விளையாட்டு

பாகிஸ்தானுக்கு சச்சினும் இவர்தான் டிராவிட்டும் இவர்தான் : இன்சமாம்-உல்-ஹக் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

நமக்கே தெரியாமல் நமது உடலில் ஏறி இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல நமக்கே தெரியாமல் ஒன்று இரண்டு ரன்கள் சேர்த்து சேர்த்தே வெற்றியை நம்மிடம் இருந்து தட்டிப் போகும் வித்தை தெரிந்தவர் அவர்.

பாகிஸ்தானுக்கு சச்சினும் இவர்தான் டிராவிட்டும் இவர்தான் : இன்சமாம்-உல்-ஹக் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

1992. நியூசிலாந்து தான் அந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என்பது பலரின் கணிப்பாக இருந்தது. ஏழு ஆட்டங்களில் தொடர்ந்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்து இருந்தது. மாறாக, இந்தப் பக்கம் மழையின் உதவியோடு அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். அதிர்ஷ்டத்தின் உதவியோடு அரையிறுதிக்குள் வந்த பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து ஓட ஓட விரட்டும் என்று தான் பலரும் நினைத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவும் அதையே தான் பிரதிபலித்தது. நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோவ் 91 ரன்கள் குவிக்க, அந்த அணி 262 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழக்காமல் ஆட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனரே தவிர ரன் சேர்க்க வேண்டும் என்பதில் இல்லை. 35 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் தான் எடுத்திருந்தது. அதைவிட முக்கியமாக தங்களின் பிரதான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரையும் அந்த அணி இழந்து விட்டது. பாகிஸ்தான் அவ்வளவு தான் என்று நினைக்கும் நேரத்தில் அண்டர்டேக்கர் போல திடீரென தோன்றினார் ஒரு 22 வயது இளைஞன்.

தேவையான ரன் ரேட் ஏழைக் கடந்து எட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது. இனி எட்டு வைத்து நடந்தால் வேலைக்கு ஆகாது என அதிரடியைத் தன் ஆயுதமாக எடுத்தார் அந்த இளைஞன். டேனி மாரிசன், கிறிஸ் ஹாரிஸ் இருவரின் பந்துவீச்சையும் கிழி கிழி என்று கிழித்து தனது வருகையை இந்த உலகிற்கு அறிவித்தார் அந்த இளைஞன். இன்சமாம் உல் ஹக்!

பாகிஸ்தான் அந்த உலகக்கோப்பையை வென்றது ஒரு புறம் இருந்தாலும், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆலமரமாக இருக்கப் போகும் இன்சமாமைக் கண்டுபிடித்தது அந்த உலகக்கோப்பையின் இன்னொரு ஸ்பெஷல்.

தாடி வைத்த முகம், பருமனான உடல், அடிக்கடி ரன் அவுட் ஆகுபவர் என்று மிகக் குறைந்த அளவில்தான் இக்காலத்தவர்கள் இன்சமாமைக் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்திய அணிக்காக டிராவிட் பார்த்த வேலையையும் சச்சின் பார்த்த வேலையையும் பாகிஸ்தான் அணிக்காக ஒருசேர பார்த்த ஒண்டிவீரன் இன்சமாம் என்றால் அது மிகையாகாது. சச்சினைப் போல ரன்கள் குவிக்கும் வேலையாக இருந்தாலும் சரி, டிராவிட் போல நிலைத்து நின்று இறுதி வரை ஆடும் வேலையாக இருந்தாலும் சரி 'நான் ஆடுகிறேன்' என்று ஆல் இன் ஆல் அழுகுராஜாவாக வலம் வந்தார் இன்சி.

அந்த உலகக் கோப்பை இன்னிங்ஸ் அவரது சச்சின் முகம் என்றால், இந்த டெஸ்ட் போட்டி அவரது டிராவிட் முகத்துக்கு சான்று.

1994 கராச்சி டெஸ்ட் போட்டி. 314 ரன்களை சேஸ் செய்யும் போது, பாகிஸ்தான் அணி 184/7 என்று திணறிய நிலையில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் அவர். வக்கார் யூனுஸோடு சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தார். அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டின் மறக்க முடியாத சேஸ்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது அது. இன்னும் மிகச் சிறந்த சேஸ்களுள் ஒன்றாக அது இருக்கும். அந்த சேஸின் மிகமுக்கிய அம்சம், அந்த வெற்றி யாருக்கு எதிராகக் கிடைத்தது என்பதில் - ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு சச்சினும் இவர்தான் டிராவிட்டும் இவர்தான் : இன்சமாம்-உல்-ஹக் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

ரன் அவுட்டுகளுக்கு பெயர் போன ஆள் இன்சமாம். பந்து எங்கு போகிறது என்று கூட சில நேரம் கவனிக்காமல் ஓடி அவுட் ஆனது உண்டு. ரன் அவுட் என்று மட்டும் சுருக்கி விட முடியாது. ஹிட் விக்கெட், பீல்டிங்கிற்கு இடையூறு செய்தல் போன்ற எத்தனையோ வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தவர் இன்சி பாய். ஆனால் அவர் ஆட்டமிழந்த முறைகளைப் பற்றி பேசி சிரித்த பலர் அவர் அப்படி ஆட்டமிழக்கும் முன்பு எத்தனை பந்து வீச்சாளர்களை அழாத குறைக்கு ஆக்கியுள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை. நமக்கே தெரியாமல் நமது உடலில் ஏறி இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல நமக்கே தெரியாமல் ஒன்று இரண்டு ரன்கள் சேர்த்து சேர்த்தே வெற்றியை நம்மிடம் இருந்து தட்டிப் போகும் வித்தை தெரிந்தவர் அவர்.

சற்று கனத்த உடலுடன் கிரிக்கெட் ஆடிய இன்சமாம் உடல் எடையைப் பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்பட்டதே கிடையாது, ஒரே ஒரு நேரத்தை தவிர. 2003ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது நாமும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழ அதற்காக கடுமையாக உழைத்தார். நாட்கணக்கில் ஜிம்மில் செலவழித்து சரியாக 24 பவுண்டுகள் இளைத்து விட்டார். தனது ரன் அவுட் பிரச்னையைக் காரணமாக கூறி இந்த உடல் மெலியும் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அந்தத் தொடரில் இன்சமாம் அடித்த மொத்த ரன்களே 19 தான். அதிலும் மிக முக்கியமான ஆட்டமான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வழக்கம் போல ரன் அவுட் ஆனார் இன்சி. நரி முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என்பதை நம்பி போன கவுண்டமணி கதை ஆகி விடும் இன்சமாமுக்கு.

இது வேலைக்கு ஆகாது என நினைத்து தனது டயட்டை எல்லாம் கை விட்டுவிட்டு மீண்டும் பழைய உடல் வாகுக்கு மாறினார் இன்சமாம். மீண்டும் 2005ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளில் இடம் பிடித்து அந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் அணிக்காக 1800-க்கும் அதிகமான ரன்களைக் குவித்தார் இன்சமாம். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக நம் வாழ்க்கையை மாற்றக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்சமாம்.

கேப்டனாக தான் ஆடிய 81 போட்டிகளில் 51 போட்டிகளை பாகிஸ்தானுக்காக வென்று கொடுத்துள்ளார். சுமார் 83 முறை அரைசதம் அடுத்துள்ள இன்சமாம், பாகிஸ்தான் அணிக்காக 20,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர். இன்று வரை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார் இன்சி. அது போக இன்சமாம் கோபக்காரரும் கூட. ஒரு முறை இந்திய ரசிகர் தன்னை இழிவாக பேசி விட்டார் என்று கேலரிக்குள் புகுந்து அவரை பேட்டால் அடிக்கப்போன சமாச்சாரம் எல்லாம் இன்சமாம் வாழ்வில் நடந்துள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்சமாம் குறித்துக் கூறும்போது "இவரளவுக்கு யாரும் வேகப்பந்து வீச்சை எளிமையாக எதிர் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார். இவர் ஓய்வு பெற்று பத்தாண்டு காலம் பிறகும் இவருக்கு நிகராக பாகிஸ்தான் அணியால் ஒரு மாற்று வீரரை உருவாக்க முடியவில்லை என்பது தான் சோகம்.

banner

Related Stories

Related Stories