விளையாட்டு

இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த இந்தியா : 2வது டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரர்கள்!

முதல் போட்டியை 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி.

இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த  இந்தியா : 2வது டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

முதல் போட்டியை 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது. மோசமான தோல்விக்குப் பிறகு இவ்வளவு பெரிய வெற்றியை இந்திய அணி எப்படி சாத்தியப்படுத்தியது?

முதல் போட்டியில் டாஸில் தோற்றது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் கோலி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். இதுவே முதல் பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்பட்டது.

இரண்டு போட்டிகள் குறுகிய இடைவெளியில் நடைபெற்றிருந்தாலும் சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்கள் இரண்டு வெவ்வேறு பிட்ச்களை தயாரித்து வைத்திருந்தனர். முதல் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் பெரிதாக பௌலர்களுக்கு உதவவில்லை. கடைசி இரண்டு நாட்களில் மட்டும்தான் பந்து ஓரளவுக்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆனது.

இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த  இந்தியா : 2வது டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரர்கள்!

ஆனால், அது இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமைந்தது. அதேநேரத்தில் இரண்டாவது ஆட்டத்திற்கென தயாரிக்கப்பட்டிருந்த பிட்ச் வழக்கமான சேப்பாக்கம் பிட்ச்சாக இருந்தது. முதல் செஷனிலிருந்தே பந்து நன்கு திரும்பியது. எக்ஸ்ட்ரா பவுன்ஸும் இருந்தது. இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக அமைந்தது.

முதல் போட்டியைவிட இந்தப் போட்டியில் பந்து அதிகமாக திரும்பியதால் இந்திய வீரர்களுமே முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறினர். கில், புஜாரா, கோலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் சீக்கிரமே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால், ஒரு எண்டில் ரோஹித் ஷர்மா நிலையாக நின்று இங்கிலாந்தின் அட்டாக்கிற்கு கவுன்ட்டர் கொடுத்தார். முதல் நாளின் முதல் செஷனிலேயே 75 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட்டும் 100-க்கு மேல் இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஸ்வீப் ஷாட்டை பிரதானமான ஆயுதமாக பயன்படுத்தியிருந்தனர். முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதே ஸ்வீப் ஷாட்டை இங்கிலாந்துக்கு எதிராக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். ரஹானேவும் ரோஹித்துக்கு ஆதரவாக நின்று ஒத்துழைப்பு கொடுத்தார். ரோஹித்-ரஹானே பார்ட்னர்ஷிப்பும் பன்டின் அதிரடியும் இந்திய அணி 300 ரன்களைக் கடப்பதற்கு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த  இந்தியா : 2வது டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரர்கள்!

முதல் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை முறையாக ஆடாமல் அதிக லீட் கொடுத்ததே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் அதை அப்படியே இங்கிலாந்துக்கு செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி 195 ரன்களை லீடாக எடுத்தது. அஷ்வின், அக்ஷர் படேல் இருவருமே சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.

அஷ்வின் தனது 29-வது 5 wicket haul எடுத்தார். இங்கிலாந்தை குறைந்த ரன்னில் சுருட்டியதற்கு மிக முக்கிய காரணம் ரூட்டை சீக்கிரமே அவுட் ஆக்கியதே. அற்புதமாக ஸ்கெட்ச் போட்டு, ஆஃப் சைடில் ஃபீல்டை டைட் ஆக்கி லெக் சைடை ஃபீரியாக்கி வலுக்கட்டாயமாக ஸ்வீப் ஆட வைத்து ரூட் விக்கெட்டை எடுத்தனர்!

195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. இந்திய பேட்ஸ்மேன்களும் சுழலுக்கு இரையாகி சீக்கிரமே அவுட் ஆகியிருந்தனர். ஆனாலும், கேப்டன் கோலியும் அஷ்வினும் நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தினர். முதல் இன்னிங்ஸில் வந்தவுடனேயே ஒரு கவர் ட்ரைவ்க்கு ஆசைப்பட்டு பேட்டை விட்டு மொயீன் அலியின் சிறப்பான ஆஃப் ப்ரேக்கில் ஸ்டம்பை பறிகொடுத்தார் கோலி. இரண்டாவது இன்னிங்ஸில் இந்த தவறை திருத்திக்கொண்டு அவசரப்படாமல் பொறுமையாக ஆடினார்.

15 பந்துகளுக்கு மேல் டாட் ஆடிய பிறகும் அழுத்தத்தில் பெரிய ஷாட்டுக்கு செல்லாமல் மெதுவாகவே ஆடி அசத்தினார். தேவையில்லாமல் கவர் ட்ரைவ்க்கும் பேட்டை விட்டு சொதப்பாமல் அசத்தியிருந்தார். இன்னொரு பக்கம் அஷ்வினும் முதலில் அதிரடியாக ஆடி அதன்பிறகு மெதுவாக பொறுப்பாக ஆடி தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங்கில் சொதப்பியவுடனே இந்த பிட்ச் ஆடுவதற்கு தகுதியே இல்லாத பிட்ச் என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கரித்துக்கொட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால், அஷ்வின் இந்த பிட்ச்சில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என காண்பித்திருந்தார். இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வளவு பெரிய டார்கெட்டை பார்த்தவுடனே இங்கிலாந்து அணி ஏறக்குறை தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டது. பேட்டிங்கெல்லாம் எதோ சம்பிரதாயத்துக்கு ஆடியது போலதான் இருந்தது. முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அக்‌ஷர் படேல் 5 விக்கெட் எடுத்தார். ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரையும் இரண்டாவது இன்னிங்ஸிலும் அக்‌ஷர் மற்றும் அஷ்வினே வீழ்த்தியிருந்தனர். மொயீன் அலி மட்டும் கடைசியில் நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டார். ஆனாலும், உணவு இடைவேளை முடிந்த கொஞ்ச நேரத்திலேயே இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

banner

Related Stories

Related Stories