தமிழ்நாடு

ஒற்றை ஆளாக போராடிய கில்லர் மில்லர்.. 16 கோடிக்கு நியாயம் செய்த மோரிஸ்..!

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஒற்றை ஆளாக போராடிய கில்லர் மில்லர்.. 16 கோடிக்கு நியாயம் செய்த மோரிஸ்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்! ஏறக்குறைய தோற்றுவிட்ட ஒரு ஆட்டத்தை கடைசிக்கட்ட அதிரடியால் வென்றிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்த போட்டியில் அந்த அணியோடு இணைந்தார். அதேமாதிரி, காயம் காரணமாக ராஜஸ்தான் அணியிலிருந்து ஸ்டோக்ஸ் விலக அவருக்கு பதிலாக மில்லர் அணியில் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோற்றிருந்தது.

டெல்லி அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் பேட்டிங் பெரும் தடுமாற்றத்துடனேயே தொடங்கியது. பவர்ப்ளேக்குள்ளாகவே டாப் ஆர்டரை மொத்தமாக இழந்தது டெல்லி அணி.

ஒற்றை ஆளாக போராடிய கில்லர் மில்லர்.. 16 கோடிக்கு நியாயம் செய்த மோரிஸ்..!

பிரித்திவி ஷா 2, தவான் 9, ரஹானே 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட்டே இந்த மூன்று வீரர்களின் விக்கெட்டையும் வீழ்த்தினார். முக்கிய வீரர்கள் அத்தனை பேரும் சீக்கிரம் ஆட்டமிழந்ததால் அந்த அணி பவர்ப்ளேயில் 36 ரன்களை மட்டுமே எடுத்தது. பவர்ப்ளே முடிந்தபிறகும் டெல்லி அணியின் சரிவு நிற்கவில்லை.

முஷ்டஃபிஷுர் ரஹ்மான் வீசிய 7 வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரரான ஸ்டாய்னிஸ் ஒரு மெதுவான பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் அறிமுக வீரரான லலித் யாதவும் கூட்டணி போட்டனர். க்ரீஸுக்குள் வந்தவுடனேயே கிறிஸ் மோரிஸின் ஓவரில் இரண்டு பவுண்டரிக்களை அடித்து அசத்தினார் லலித் யாதவ்.

தொடர்ந்து, அவர் ரிஷப் பண்ட்டுக்கு உறுதுணையாக ஆடினார். ரிஷப் பண்ட்டும் இன்னொரு முனையில் அதிரடி காட்டினார். லெக் ஸ்பின்னரான ராகுல் திவேதியாவின் ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிக்கள் உட்பட 20 ரன்களஒ சேர்த்தார். கேப்டனாக பொறுப்பாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதத்தை கடந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதே ரன் அவுட் ஆகி சொதப்பினார் பண்ட்.

ஒற்றை ஆளாக போராடிய கில்லர் மில்லர்.. 16 கோடிக்கு நியாயம் செய்த மோரிஸ்..!

பண்ட் அவுட் ஆன கொஞ்ச நேரத்திலேயே செட்டில் ஆகியிருந்த லலித் யாதவ் 21 ரன்களில் வெளியேறினார். கடைசி நேரத்தில் டாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின் ஆகியோர் ஒரு சில பவுண்டரிக்களை அடிக்க டெல்லி அணி கொஞ்சம் கௌரவமாக 147 ரன்களை எடுத்தது. மும்பை வான்கடே மைதானத்தை பொறுத்தவரை ரன்மழை பொழியும் தன்மையுடை பிட்ச்சை கொண்டது.

அதனால், 148 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி சுலபமாக எட்டிவிடும் என்றே தோன்றியது. ஆனால், டெல்லியை போன்றே ராஜஸ்தான் அணியும் சொதப்பவே செய்தது. டெல்லியை போன்றே ராஜஸ்தான் அணியும் பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. மனன் வோரா, பட்லர், சாம்சன் என ராஜஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

கிறிஸ் வோக்ஸ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி 26 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.

ஒற்றை ஆளாக போராடிய கில்லர் மில்லர்.. 16 கோடிக்கு நியாயம் செய்த மோரிஸ்..!

டெச்விட் மில்லர் மட்டுமே பொறுப்பாக நின்று ஆடி அரைசதம் அடித்தார். ஸ்டாய்னிஸின் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளையும் ஆவேஷ் கானின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களையும் அடித்து அதிரடியும் காட்டினார் மில்லர். நன்கு செட்டில் ஆகி 62 ரன்கள் எடுத்திருந்த மில்லர் ஆவேஷ்கானின் ஓவரிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.

ராஜஸ்தான் அணி அவ்வளவுதான் என தோன்றிய நிலையில், கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்டினார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை பறக்கவிட்டு ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். மோரிஸுக்கு 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஆனால், ராஜஸ்தான் அணியின் முதல் வெற்றியை மோரிஸ்தான் சாத்தியமாக்கியிருக்கிறார். இதன் மூலம் அந்த 16 கோடிக்கு நியாயம் செய்துவிட்டார் மோரீஸ்.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories