விளையாட்டு

சென்னையின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான ராஜஸ்தான்: 2வது இடத்துக்கு முன்னேறிய சி.எஸ்.கே! IPL2021

இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் கடந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கையில் இங்கேயும் அவர் சொதப்பவே செய்தார்.

சென்னையின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான ராஜஸ்தான்: 2வது இடத்துக்கு முன்னேறிய சி.எஸ்.கே! IPL2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரண்டு அணிகளும் அதிரடியான ஃபார்மில் இருந்ததால் சென்னை அணி அவர்களை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால், சென்னை அணி அந்த இரண்டு அணிகளையுமே சுலபமாக வீழ்த்தியிருக்கிறது. கடந்த போட்டியில் பஞ்சாப்பை 107 ரன்களில் சுருட்டி எளிதில் வென்ற சென்னை அணி நேற்று ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸை வென்றார். சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. சென்னை அணியில் தோனி எந்த மாற்றத்தையும் செய்திருக்கவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ப்ளேயிங் லெவனோடே களமிறங்கினார் தோனி.

சென்னை அணியின் சார்பில், ருத்ராஜ் கெய்க்வாட்டும் டூப்ளெஸ்சிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் கடந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கையில் இங்கேயும் அவர் சொதப்பவே செய்தார்.

வெறும் 10 ரன்களில் முஷ்டஃபிஷுர் ரஹ்மானின் ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். சக ஓப்பனரான ருத்ராஜ் கெய்க்வாட் சொதப்பியதால் அவருக்கும் சேர்த்து வைத்து டூப்ளெஸ்சிஸ் அதிரடி காட்டினார். பவர்ப்ளேக்குள்ளாகவே நான்கு பவுண்டரிக்களையும் இரண்டு சிக்சர்களையும் அடித்து அசத்திய டூப்ளெஸ்சிஸ் 33 ரன்களை சேர்த்தார். டூப்ளெஸ்சிஸ் நன்றாக தொடங்கியிருந்தாலும் அவரால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. 6 ஆவது ஓவரில் கிறிஸ் மோரிஸின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு, மொயீன் அலியும் சுரேஷ் ரெய்னாவும் கூட்டணி போட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டை தாண்டி பறக்கவிட்டு சிறப்பாக ஆடினர். முஷ்டஃபிஷுர் மற்றும் மோரிஸ் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் சிக்சர்களையும் பவுண்டரிக்களையும் அடித்து மொயீன் அலி அசத்தினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மொயீன் அலி 26 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு உள்ளே வந்த அம்பத்தி ராயுடு மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு குறுகிய நேரத்திலேயே 27 ரன்களை எடுத்தார். ஒரே ஓவரில் அம்பத்தி ராயுடுவும் ரெய்னாவும் அவுட் ஆக அடுத்தடுத்த ஓவர்களில் சென்னை அணியின் ரன்விகிதம் குறைய ஆரம்பித்தது.

17 பந்துகளை சந்தித்த கேப்டன் தோனி 18 ரன்களை மட்டுமே எடுத்து இளம் வீரரான சக்காரியாவின் ஓவரில் அவுட் ஆனார். சாம் கர்ரன் ப்ராவோ ஆகியோர் கடைசிக்கட்டத்தில் அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை எடுத்தது சென்னை அணி.

வான்கடே மைதானத்தில் 200+ ஸ்கோர்கள் எல்லாம் எளிதாக சேஸ் செய்யப்பட்டிருப்பதால் 188 என்ற ஸ்கோர் கொஞ்சம் குறைவு போலவே தெரிந்தது. ஆனால், சென்னை அணியின் ஸ்பின்னர்கள் அட்டகாசமாக வீசி ராஜஸ்தானை சுருட்டினர்.

பவர்ப்ளேயில் தீபக் சஹாருக்கு பந்து ஸ்விங் ஆகாததால் கொஞ்சம் தடுமாறினார். இதை ராஜஸ்தான் அணியின் ஓப்பனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பட்லரும் மனன் வோராவும் கொஞ்சம் அதிரடி காட்டினர். ஆனால், சாம் கர்ரன் தனது மெதுவான பந்துகளால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மனன் வோரா மற்றும் சாம்சனை வெளியேற்றி சென்னை அணிக்கு திருப்புமுனயை ஏற்படுத்திக் கொடுத்தார் சாம் கர்ரன்.

இதன்பிறகு, பட்லர் மட்டுமே கொஞ்சம் நின்று ஆடினார். ஆனால், அவரும் ஜடேஜாவின் ஓவரில் போல்டை பறிகொடுத்து 49 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு ராஜஸ்தான் அணியால் வீழ்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. 3 ஓவர்களை வீசிய மொயீன் அலி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியாக சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்று போட்டிகளில் ஆடியிருக்கும் சென்னை அணி தொடர்ச்சியாக பெற்றிருக்கும் இரண்டாவது வெற்றி இது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.

banner

Related Stories

Related Stories