விளையாட்டு

6 பந்துகளில் 6 சிக்சர்கள் : கிப்ஸ், யுவராஜ் லிஸ்ட்டில் இணைந்த பொல்லார்ட் - நொந்துபோன தனஞ்செயா! #SLvWI

ஈவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண் என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரும் அடுத்தடுத்த டெலிவரிகளில் அவுட் ஆனதால் ஆட்டத்தில் இலங்கையின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

6 பந்துகளில் 6 சிக்சர்கள் : கிப்ஸ், யுவராஜ் லிஸ்ட்டில் இணைந்த பொல்லார்ட் - நொந்துபோன தனஞ்செயா! #SLvWI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், ஆறு பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டியுள்ளார். இலங்கை ஆஃப் ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக்கினார் பொல்லார்ட். 2007 டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியிருப்பார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் மீண்டும் அதே போன்றதொரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸின் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பௌலிங்கைத் தேர்வு செய்தார். இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் சார்பில் டாப் ஆர்டரில் டிக்வெல்லா மற்றும் நிசாங்கா இருவரும் மட்டுமே கொஞ்ச நேரம் நின்று ஆடினார். டிக்வெல்லா 33 ரன்களிலும் நிசாங்கா 39 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 131 ரன்களை மட்டுமே எடுத்தது.

6 பந்துகளில் 6 சிக்சர்கள் : கிப்ஸ், யுவராஜ் லிஸ்ட்டில் இணைந்த பொல்லார்ட் - நொந்துபோன தனஞ்செயா! #SLvWI

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஓப்பனர்களான ஈவின் லூயிஸ், சிம்மன்ஸ் இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கினர். இலங்கை கேப்டன் மேத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே லூயிஸ் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய இந்தக் கூட்டணி முதல் 3 ஓவர்களிலேயே 48 ரன்களை சேர்த்தது.

இந்நிலையில்தான் அகிலா தனஞ்செயா நான்காவது ஓவரை வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் தனஞ்செயா. ஈவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண் என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரும் அடுத்தடுத்த டெலிவரிகளில் அவுட் ஆனதால் ஆட்டத்தில் இலங்கையின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதே ஸ்பெல்லில் அகிலா தனஞ்செயா வீசிய 6 வது ஓவரில்தான் பொல்லார்ட் ஆறு சிக்சர்களை அடித்து மிரட்டினார்.

அகிலா தனஞ்செயா முதலில் இருந்தே ஸ்டம்ப் லைனில், கொஞ்சம் ஃப்ளைட் செய்து ஃபுல் லெந்தில் வீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்டுக்கு இழுத்து விக்கெட் வீழ்த்திக்கொண்டிருந்தார். பொல்லார்டுக்கு எதிராகவும் இதே டெக்னிக்கை ஃபாலோ செய்து வீசினார்.

ஒரு ஸ்பின் பௌலர் ஃப்ளைட் செய்து ஃபுல் லெந்தில் பொல்லார்டுக்கு வீசினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கண்ணை மூடிக்கொண்டு கிரவுண்டுக்கு வெளியே பந்தை பறக்கவிட்டுவிடுவார். நேற்றும் அதுதான் நடந்தது. பவுலரின் தலைக்கு மேல் லாங்-ஆன், லாங்-ஆஃப், மிட் விக்கெட் என க்ளியர் ஹிட்டாக 6 பந்துகளையும் சிக்சராக்கி மிரட்டினார் பொல்லார்ட்.

5.1 - லாங் ஆன் திசையில் சிக்ஸர்

5.2 - பௌலர் தலைக்கு மேலே பறந்து சைட் ஸ்கிரீனைத் தாக்குகிறது

5.3 - இப்போது லாங் ஆஃப் திசையில்

5.4 - டீப் மிட்வெக்கெட் திசையில் இமாலய சிக்ஸர்

5.5 - மீண்டும் பௌலரின் தலைக்கு மேலே

5.6 - மறுபடியும் டீப் மிட்வெக்கெட் திசையில்

இந்த 6 சிக்சர்களே இலங்கையின் கையில் இருந்த ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் மாற்றிவிட்டது. 11 பந்துகளில் 38 ரன்களை எடுத்த பொல்லார்ட் வனிது ஹசரங்காவின் டெலிவரியில் lbw ஆகி வெளியேறினார்.

ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அடுத்த ஓவரிலேயே 6 சிக்சர்களை கொடுத்ததால் தனஞ்செயா நொந்துப்போனார்.

'சூப்பர் 50 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்துள்ளேன். இங்கே ஹாட்ரிக் சிக்சர்களை அடித்தவுடனே பௌலர்தான் ப்ரஷரில் இருப்பார் என்பார் என்பதால் 6 சிக்சர்களை அடிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.' என பரிசளிப்பு விழாவில் பேசியிருந்தார் பொல்லார்ட்.

2007 ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் என்ற சாதனையை முதன் முதலாக செய்தார். அதன்பிறகு அதே ஆண்டில் டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டியிருந்தார். இப்போது பொல்லார்டும் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். அதிரடிக்கும் இமாலய சிக்சர்களுக்கும் பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஒருவர் இந்த சாதனையை செய்ததில் பெரிய ஆச்சர்யமே இல்லை. இதுவே கொஞ்சம் லேட்தான்!

banner

Related Stories

Related Stories