விளையாட்டு

லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்தியா... கோலியின் மைண்ட் கேமுக்கு கிடைத்த வெற்றி?! #IndvsEng

இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தாங்க முடியாமல் தோற்றுப்போனது இங்கிலாந்து!

லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்தியா... கோலியின் மைண்ட் கேமுக்கு கிடைத்த வெற்றி?! #IndvsEng
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்திய அணி. கபில்தேவ், தோனி ஆகியோரை தொடர்ந்து லார்ட்ஸில் போட்டியை வென்ற கேப்டன் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார் கோலி.

1932 இல் இருந்தே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியையே லார்ட்ஸில்தான் ஆடியிருந்தது. ஆனால், அந்தப் போட்டியை இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. இதன்பிறகு, ஒவ்வொரு முறை இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்ற போதும் லார்ட்ஸில் ஒரு போட்டியில் கட்டாயம் ஆடும். ஆனால், வெற்றி மட்டும் கிடைக்காமலே இருந்தது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு கழித்து 1986-லிலேயே இந்திய அணி முதல் முறையாக லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியை வென்றது.

அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி 2014 இல் லார்ட்ஸ் போட்டியை வென்றது. ஹோம் ஆஃப் கிரிக்கெட் என்றழைக்கப்படும் லார்ட்ஸில் ஒரு போட்டியை வெல்வது எப்போதுமே ஸ்பெஷல்தான். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த சாதனையை செய்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.

90 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸில் இந்திய அணி பெறும் மூன்றாவது வெற்றி இது. நான்காம் நாள் முடிவில் இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் அவுட் ஆகியிருந்ததால் போட்டி இங்கிலாந்து பக்கம் செல்வதைப் போல தோன்றியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக பும்ராவும் ஷமியும் கூட்டணி போட்டு 89 ரன்களை எடுத்தனர். ஷமி அரைசதத்தை கடந்திருந்தார். இருவருமே இங்கிலாந்தின் பௌலிங்கை வெளுத்தெடுத்தனர். நாட் அவுட் ஆக இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே பிடித்துவிட்டு இந்திய அணி டிக்ளேர் செய்தது.

லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்தியா... கோலியின் மைண்ட் கேமுக்கு கிடைத்த வெற்றி?! #IndvsEng

முதல் செஷன் முடிந்து 40 நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு வந்து வெறும் இரண்டு ஓவர்கள் மட்டும் எதற்கு பேட்டிங் ஆட வேண்டும்??? இடைவேளைக்கு முன்பே டிக்ளேர் செய்திருக்கலாமே? அப்படி டிக்ளேர் செய்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு சேஸிங்கை ப்ளான் செய்ய 40 நிமிடங்கள் கிடைத்திருக்கும். எப்படி இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும்?? அட்டாக்கா டிஃபன்ஸா என்பதையெல்லாம் தீர்மானிக்க அந்த 40 நிமிடங்கள் ரொம்பவே போதுமானதாக இருந்திருக்கும். அது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்திருக்கும். அந்த சமயத்தில் டிக்ளேர் செய்யாமல் விட்டதால் இங்கிலாந்துக்கு ஒன்றுமே புரியாத நிலையே இருந்தது. இந்தியா தொடர்ந்து கொஞ்ச நேரம் பேட்டிங் ஆடும் என்கிற மனநிலையுடனே கேப்டன் ஜோ ரூட் உட்பட மொத்த அணியும் களமிறங்கியது.

ஆனால், கோலி சர்ப்ரைஸ் கொடுத்தார். வெறும் இரண்டே ஓவர்களில் டிக்ளேர் செய்தார். இப்போது இங்கிலாந்துக்கு திட்டமிடலுக்கெல்லாம் நேரமே இல்லை. பத்து நிமிடங்களுக்கும் குறைவான இன்னிங்ஸ் ப்ரேக் மட்டுமே இருந்தது. அத்தனை வீரர்களும் ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று செட்டில் ஆகவே அந்த நேரம் காணாது. சில நிமிடங்களில் இங்கிலாந்து ஓப்பனர்கள் களமிறங்கியாயிற்று. ஓப்பனர்கள் சிப்லே, பர்ன்ஸ் முதல் இரண்டு ஓவர்களில் நடப்பதே அறியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் விக்கெட்டை விட்டனர். இது கோலியின் மைண்ட் கேமுக்கு கிடைத்த வெற்றியாக இருந்தது.

272 ரன்களை நோக்கி இங்கிலாந்து அணி சேஸிங் செய்த போது ஆபத்தான பேட்ஸ்மேனாக இருந்த ஜோ ரூட்டையும் பும்ரா கச்சிதமாக வீழ்த்தினார். அவ்வளவுதான் போட்டி மொத்தமும் இந்தியா பக்கம் திரும்பிவிட்டது. பட்லர் மட்டும் ஒரு எண்ட்டில் நிலைத்து நின்று ட்ராவுக்கு முயற்சித்திருந்தாலும் அவராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியை தாண்டி இந்த டெஸ்ட் பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலாக அமைந்திருந்ததுதான் கூடுதல் ஸ்பெஷல். ரோஹித் ஒயிட்பால் ஹேங் ஓவரோடு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆனால், தன்னால் ஒரு பியூரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட முடியும் என்பதை ரோஹித் முதல் இன்னிங்ஸில் நிரூபித்துக் காண்பித்தார். ஏறக்குறைய புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இதுதான் கடைசி சீரிஸாக இருக்கும் என முடிவுரையே எழுதப்பட்டிருந்தது. அவர்களின் சமீபத்திய ரெக்கார்டுகளும் அதற்கேற்றாற்போலவே இருந்தது. ஆனால், அவர்கள் இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய பொறுப்பான ஆட்டம் அதி அட்டகாசம்.

விக்கெட் விடாமல் அவர்கள் தாக்குப்பிடித்த இரண்டு செஷன்களே இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. கோலியின் கேப்டன்சி மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன. ஆனால், இந்த போட்டியை வென்று கொடுத்ததில் அவரின் கேப்டன்சிக்கும் பெரிய பங்கிருக்கிறது. இந்த டெஸ்ட்டில் அவர் வைத்த ஃபீல்ட் செட்டப்கள் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. டிக்ளேர் முடிவில் ஒரு மைண்ட் கேமை ஆடியிருந்தார். பௌலர்களை நன்றாக ரொட்டேட் செய்திருந்தார். இப்படியாக கேப்டன் கோலி இந்த ஆட்டத்தில் பயங்கரமாக ஜொலித்திருந்தார்

எப்போதும் இந்தியாவின் டெய்ல் எண்டர்கள் பேட்டிங்கில் பங்களிப்பை அளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. இன்றைக்கு போட்டியை வெல்ல காரணமாக அமைந்ததே பும்ராவும் ஷமியும்தான். ஹானர்ஸ் போர்டில் பெயரை பதிக்கவில்லை அது மட்டும்தான் ஒரே குறை! வெற்றியை தாண்டியும் இந்த டெஸ்ட் இப்படியான பதிலடிகளுக்காகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories