விளையாட்டு

கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட கொல்கத்தா... த்ரில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்!

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட கொல்கத்தா... த்ரில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணி தங்கள் கைகளுக்குள் இருந்த போட்டியை கடைசி சில ஓவர்களில் தவறவிட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனான இயான் மோர்கன் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில், கேப்டன் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்தக் கூட்டணியை கொல்கத்தா அணி சீக்கிரமே பிரித்தது. தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி வீசிய 2 வது ஓவரின் கடைசி பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி டீகாக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டீகாக் 2 ரன்களில் வெளியேறியவுடன் நம்பர் 3 இல் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் சர்மா ஒரு பக்கம் மெதுவாக ஆடி விக்கெட் விடாமல் உறுதுணையாக நிற்க, சூர்யகுமார் யாதப் அதிரடியில் மிரட்டினார். ஹர்பஜன் சிங்கின் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

பிரஷித் கிருஷ்ணாவின் ஓவரிலும் சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அடித்து மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பேட் கம்மின்ஸின் ஓவரில் 99 மீட்டருக்கு ஒரு இமாலய சிக்சரை அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதே ஷகிப்-அல்-ஹசனின் ஓவரில் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி 56 ரன்களில் வெளியேறினார்.

கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட கொல்கத்தா... த்ரில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்!

சூர்யகுமார் யாதவ் வெளியேறிய பிறகுதான் மும்பை அணி தடுமாற தொடங்கியது. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா நன்கு செட்டில் ஆகி அதிரடி காட்ட தொடங்கும் போது பேட் கம்மின்ஸின் ஓவரில் போல்டை பறிகொடுத்தார். இதன்பிறகு மும்பை அணியால் இந்த வீழ்ச்சியிலிருந்தது மீளவே முடியவில்லை. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான பொல்லார்ட், ஹஎதிக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்றோரும் சொதப்பினர். கொல்கத்தா அணியின் சார்பில் 18 மற்றும் 20 வது ஓவரை வீசிய ரஸல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 152 ரன்களை எடுத்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் நிதிஷ் ராணாவும் ஷுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் விக்கெட் விடாமல் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரியாக்கி மற்ற பந்துகளை கவனமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 9 ஓவர்களில் 72 ரன்களை சேர்த்தது. 33 ரன்னில் ஷுப்மன் கில்லை ராகுல் சஹார் வெளியேற்றினார்.

கொல்கத்தா அணி எளிதில் வென்றுவிடும் என்ற நிலையே இருந்தது. ஆனால், லெக் ஸ்பின்னரான ராகுல் சஹார் தனது 4 ஓவர்களையும் சிறப்பாக வீசி ஆட்டத்தை மாற்றினார். ராகுல் சஹார் தனது 4 ஓவர்களில் ஓவருக்கு ஒரு விக்கெட் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.

கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட கொல்கத்தா... த்ரில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்!

கடைசி 5 ஓவர்களில் அந்த அணி வெற்றிபெற 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் அதிரடி வீரரான ரஸலும் இருந்தனர். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக வீசி கொல்கத்தா அணியை கட்டுப்படுத்தியது. 19 வது ஓவரை வீசிய பும்ரா 4 ரன்களை மட்டுமே கொடுக்க, கொல்கத்தா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரஸலின் விக்கெட்டையும் வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார் போல்ட். மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை தலைகீழாக மாற்றிய ராகுல் சஹாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories