விளையாட்டு

அந்த 4 வீரர்களின் சொதப்பல் - வருணின் கூக்ளிகள்...பெங்களூர் அணி எப்படி தோற்றது?

பெங்களூர் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றது.

அந்த 4 வீரர்களின் சொதப்பல் - வருணின் கூக்ளிகள்...பெங்களூர் அணி எப்படி தோற்றது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது.

இது பெங்களூர் அணியின் கேப்டன் கோலியின் 200 வது போட்டி. இதற்கு முன் வேறெந்த வீரரு ஐ.பி.எல் இல் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் ஆடியதில்லை. மேலும், அடுத்த சீசனிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என கோலி அறிவித்த பிறகு ஆடும் முதல் போட்டி வேறு என்பதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு பெங்களூர் அணி ஆடியிருக்கவில்லை. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 19 ஓவர்களில் 92 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி இந்த ஸ்கோரை எளிமையாக சேஸ் செய்துவிட்டது.

அக்டோபர் 21, 2020. கடந்த ஐ.பி.எல் சீசனில் இதே அபுதாபி மைதானத்தில் பெங்களூருவும் கொல்கத்தாவும் மோதிய போட்டியில் கொல்கத்தா முதலில் பேட் செய்து 84 ரன்களுக்கு சுருண்டிருக்கும். பெங்களூர் எளிதாக ஸ்கோரை சேஸ் செய்திருக்கும். அந்த போட்டியின் கேசட்டை அப்படியே திருப்பி போட்டு பார்த்தது போல இந்த போட்டி இருந்தது.

அந்த 4 வீரர்களின் சொதப்பல் - வருணின் கூக்ளிகள்...பெங்களூர் அணி எப்படி தோற்றது?

பெங்களூர் அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களின் சொதப்பலே. படிக்கல், கோலி, டீவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் இந்த நால்வருமே அந்த அணியின் முதுகெலும்புகள். இந்த போட்டியில் இந்த நால்வருமே ஒன்றாக சேர்ந்து சொதப்பியிருந்தனர். பிரஷித் கிருஷ்ணாவின் பந்தில் கோலி நல்ல ட்ரைவ் ஆடி பவுண்டரி அடித்திருப்பார். சிறப்பான டச்சில் இருக்கிறாரே இந்த போட்டியில் வெளுக்க போகிறார் போல என நினைக்கும் போதே அடுத்த பந்திலேயே ஒரு ஆஃப் கட்டரில் lbw ஆகி 5 ரன்னில் அவுட் ஆனார்.

இன்னொரு ஓப்பனரான தேவ்தத் படிக்கல் கொஞ்சம் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தார். பவர்ப்ளேயின் கடைசி பந்தில் ஃபெர்குசன் பந்தில் அரைகுறையாக ஒரு ஷாட் ஆட முயற்சி செய்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி 22 ரன்னில் வெளியேறினார்.

டீவில்லியர்ஸ். பெங்களூருவை பல இக்கட்டான சூழல்களிலிலிருந்து காத்த அசகாய சூரர். ஆனால், இந்த போட்டியில் அவருமே டக் அவுட் ஆகி சென்றார். முதல் பந்திலேதே பயங்கர வேகத்தில் ரஸல் அப்படியொரு யார்க்கரை வீசுவார் என டீவில்லியர்ஸ் எதிர்பார்க்கவில்லை. போல்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அந்த 4 வீரர்களின் சொதப்பல் - வருணின் கூக்ளிகள்...பெங்களூர் அணி எப்படி தோற்றது?

கொஞ்சம் நேரம் நின்ற மேக்ஸ்வெல்லும் வருண் சக்கரவர்த்தியின் கூக்ளியில் கண்ணை மூடிக் கொண்டு ஷாட் ஆட முயற்சி செய்து போல்டை பறிப்கொடுத்திருந்தார். அவர் அவுட் ஆனதற்கு முந்தைய 5 ஓவர்களில் பெங்களூர் ஒரு பவுண்டரியை கூட அடித்திருக்கவில்லை. மேக்ஸ்வெல்லும் 16 பந்துகளாக பவுண்டரி அடித்திருக்கவில்லை. அந்த விரக்தியில்தான் அவ்வளவு மோசமான ஒரு ஷாட்டை முயன்று மேக்ஸ்வெல் அவுட் ஆனார்.

இந்த நான்கு பேருமே சொற்ப ரன்களில் அவுட் ஆனதுமே போட்டி கொல்கத்தா பக்கம் முழுமையாக சென்றுவிட்டது.

கொல்கத்தா சார்பில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியும் ரஸலும் அட்டகாசமாக பந்து வீசியிருந்தனர். வருண் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வருணே வீழ்த்தியிருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அபுதாபி மைதானத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் சுழன்றடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ரஸல் 3 ஓவர்களை வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டீவில்லியர்ஸை முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கியிருந்தது ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்த 4 வீரர்களின் சொதப்பல் - வருணின் கூக்ளிகள்...பெங்களூர் அணி எப்படி தோற்றது?

ஒட்டுமொத்தமாகவே கொல்கத்தாவின் பௌலிங் அட்டகாசமாகவே இருந்தது. ஃபெர்குசன் படிக்கலின் விக்கெட்டையும் பிரஷித் கிருஷ்ணா கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். எந்த பௌலரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் கொடுக்கவே இல்லை.

93 என்கிற எளிமையான டார்கெட்டை நோக்கி கொல்கத்தா பேட்டிங்கை தொடங்கியது. சுப்மன் கில்லும் வெங்கடேஷ் ஐயரும் ஓப்பனர்களாக இறங்கினர். பெங்களூர் பௌலர்களால் இவர்களுக்கு பெரிதாக எந்த சிரமத்தையும் கொடுக்க முடியவில்லை. அழுத்தமே இல்லாததால் வலைப்பயிற்சியில் ஆடுவதை போல இலகுவாக ஆடியிருந்தனர். சுப்மன் கில் 48 ரன்களில் சஹால் பந்தில் அவுட் ஆக, வெங்கடேஷ் 41 ரன்களில் நாட் அவுட் ஆக இருந்தார். 10 ஓவர்களிலேயே போட்டியை வெற்றிகரமாக முடித்தனர். கொல்கத்தா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதல் பாதி தொடரில் 8 போட்டிகளில் 2 இல் மட்டுமே வென்றிருந்த கொல்கத்தா, இரண்டாம் பாதியில் முதல் போட்டியையே இவ்வளவு சிறப்பாக வென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. கொல்கத்தாவின் எழுச்சி தொடருமா?

banner

Related Stories

Related Stories