்ச்சை பந்து வீசிய ஷமியே கோட்டைவிட்டு ஏமாற்றினார். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாற செய்தனர். ஆனால், பும்ரா கட்டுக்கோப்பாக வீசிய இந்தியாவின் முதல் டார்கெட்டான டீன் எல்கரை வீழ்த்தினார். திட்டப்படியே ஆங்கிள் இன்னாக வீசப்பட்ட பந்து பிட்சின் தன்மையால் கொஞ்சம் கூடுதலாக மூவ் ஆக பந்தை பேடில் வாங்கி டீன் எல்கர் 77 ரன்களில் lbw ஆனார்.

இதன்பிறகு, டீகாக் க்ரீஸிற்குள் வந்தார். டீகாக்-பவுமா இதுதான் கடைசி பேட்டிங் கூட்டணி. இதை வீழ்த்திவிட்டால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும் என்ற சூழலில், டீகாக் கொஞ்சம் வேகமாக ரன்கள் சேர்த்து தண்ணி காட்டினார். ஆனால், இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிராஜின் பந்தில் இன்சைடு எட்ஜ் ஆகி போல்ட் ஆனார்.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சென்ச்சூரியனில் சாதனைக் கொடி நாட்டிய இந்தியா! #IndvsSA

இதன்பிறகு, இந்திய அணியின் வெற்றி எளிதாகிவிட்டது. பவுமா கொஞ்சம் சிரமம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை ஒரு முனையில் நிற்க செய்து வேடிக்கை பார்க்க வைத்தே மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இந்தியா வேகமாக வீழ்த்திவிட்டது. பவுமா நாட் அவுட்டாக க்ரீஸில் இருந்தார். ஆனால், எந்த ப்ரயோஜனமும் இல்லை. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

தென்னாப்பிரிக்காவின் கோட்டையாக கருதப்படும் சென்ச்சூரியனில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி எனும் பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் இரண்டு போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையை கோலி பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றிருக்கிறது. இங்கிலாந்தில் ஏறக்குறைய தொடரை வென்றுவிடும் சூழலில் இருக்கிறது. இப்போது தென்னாப்பிரிக்காவிலும் முதல் போட்டியையே வென்று சிறப்பாக தொடங்கியிருக்கிறது. உள்ளூர் தொடர்களையும் முழுமையாக வென்றிருக்கிறது. இந்த 2021 இந்திய டெஸ்ட் அணிக்கு சாதனைகளால் நிரம்பிய ஆண்டாக நிறைவடைந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories