விளையாட்டு

பொளந்துகட்டிய பிரித்வி... கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய தவான்... இலங்கையை எளிதில் வீழ்த்திய இந்தியா!

ஃபார்ம் அவுட் ஆகி அதிக விமர்சனத்துக்குள்ளான பிரித்திவி ஷா, இந்த போட்டியில் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

பொளந்துகட்டிய பிரித்வி... கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய தவான்... இலங்கையை எளிதில் வீழ்த்திய இந்தியா!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே இந்திய அணி எளிதில் வென்றிருக்கிறது. இந்தியாவின் சீனியர்களை உள்ளடக்கிய அணி இங்கிலாந்து தொடருக்கு சென்றிருக்க, தவான் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இன்னொரு இந்திய அணி இலங்கைக்கு சென்றிருக்கிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் பனுக்காவும் ஓப்பனர்களாக இறங்கினர். இந்திய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமாரும், தீபக் சஹாரும் முதல் ஸ்பெல்லை வீசினர். அவிஷ்கா பனுகா ஜோடி தொடக்கத்தில் சிறப்பாகவே ஆடியது. அவிஷ்கா கொஞ்சம் பவுண்டரிகள் அடிக்க, பனுகா நின்று நிதானமாக ஆடினார்.

முதல் 9 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் இருவரும் எவ்வளவு முயன்றும் இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. தவான் பௌலிங் மாற்றம் செய்ய, சஹால் வீசிய முதல் பந்திலேயே அவிஷ்கா மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒன் டவுனில் வந்த ராஜபக்ஷாவும் கொஞ்சம் சிறப்பாகவே ஆடினார். வேகமாக பவுண்டரிக்களை அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். ஆனால், குல்தீப் யாதவ் இவருக்கு முடிவு கட்டினார். ஒரே ஓவரில் பனுகாவையும் ராஜபக்ஷாவையும் வீழ்த்தினார்.

பொளந்துகட்டிய பிரித்வி... கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய தவான்... இலங்கையை எளிதில் வீழ்த்திய இந்தியா!
Admin

இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கும் குல்தீப் யாதவ் சிறப்பாக வீசி கவனத்தை ஈர்த்தார். சஹால், குல்தீப், க்ரூணால் என இந்திய ஸ்பின்னர்கள் டைட்டாக வீச இலங்கை கொஞ்சம் திணற ஆரம்பித்தது. இலங்கையின் எந்த பேட்ஸ்மேனுமே நின்று ஆட வேண்டும் என்பதை மனதில் வைக்காமல் தேவையில்லாமல் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீக்கிரமே அவுட் ஆகினர். எந்த பேட்ஸ்மேனும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடவே இல்லை. அஸ்லாங்காவும், கேப்டன் சனாகாவும் கொஞ்சம் நேரம் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் போட்டிருந்தாலும் அவர்களும் பாதியிலேயே அவுட் ஆகி ஏமாற்றினர். கடைசி நேரத்தில் கருணாரத்னே மட்டும் கொஞ்சம் அதிரடி காட்ட 262 ரன்களை எட்டியது இலங்கை அணி. இந்திய அணிக்கு டார்கெட் 263.

இந்திய அணியின் சார்பில் தவானும் பிரித்திவி ஷாவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தவான் பொறுமையாக ஆட, பிரித்திவி ஷா இலங்கை பௌலர்களை வெளுத்தெடுத்தார். அத்தனை பந்துகளையும் ட்ரைவ் ஆடி பவுண்டரியாக்கினார். 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார். பிரித்திவியின் அதிரடியால் இந்திய அணியின் ரன்ரேட் எகிறியது. இதை அப்படியே இறங்கவிடாமல் பார்த்துக் கொண்டார் இஷான் கிஷன்.

இஷான் கிஷனுக்கு இதுதான் முதல் போட்டி. ஆனால், இலங்கையின் ஸ்பின்னர்களை எந்த அழுத்தமுமின்றி இறங்கி வந்து பெரிய ஷாட்களாக அடித்து பிரம்மிப்பூட்டினார். முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்தவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இவ்வளவு நேரம் ஒரு எண்ட்டில் பொறுமையாக நின்று ஆடிய தவான், இப்போது தனது பாணியிலான ஆட்டத்தை ஆட தொடங்கினார். பிரித்திவி மற்றும் கிஷன் போட்டுக் கொடுத்த அடித்தளத்தை தவான் சரியாக பயன்படுத்தி கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடினார்.

பொளந்துகட்டிய பிரித்வி... கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய தவான்... இலங்கையை எளிதில் வீழ்த்திய இந்தியா!
Admin

மனீஷ் பாண்டேவும் சூரியகுமார் யாதவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்திருந்தார். ஃபார்ம் அவுட் ஆகி அதிக விமர்சனத்துக்குள்ளான பிரித்திவி ஷா, இந்த போட்டியில் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை வென்று தொடரை வெல்ல இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories