விளையாட்டு

கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி.. காரணம் என்ன?

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, இப்போது டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய அணியின் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, இப்போது டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது, வரவிருக்கும் உலகக்கோப்பை டி20 தொடர் வரை கோலியே கேப்டனாக நீடிப்பார் என்றும் அதன்பிறகே கேப்டன்சி மாற்றம் நடைபெறும் எனவும் கோலியே அறிவித்துள்ளார்.

காரணம் என்ன?

நீண்ட காலமாக மூன்றுவிதமான ஃபார்மட்களிலும் ஆடி வருவதோடு கேப்டன்சியும் செய்து வருவதால் அதிக வேலைப்பளு உருவாகியுள்ளது. அதை சமாளித்து பேட்டிங்கில் கவனம் செலுத்தவே டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி கூறியுள்ளார்.

பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என கோலி கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருக்கிறது. 30 வயதிற்கு மேல் எல்லா பேட்ஸ்மேன்களுமே எதிர்கொள்ளும் பிரச்சனை இது. இந்த காலக்கட்டத்தில் அவர்களின் ஃபார்மில் வீழ்ச்சி ஏற்படும். டெக்னிக்கலாக நிறைய மாற்றங்கள் செய்து மீண்டு வர வேண்டியிருக்கும். கோலியும் இந்த காலக்கட்டத்தில்தான் இருக்கிறார். ரன் மெஷினாக இருந்த கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் ஒரு சதம் கூட அடித்திருக்கவில்லை. கோலியின் பேட்டிங் ஃபார்மில் பிரச்சனை எழுந்திருக்கிறது. இதை கோலியும் உணர்ந்திருக்கிறார். அதனாலயே கேப்டன்சி கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்பதால் அதை விடுத்து பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் முடிவை எடுத்திருக்கிறார்.

கோலி இப்படி ஒரு முடிவை அறிவிக்கப்போகிறார் என சில நாட்களுக்கு முன்பே ஒரு பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அப்போது பிசிசிஐ சார்பில் அந்த செய்தி வதந்தி என கூறப்பட்டது. ஆனால், நான்கைந்து நாட்களிலேயே அந்த செய்தி உண்மையாகியுள்ளது.

அடுத்த கேப்டன் யார்?

டி20 உலகக்கோப்பை வரை கோலிதான் கேப்டனாக இருக்கப்போகிறார் என்பதால் அது வரை புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பு வராது என்றே தெரிகிறது. ஆனால், புதிய கேப்டன் யாராக இருக்க முடியும் என எளிதில் யூகித்து விட முடியும். அது ரோஹித் சர்மா.

கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை ரோஹித் சர்மாவுடனும் ஆலோசித்தே எடுத்ததாக கோலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவே ரோஹித்தான் இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் என்கிற எய்தியை சொல்லாமல் சொல்கிறது.

ஆனால், ரோஹித் சர்மாவுக்குமே வயது 34 ஆகிறது. அவருமே தனது பேட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். எனவே நீண்ட கால அடிப்படையிலான கேப்டன்சி வாய்ப்பாக ரிஷப் பண்ட் அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது.

டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து மாபெரும் வெற்றியொடு கோலி கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories