விளையாட்டு

ஒயிட் வாஷ் செய்த இந்தியா.. ஆறுதல் வெற்றி கூட இல்லாமல் சொதப்பிய நியுசிலாந்து!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என முழுமையாக இந்த தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது.

ஒயிட் வாஷ் செய்த இந்தியா.. ஆறுதல் வெற்றி கூட இல்லாமல் சொதப்பிய நியுசிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3-0 என முழுமையாக இந்த தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது.

கேப்டன் பதவிலியிலிருந்து கோலியும் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியும் விலகிய பிறகு, அந்த இடங்களுக்கும் ரோஹித் சர்மாவும் முன்னாள் வீரரான ராகுல் ட்ராவிட்டும் வந்தனர். இந்த புதிய கூட்டணி எதிர்கொண்ட முதல் தொடரிலேயே நியுசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித்தே டாஸை வென்றிருந்தார். இந்த முறை முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முந்தைய இரண்டு போட்டிகளிலுமே ரோஹித்தான் டாஸை வென்றிருந்தார். இதுவே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்தது. கே.எல்.ராகுலுக்கு பதில் இஷன் கிஷனும் அஷ்வினுக்கு பதில் சஹாலும் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். நியுசிலாந்து அணியில் அந்த அணியின் கேப்டன் டிம் சவுத்தி ஓய்விலிருக்க, சாண்ட்னர் கேப்டனாக செயல்பட்டார். சவுத்திக்கு பதில் ஆடம் மில்னே ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடியது. ரோஹித் & இஷன் கிஷன் கூட்டணியை நியுசிலாந்தின் வேகங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. போல்ட், ஃபெர்குசன், ஆடம் மில்னே மூவரின் பந்து வீச்சையுமே வெளுத்தெடுத்தனர். குறிப்பாக, ரோகித் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். பவர்ப்ளேயில் மட்டும் 17 பந்துகளை சந்தித்து 39 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் 200 க்கும் மேல் இருந்தது. இருவரின் அதிரடியாலும் பவர்ப்ளேயில் மட்டும் இந்திய அணி 69 ரன்களை எடுத்திருந்தது.

7 வது ஓவரிலிருந்து ஸ்பின்னர்கள் அறிமுகமானார்கள். இங்கே இருந்துதான் இந்தியாவிற்கு பிரச்சனை அறிமுகமானது. சாண்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே இஷன் கிஷன், சூரியகுமார் யாதவ் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே ரிஷப் பண்ட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அரைசதம் கடந்திருந்த கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இஷ் சோதி வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் சாண்ட்னர், சோதி இருவருமே இந்தியாவை கடுமையாக சோதித்தனர். இந்திய அணியின் டாப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பிறகு, வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும் அடித்து ஓரளவுக்கு சமாளித்தனர். டெத் ஓவர்களில் சர்ப்ரைஸாக ஹர்ஷல் படேலும் தீபக் சஹாரும் அடித்து வெளுத்தனர். மில்னே வீசிய கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்களை தீபக் சஹார் வெளுத்தெடுத்தார். இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 184 ஆக உயர்ந்தது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணிக்கு பெரிய சிரமமேதும் கொடுக்கவில்லை. 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கே நியுசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. மூன்றாவது ஓவரிலிருந்தே ரோஹித் ஸ்பின்னர்களை பந்துவீச அழைத்து வந்தார். இது மிகப்பெரிய பலனை கொடுத்தது. அக்சர் படேல் வீசிய ஒரே ஓவரில் டேரில் மிட்செல், சாப்மன் இருவரும் அவுட் ஆகியிருந்தனர். அவர் வீசிய அடுத்த ஓவரில் க்ளென் பிலிப்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அவுட் ஆனார். மொத்தமாக 3 ஓவர்களை வீசிய அக்சர் படேல் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். க்ரீஸில் நின்று கிலி ஏற்படுத்திக்கொண்டிருந்த கப்திலையும் 51 ரன்களில் சஹால் வீழ்த்தினார். இதன்பிறகு, நியுசிலாந்து அணியால் வீழ்ச்சியிலிருந்து தப்பவே முடியவில்லை. 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருதும் ரோஹித்திற்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு உடனே மீண்டு வந்து ஒரு தொடரை முழுமையாக அதுவும் நியுசிலாந்தை வீழ்த்தி வென்றதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories