விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்றார் போராட்டத்தின் மறு உருவமான பவினா படேல்..!!

பவினா தோற்றிருந்தாலும் டேபிள் டென்னிஸில் வீழ்த்தவே முடியாத நாடாக கருதப்படும் சீனாவை போராடினால் யார் வேண்டுமானாலும் வீழ்த்தலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்றார் போராட்டத்தின் மறு உருவமான பவினா படேல்..!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை சூ யிங்கிற்கு எதிராக 0-3 தோல்வியை தழுவியிருக்கிறார் இந்திய வீராங்கனை பவினா படேல். தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவினாலும் வெள்ளி வென்றிருக்கிறார். இதுவே ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்தான். இந்தியா சார்பில் பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் தீபா மாலிக் எனும் ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே பதக்கம் வென்றிருக்கிறார். அவருக்கு பிறகு இரண்டாவதாக பதக்கம் வெல்லும் வீராங்கனை பவினா படேலே.

இறுதிப்போட்டியில் பவினா எதிர்கொண்ட சீன வீராங்கனை சூ யிங். உலகளவிலான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர். இது அவருக்கு நான்காவது பாராலிம்பிக்ஸ். தனிநபர்/அணி என இரண்டிலும் சேர்த்து இதுவரை 5 முறை தங்கம் வென்றிருக்கிறார். சூ யிங்கிற்கு எதிராக பவினா இதற்கு முன் 7 முறை மோதியிருந்தார். 7 முறையும் தோல்வியே தழுவியிருந்தார். இந்த பாராலிம்பிக்ஸில் தன்னுடைய முதல் போட்டியிலேயே சூ யிங்கை தான் எதிர்கொண்டிருந்தார் பவினா. அந்த போட்டியில் 3-0 என படுதோல்வி அடைந்திருந்தார். ஆனால் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்தார். பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 க்கு தகுதிப்பெற்றிருந்தார். அந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரேசில் வீராங்கனையுடன் கடுமையாக போராடி வென்றிருந்தார். காலிறுதியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் செர்பிய வீராங்கனையுடன் மோதியிருந்தார். இவர் கடந்த ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருந்தவர். ஆனால், அவரை பவினா ரொம்பவே எளிமையாக வீழ்த்தியிருந்தார். அதன் மூலம் அரையிறுதிக்கும் தகுதிப்பெற்றார்.

அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற நான்கு வீராங்கனைகளில் பவினாவை தவிர மீதமிருந்த மூவரும் சீனர்கள். டேபிள் டென்னிஸ் தங்களுக்கான விளையாட்டு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வந்திருந்தனர். பவினாவிற்கு ஷாங் மியாவுடன் போட்டி. ஷாங் மியா உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர். மேலும் இதற்கு முன் 11 முறை பவினா ஷாங் மியாவை எதிர்த்து ஆடியிருக்கிறார். 11 முறையும் தோல்வியே தழுவியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ரெக்கார்டோடு களமிறங்கிய பவினா கொடுத்தது அதிர்ச்சி வைத்தியம். ஷாங் மியாவை 3-2 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் முதல் கேமை தோற்றிருந்தார். ஆனால், அதன்பிறகு மீண்டு வந்து தொடர்ச்சியாக இரண்டு கேம்களை வென்று இறுதி கேமையும் வென்று அரையிறுதி போட்டியை வென்றார். இது மிகப்பெரிய அப்செட்டாக பார்க்கப்பட்டது. ஒலிம்பிக்ஸ் மாதிரியா உலக அரங்கில் இந்தியர் ஓருவர் சீனரை வீழ்த்துவது இதற்கு முன் அரங்கேறியிராத சம்பவம்.

இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. முதல் போட்டியில் தனக்கு படுதோல்வியை பரிசாக அளித்த சூ யிங்கிற்கு எதிராக பவினா களமிறங்கினார். அரையிறுதியில் கொடுத்த அப்செட்டை போல இங்கேயும் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் மூன்று கேம்களையுமே தோற்று 3-0 என வெள்ளிப்பதக்கத்தை பெற்றிருக்கிறார்.

இரண்டாவது கேமில் பவினா தொடர்ச்சியாக நான்கு புள்ளிகளை எடுத்து கொஞ்சம் கம்பேக் கொடுப்பது போல தோன்றியது.ஆனால், தொடரவில்லை. சூ யிங் டேபிளின் இரு ஓரங்களிலும் அடித்து பவினாவை பேக் ஹேண்ட் ஃபோர் ஹேண்ட் என மாற்றி மாற்றி ஆட வைத்தார். இதனால் பல சமயங்களில் டைமிங் மிஸ் ஆனது. பவினா தோற்றிருந்தாலும் டேபிள் டென்னிஸில் வீழ்த்தவே முடியாத நாடாக கருதப்படும் சீனாவை போராடினால் யார் வேண்டுமானாலும் வீழ்த்தலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். இதுவே தங்கப்பதக்கத்திற்கு சமம்!!

banner

Related Stories

Related Stories