விளையாட்டு

சாம்சனின் சதம் வீண்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பரபர வெற்றியை பதிவு செய்துள்ளது.

சாம்சனின் சதம் வீண்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனான சஞ்சு சாம்சன் டாஸை வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்து நன்றாக தொடங்கியது இந்தக் கூட்டணி. ஆனால், சக்காரியா என்ற ராஜஸ்தான் அணியின் அறிமுக பந்துவீச்சாளர் சிறப்பாக வீசிய 3 வது ஓவரில் மயங்க் அகர்வால் அவுட் ஆகி வெளியேறினார்.

மயங்க் அகர்வாலுக்கு பிறகு யுனிவர்சல் பாஸான கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். கே.எல். ராகுல்-கெய்ல் இந்த கூட்டணி பவர்ப்ளே முடியும் வரை பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் மெதுவாகவே ஆடியது. கொஞ்சம் பந்துகளை பிடித்து தங்களை நிலைப்படுத்திக் கொண்ட பிறகு இவர்கள் அதிரடியை கையில் எடுத்தனர். எல்லா ஓவரிலும் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டது இந்த கூட்டணி.

கெய்ல் 40 ரன்களில் வெளியேறிவிட, கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா சேர்ந்தார். தீபக் ஹூடா வந்த வேகத்திலேயே அதிரடியில் இறங்கினார். இவர்களின் அதிரடியால் சிவம் துபே மற்றும் ஸ்ரேயாஸ் கோபாலின் ஓவர்களில் தலா மூன்று சிக்சர்கள் வந்தது. அரைசதத்தை கடந்த தீபக் ஹூடா கிறிஸ் மோரிஸ் வீசிய 18 வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

சாம்சனின் சதம் வீண்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

தொடர்ந்து, கே.எல்.ராகுல் அதிரடி காட்ட அவர் எப்படியும் சதம் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சக்காரியா வீசிய கடைசி ஓவரில் எல்லைக்கோட்டில் திவேதியாவால் அட்டகாசமாக கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார். 50 பந்துகளை சந்தித்திருந்த கே.எல்.ராகுல் 91 ரன்களை எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 221 ரன்களை எடுத்தது.

222 ரன்களஒ எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ரன்ரேட் 11 க்கு மேல் இருந்ததால் முதல் பந்திலிருந்தே ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முனைந்தனர். ஆனால், முக்கிய பேட்ஸ்மேனான ஸ்டோக்ஸ் முதல் ஓவரிலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று 0 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். இன்னொரு ஓப்பனரான மனன் வோராவும் 12 ரன்னில் சீக்கிரமே வெளியேறினார்.

இதன்பிறகு, கேப்டன் சஞ்சு சாம்சனும் ஜோஸ் பட்லரும் கூட்டணி போட்டனர். மெரிடித்தின் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிக்களை அடித்த பட்லர் 25 ரன்களில் ஜை ரிச்சர்ட்சனின் ஓவரில் போல்டை பறிகொடுத்து வெளியேறினார். முக்கிய விக்கெட்டுகள் சீக்கிரமே விழுந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் ரியான் பராக் மற்றும் சிவம் துபே துணையோடு ஒற்றை ஆளாக நின்று பஞ்சாப் அணியின் பௌலிங்கை வெளுத்தெடுத்தார்.

சாம்சனின் சதம் வீண்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

கருணை காட்டாமல் எல்லா பௌலர்களையும் அடித்து நொறுக்கினார் சஞ்சு சாம்சன். எல்லா ஓவர்களிலும் பவுண்டரி சிக்சர் என 10 ரன்களுக்கு மேல் வந்துகொண்டே இருந்ததால் ரன்ரேட் ராஜஸ்தான் அணியின் கட்டுக்குள்ளேயே இருந்தது. கடைசி 5 ஓவர்களில் 67 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ஓவர்களில் 54 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. சஞ்சு சாம்சனும் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார்.

கேப்டனாக முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் சஞ்சு சாம்சன் தான். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை சஞ்சு சாம்சன் சிக்சராக்க முயன்று தூக்கியடிக்க எல்லைக்கோட்டின் அருகே தீபக் ஹுடாவால் கேட்ச் பிடிக்கப்பட்டார்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்காக கடைசி வரை ஒற்றை ஆளாக நின்று போராடி 119 ரன்களை எடுத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories