விளையாட்டு

கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த தியாகி.. பஞ்சாப் அணி அதிர்ச்சி தோல்வி! #IPL2021

கடைசி ஓவரில் தியாகி வீசிய அந்த யார்க்கர்கள் போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பி திக்திக் வெற்றியை பெற்று கொடுத்தது.

கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த தியாகி.. பஞ்சாப் அணி அதிர்ச்சி தோல்வி! #IPL2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை நடந்து முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டிய போட்டி இதுவே. தோல்வியை நோக்கி விரைந்து கொண்டிருந்த ராஜஸ்தான் அணி ஆச்சரியமளிக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்து போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

ராஜஸ்தான் அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணியின் சார்பில் எவின் லீவிஸும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர். இருவருமே தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினர். குறிப்பாக, எவின் லீவிஸ் பேட்டை தூக்கினாலே பவுண்டரிதான் போக வேண்டும் என்ற தீர்க்கத்தோடு ஆடினார். இஷான் போரலின் ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிக்களை அடித்திருந்தார். மொத்தமாக லீவிஸ் 36 ரன்களை எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரிக்கள். ஒரு சிக்சர் அடக்கம். அதாவது 34 ரன்களுக்கு பவுண்டரியும் சிக்சரும் மட்டுமே அடித்திருந்தார். இரண்டு ரன்களை மட்டுமே ஓடி எடுத்திருந்தார். லீவிஸின் அதிரடியால் பவர்ப்ளேக்குள்ளேயே 50 ரன்களை ராஜஸ்தான் அணி கடந்தது. 36 ரன்களில் அவர் அவுட் ஆகியிருந்தாலும் மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடி பாதையிலேயே பயணித்திருந்தனர்.

இன்னொரு ஓப்பனரான ஜெய்ஸ்வால் வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து ஸ்பின்னர்களை வெளுத்தெடுத்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருந்தது. அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 106 என்ற அளவில்தான் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. ஜெய்ஸ்வால் தனது பங்குக்கு 49 ரன்களை எடுத்து ப்ரார் பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் போரெல் ஓவரில் ஒயிடு லைனுக்கு வெளியே சென்ற பந்துக்கு பேட்டை விட்டு அவுட்டாகி ஏமாற்றினாலும், அடுத்து வந்து பேட்ஸ்மேன்கள் ரன் கணக்கை அதிரடியாக உயர்த்தினர்.

கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த தியாகி.. பஞ்சாப் அணி அதிர்ச்சி தோல்வி! #IPL2021

லாம்ரோர் எனும் இளம் வீரர் 17 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்தார். தீபக் ஹூடாவின் ஒரே ஓவரில் 24 ரன்களை வெளுத்தெடுத்தார். இங்கிலாந்து வீரரான லிவிங்ஸ்டனும் அதிரடியாக 25 ரன்களை சேர்த்திருந்தார்.

ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் கடைசி 4 ஓவர்களில் பெரும் சரிவை சந்தித்தது. வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களுக்கு ஆல் அவுட்டும் ஆனது. பஞ்சாப் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

186 ரன்கள் டார்கெட்டுடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். வழக்கம்போல இருவருமே அதகளப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு மட்டும் 120 ரன்களை சேர்த்தனர். ஆரம்பத்தில் 100 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டோடு ஆடிக்கொண்டிருந்த மயங்க் அகர்வால் கொஞ்சம் செட்டில் ஆன பிறகு, மோரிஸ், கார்த்திக் தியாகி போன்றோரின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார். 43 பந்துகளில் 67 ரன்களை எடுத்தவர் திவேதியா பந்துவீச்சில் லிவிங்க்ஸ்டனிடம் கேட்ச் ஆனார்.

கே.எல்.ராகுல் ஆரம்பத்திலேயே அட்டாக்கிங் மோடுக்கு சென்றிருந்தார். சேத்தன் சக்காரியாவின் ஓவரில் மட்டும் இரண்டு சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை எடுத்தார். 49 ரன்களை எடுத்திருந்தவர் சக்காரியாவின் பந்திலேயே அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த தியாகி.. பஞ்சாப் அணி அதிர்ச்சி தோல்வி! #IPL2021

கே.எல்.ராகுல், மயங்க் கூட்டணியே ஏறக்குறைய ஆட்டத்தை முடித்துவிட்டனர். இதனால் பஞ்சாப் அணி எளிதில் வென்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால், கடைசி ஓவரில் ட்விஸ்ட் நடந்தது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதிரடி வீரர்களான பூரனும் மார்க்ரமும் க்ரீஸில் இருந்தனர். ஆனாலும் பஞ்சாப் அதிர்ச்சிகரமாக தோற்றிருந்தது. இந்த ஓவரை வீசிய கார்த்திக் தியாகி அத்தனை பந்துகளையும் யார்க்கராக வீச முயன்றிருப்பார். இதை பஞ்சாப் பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. பூரன், ஹூடா இருவரும் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆக, கடைசி ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

19 ஓவர்களாக போட்டி பஞ்சாப் அணியின் கையிலேயே இருந்தது. கடைசி ஓவரில் தியாகி வீசிய அந்த யார்க்கர்கள் போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பி திக்திக் வெற்றியை பெற்று கொடுத்தது.

banner

Related Stories

Related Stories