விளையாட்டு

சஹாலின் சுழல்; ஹர்ஷலின் ஹாட்ரிக்: வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் - வெற்றியை கொண்டாடும் RCB ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. பெங்களூர் பெரிய சிரமம் எதுவுமின்றி மிக எளிமையாக வென்றுள்ளது.

சஹாலின் சுழல்; ஹர்ஷலின் ஹாட்ரிக்: வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் - வெற்றியை கொண்டாடும் RCB ரசிகர்கள்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூர் அணியே முதலில் பேட் செய்திருந்தது. கோலி முதல் ஓவரிலேயே சிக்சரோடு தொடங்கியிருந்தாலும் பும்ரா வீசிய அடுத்த ஓவரிலே படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு, நம்பர் 3 யில் ஸ்ரீகர் பரத் களமங்கியிருந்தார். இவரும் கோலியும் அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல பார்ட்னர்ஷிப் போட்டனர். இருவரும் சேர்ந்து 68 ரன்களை எடுத்திருந்தனர். ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ராகுல் சஹார் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு, மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆரம்பத்தில் அதிரடியாக ஆட தொடங்கியிருந்த கோலி ஓவர்கள் செல்ல செல்ல ஆங்கர் இன்னிங்க்ஸாக மற்ற வீரர்களுக்கு செகண்ட் ஃபிடிலாக ஆட தொடங்கினார். கடந்த சில போட்டிகளாக சோபிக்காத மேக்ஸ்வெல் நேற்று அதிரடியாக ஆடினார். ஸ்பின்னர்களை தனது பிரத்யேக பாணியில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். பும்ரா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் ஆடினார்.

இடையில் கேப்டன் கோலி 42 பந்துகளில் 51 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். கடைசி 5 ஓவர்களில் மேக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் இருவரும் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கையில், இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார் பும்ரா. மேக்ஸ்வெல் 56 ரன்னிலும் டீ வில்லியர்ஸ் 11 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் பெங்களூர் அணி 165 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை அணிக்கு வெற்றி இலக்கு 166. மும்பையை பொறுத்தவரை மிகச்சிறப்பாகவே சேஸிங்கை தொடங்கியிருந்தது. ஓப்பனர்களான ரோஹித் சர்மாவும் டீகாக்கும் பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் 56 ரன்களை எடுத்திருந்தனர். ஆனால், இதன்பிறகுதான் வீழ்ச்சி தொடங்கியது.

சஹால், மேக்ஸ்வெல் என இரண்டு ஸ்பின்னர்களும் வீசிய 8 ஓவர்கள் மும்பைக்கு வினையாக அமைந்தது. சஹால் டீகாக், இஷன் கிஷன் ஆகியோரை வீழ்த்த மேக்ஸ்வெல் ரோஹித் சர்மா, க்ரூணால் பாண்ட்யா என முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் மும்பை அணி கடும் சரிவை சந்தித்தது. கடைசி 5 ஓவர்களில் ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை உருவானது. களத்தில் பொல்லார்டும் ஹர்திக் பாண்ட்யாவும் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால், அதையும் ஹர்சல் படேல் உடைத்துவிட்டார்.

ஹர்ஷல் படேல் வீசிய 17 வது ஓவரில் ஹர்திக், பொல்லார்ட், ராகுல் சஹார் என மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். மும்பை அணி மொத்தமாக பாதாளத்தில் வீழ்ந்தது. 18.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக பெறும் மூன்றாவது தோல்வி இது. எளிதில் ப்ளே ஆஃப்ஸ்க்கு செல்லும் என கணிக்கப்பட்ட மும்பை அணி இப்போது ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories