விளையாட்டு

ஒரே ஸ்பெல்லில் பஞ்சாபை சிதைத்த தீபக் சஹார்... வெற்றிக்கணக்கை தொடங்கிய CSK!

பலமிக்க பஞ்சாப் அணியை ரொம்பவே சுலபமாக வென்றிருக்கிறது சென்னை அணி.

ஒரே ஸ்பெல்லில் பஞ்சாபை சிதைத்த தீபக் சஹார்... வெற்றிக்கணக்கை தொடங்கிய CSK!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சோகத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் உற்சாக மனநிலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. பலமிக்க பஞ்சாப் அணியை ரொம்பவே சுலபமாக வென்றிருக்கிறது சென்னை அணி.

சென்னை அணிக்காக தோனி ஆடும் 200 வது போட்டி இது என்பதால் ரசிகர்கள் கூடுதல் எனர்ஜியுடனேயே இந்த போட்டியை காண்பதற்கு தயாராகியிருந்தனர். மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸை வென்றார். எதிர்பார்த்ததை போலவே டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி.

கடந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்து 220+ ரன்களை அடித்திருந்ததால் பஞ்சாப் அணியும் முதல் பேட்டிங் என்பதை நேர்மறையாகத்தான் பார்த்தது. அந்த அணியின் சார்பில் கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். சென்னை அணியின் சார்பில் தீபக் சஹார் முதல் ஓவரை வீசினார்.

ஒரே ஸ்பெல்லில் பஞ்சாபை சிதைத்த தீபக் சஹார்... வெற்றிக்கணக்கை தொடங்கிய CSK!

டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் தீபக் சஹார் கடுமையாக சொதப்பியிருந்தார். ஆனால், இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். நல்ல வேகத்தில் தீபக் சஹார் வீசிய ஒரு அவுட் ஸ்விங்கரை கணிக்க முடியாமல் ஆஃப் ஸ்டம்பை பறிகொடுத்தார் மயங்க் அகர்வால். ஆரம்பத்திலேயே தடுமாறிய பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகளும் காத்திருந்தது. தீபக் சஹார் வீசிய மூன்றாவது ஓவரில் கெய்ல் தட்டிவிட்டு ஒரு ரன் ஓட முயற்சிக்க, ஜடேஜா அபாரமாக பந்தை பிடித்து டைரக்ட் ஹிட்டாக ராகுலை ரன் அவுட் ஆக்கினார்.

சஹார் வீசிய அடுத்த ஓவரில் கெய்லும் பூரனும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனர். பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து நான்கு ஓவர்களை வீசினார் சஹார். அவர் வீசிய கடைசி ஓவரில் தீபக் ஹீடா கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி மொத்தமாக சொதப்பியது.

50 ரன்களை கூட பஞ்சாப் அணி கடக்க முடியுமா என சந்தேகம் எழுந்த நிலையில், தமிழக வீரரான ஷாருக்கான் நிலைத்து நின்று ஆடி பஞ்சாபின் ஸ்கோரை உயர்த்தினார். நிலைமையை உணர்ந்து பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமல், ஓடி ஓடி ரன்கள் சேர்பத்திலேயே கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்திற்கு பிறகு, பவுண்டரி சிக்சர்களையும் அடித்தார். சிறப்பாக ஆடிய ஷாருக்கான் கடைசி ஓவரில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாருக்கானின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது.

ஒரே ஸ்பெல்லில் பஞ்சாபை சிதைத்த தீபக் சஹார்... வெற்றிக்கணக்கை தொடங்கிய CSK!

108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. எளிதான இலக்காக இருந்தாலும் சென்னை அணி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறவே செய்தது. முதல் 3 ஓவர்களை கொஞ்சம் தட்டுத்தடுமாறியே எதிர்கொண்டது. ஓப்பனரான ருத்ராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு, நம்பர் 3 இல் மொயீன் அலி களமிறங்கினார். கடந்த போட்டியில் ஆடியதை போன்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மொயீன் அலி. அவர் பவுண்டரிக்களாக அடிக்க தொடங்கியவுடன் தான் சென்னை அணியின் ஸ்கோரும் அதிகரித்தது.

மொயீன் அலிக்கு உறுதுணையாக டூப்ளெஸ்சிஸ் ஆடினார். இருவரும் சிறப்பாக ஆட, டார்கெட்டை வேகமாக நெருங்கியது சென்னை அணி. கடைசிக்கட்டத்தில் மட்டும் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தது. ஆனாலும் டார்கெட்டை எட்டுவதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. 16 வது ஓவரில் சாம் கர்ரன் ஒரு பவுண்டரி அடித்து சென்னையை வெற்றிபெற வைத்தார்.

சென்னை அணி மிக சுலபமாக இந்த போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் தங்கள் கணக்கை தொடங்கிவிட்டது. இந்த போட்டியில் ஆடியதை போன்றே மாஸாக....கெத்தாக.....அடுத்து வரும் போட்டிகளிலும் சென்னை அணி ஆட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories