விளையாட்டு

குட்டையை குழப்பிய இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு: முதலில் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி- போட்டி ரத்து ஏன்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

குட்டையை குழப்பிய இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு: முதலில் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி- போட்டி ரத்து ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்திய முகாமில் கொரோனா புகுந்து விளையாடியதின் விளைவு. நல்ல விஷயம். வீரர்களின் உடல் நலனை தவிர வேறெதுவும் முக்கியமில்லை. ஆனால், இந்த ரத்து அறிவிப்புக்கு பின்னால் ஏன் அத்தனை குழப்பங்கள்? உருட்டல் பிறட்டல்கள்?

இந்திய வீரர்கள் அத்தனை பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என காலையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. நேரம் நெருங்க நெருங்க வேறுவிதமான தகவல்கள் வந்தன.

வீரர்களின் நலனை கருதி இந்தியா இந்தப் போட்டியிலிருந்து பின் வாங்கவேண்டும் என பிசிசிஐ-ஐ இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்பந்தித்ததாகவும், அப்படி இந்தியா பின்வாங்கும்பட்சத்தில் இந்த போட்டியை இங்கிலாந்து வென்றதாக கருத்தில் கொள்ளப்பட்டு தொடரை 2-2 என சமநிலையில் முடித்துவிடுவார்களாம். கோலி இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

போட்டி நடைபெற வேண்டும் என்பதில் கடைசி வரை கோலியும் ரவிசாஸ்திரியும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அடுத்த செக்கை வைத்தது. போட்டி நடைபெற்றே தீர வேண்டுமெனில் இரண்டு நாட்கள் கழித்துதான் நடத்த முடியும் என கூறுகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி ஐ.பி.எல் தொடங்குவதால் இந்த இரண்டு நாள் தாமதம் இந்திய வீரர்களுக்கு செட் ஆகாது. அத்தனை பேரும் துபாய்க்கு பயணப்பட வேண்டியிருக்கிறது.

குட்டையை குழப்பிய இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு: முதலில் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி- போட்டி ரத்து ஏன்?

இந்த போட்டியை விட ஐ.பி.எல்-க்கே பிசிசிஐ முன்னுரிமை கொடுக்க முயன்றதும் ECB க்கு வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆனால், பிசிசிஐ ஐ.பி.எல்-லுக்கு முன்னுரிமை கொடுப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஐ.பி.எல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தொடர். இந்த மான்செஸ்டர் டெஸ்ட்டை விட பல மடங்கு வணிகம் உலவும் தொடர். அதனால் பிசிசிஐ இந்த போட்டியை விட ஐ.பி.எல் லுக்கு முன்னுரிமை கொடுத்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை. அது தவறுமில்லை.

இங்கிலாந்துக்கு இந்த போட்டியை ஆடி வெல்வதில் துளி கூட விருப்பம் இல்லை என்பது செய்திகள் மூலம் அறிய முடிந்தது. முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்க, கடைசியில் ஒரு வழியாக போட்டியை ரத்து செய்துவிடுவோம் என முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

சில நிமிடங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டிடம் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிலும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் தங்களின் வேலையை காட்டியிருந்தது. முதலில் வெளியான அறிவிப்பில் 'forfeited' எனும் வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதாவது இந்தியா போட்டியிலிருந்து பின்வாங்குவதாகவும், இங்கிலாந்து இந்த போட்டியை வெல்வதாகவும் அர்த்தம்படும் வகையிலான வார்த்தை பிரயோகம் அது. கொஞ்ச நேரத்திலேயே அந்த வார்த்தை நீக்கப்பட்டு நிலைமையை எடுத்துக்கூறி போட்டி ரத்து பற்றி மட்டும் கூறி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

பிசிசிஐ-ECB விவாதத்தின் போது இந்திய வீரர்கள் சிலர் கொரோனா விதிமுறைகளை மீறியதாலேயே இப்போது பிரச்சனை என ஏற்பட்டிருக்கிறது என ECB கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது. ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால், அதை காரணம்காட்டி மொத்தமாக மொட்டையடிக்க நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

குட்டையை குழப்பிய இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு: முதலில் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி- போட்டி ரத்து ஏன்?

ஆடாமல் ஜெயிக்க வேண்டும் என்பதே இங்கிலாந்தின் முழு விருப்பமாக இருந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ஆட சென்றிருந்தது. அப்போதும் இப்படித்தான் கொரோனா வேலையை காட்டியிருந்தது. ஒரு ஓடிஐ போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியில் ஒரேடியாக ஏழெட்டு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவதற்கு வீரர்களே இல்லாமல் தடுமாறியது.

இங்கிலாந்தின் லாஜிக்படி பார்த்தால் இங்கிலாந்து அந்த போட்டியை 'forfeited' செய்து பாகிஸ்தானுக்கு வெற்றியை வாரி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. இரவோடு இரவாக கவுண்டி போட்டியிலிருந்து வீரர்களை அள்ளிக்கொண்டு வந்து பென்ஸ்டோக்ஸை திடீர் கேப்டனாக்கி அந்த தொடரை வெற்றிகரமாக ஆடி முடித்திருந்தார்கள். அந்த ஒரே போட்டியில் ஐந்தாறு வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமாகியிருந்தனர்.

இங்கிலாந்து உள்ளூர் அணி அதனால் அப்படி வீரர்களை இரவோடு இரவாக அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், இந்தியா இப்போது அப்படி செய்ய முடியாதே. அத்தனை பேருமே தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழலில்லவா இருக்கின்றனர். நியாயமாக பார்த்தால் எந்த குழப்பமும் இல்லாமல் அப்படியே ரத்து செய்திருக்க வேண்டும் அல்லது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் நடுவில் நின்று கபடி ஆட்டம் ஆடி அத்தனை பேரையும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் குழப்பியிருக்கிறது.

குட்டையை குழப்பிய இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு: முதலில் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி- போட்டி ரத்து ஏன்?

இங்கிலாந்து ஏன் இப்படி பதற வேண்டும்?

இந்திய அணியின் ஆதிக்கம் இங்கிலாந்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையுமே பதற வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. டிசம்பர்-ஜனவரியில் நடந்திருந்த ஆஸ்திரேலியா சீரிஸிலுமே முடிவை தீர்மானிக்க போகும் கடைசி காபா டெஸ்ட்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவும் இப்படித்தான் குட்டையை குழப்பியிருந்தது.

கொரோனா விதிமுறைகள் தீவிரமாக இருப்பதால் இந்திய வீரர்கள் காபா டெஸ்ட்டை புறக்கணிக்கப் போவதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் காபா எங்கள் கோட்டை. நாங்கள் ஆடியே தீருவோம். இந்தியா வேண்டுமென்றால் பின்வாங்கிக் கொள்ளட்டும் என கம்பு சுற்றியிருந்தார்கள்.

கொரோனா விதிமுறைகள் கடுமையாக இருந்ததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்தது உண்மைதான். இந்திய வீரர்களை ரூமை விட்டு வெளியே வராண்டாவில் கூட நடமாட விடவில்லை. இந்திய வீரர்கள் செல்லும் லிஃப்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் வர மறுக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் வெளியாகியிருந்தது. இந்திய அணியை மனரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இது இருந்தது. அப்போதும் கூட இந்தப் போட்டியை ஆடமாட்டோம் என இந்திய வீரர்கள் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆஸ்திரேலிய மீடியாக்களே சீன் க்ரியேட் செய்துகொண்டன. அதற்கேற்றவாறு ஆஸியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் ரியாக்ட் செய்து கொண்டிருந்தனர்.

இறுதியில் காபாவில் இந்தியா களமிறங்கி செய்த சம்பவத்தை விளக்க வேண்டிய தேவையில்லை. அது வரலாறு! இந்த உதறல்களே கிரிக்கெட்டில் இது இந்திய கொடி உயரே பறக்கும் காலம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்குகிறது.

banner

Related Stories

Related Stories