விளையாட்டு

“என்னாலும் அஷ்வினாலும் ஓடவே முடியவில்லை” - சிட்னி டெஸ்ட் பார்ட்னர்ஷிப் பற்றி பகிரும் ஹனுமா விஹாரி!

அசாத்தியமான இன்னிங்ஸோடு காயம் காரணமாக இந்தியா திரும்பிய ஹனுமா விஹாரி, சிட்னி டெஸ்ட் அனுபவங்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

“என்னாலும் அஷ்வினாலும் ஓடவே முடியவில்லை” - சிட்னி டெஸ்ட் பார்ட்னர்ஷிப் பற்றி பகிரும் ஹனுமா விஹாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

காபா டெஸ்ட்டை வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை தக்கவைத்து, வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. இந்த சாதனைக்கு மூல காரணமாக இருந்தது டிராவில் முடிந்த, சிட்னி டெஸ்ட்தான். அந்தப் போட்டியில் தோல்வியை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அஸ்வினும் ஹனுமா விஹாரியும் ஆடிய ஆட்டம்தான் இந்தத் தொடரை வெல்வதற்கு முழு முதற்காரணம். அந்த அசாத்தியமான இன்னிங்ஸோடு காயம் காரணமாக இந்தியா திரும்பிய ஹனுமா விஹாரி, சிட்னி டெஸ்ட் அனுபவங்களை தற்போது பகிர்ந்து வருகிறார். அவர் பேசியதின் சுவாரஸ்ய சுருக்கம் இதோ...

அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்தியா, இந்த சீரிஸில் ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்றெல்லாம் முன்னாள் ஆஸி வீரர்கள் பேசியிருந்தனர். இந்த மோசமான சூழ்நிலையில் அணியின் மனநிலை எப்படியிருந்தது என்பதைப் பற்றி விவரிக்கும் ஹனுமா விஹாரி, 'அடிலெய்டு போட்டியில் வீசப்பட்ட எல்லா நல்ல பந்துகளிலும் நாங்கள் எட்ஜாகி விக்கெட்டை கொடுத்தோம். இது ஏதாவது மோசமான நாளில் மட்டுமே நடைபெறும் விஷயம். அடிலெய்டு டெஸ்ட் முடிந்த பிறகு நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவே இல்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் அனைவரின் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது, இப்படி ஒரு மோசமான தோல்வி இதற்கு முன்பு நடந்ததில்லை. இனிமேலும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டுமே நினைத்துக்கொண்டு, அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டோம். இந்தத் தொடரை மூன்றே போட்டிகள் கொண்ட தொடராக நினைத்துக்கொண்டு மெல்பர்னில் இருந்து புதிதாக தொடங்கினோம். முழு மனவலிமையோடு எங்களுடைய முழுத்திறனையும் மைதானத்தில் வெளிப்படுத்தினோம்"

அந்த மோசமான அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடனே கோலி இந்தியாவுக்கு கிளம்ப வேண்டியிருந்தது. மேலும், காயம் காரணமாக பல வீரர்களும் வரிசையாக வெளியேற ஆரம்பித்தனர். இதுபற்றி ஹனுமா விஹாரி பேசும்போது, 'ஒட்டுமொத்தமாக ஒரு விளையாட்டில் என்னவெல்லாம் ஏற்ற இறக்கங்கள் இருக்குமோ, அதையெல்லாமே ஒரே சீரிஸில் நாங்கள் பார்த்துவிட்டோம். காயம் காரணமாக எந்த வீரர் வெளியேறினாலும் சரி, அவர்களுக்கு பதிலாக எந்த வீரர் களமிறங்கினாலும் சரி, எங்களுக்கு 'Team India' களத்தில் இறங்குகிறது என்கிற உணர்வு மட்டும்தான் இருந்தது. அணிக்காக எங்களின் 100% உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருந்தோம். ஒரு கட்டத்தில் காயங்கள் அதிகமாகும் போது, 'காயம்பட்ட வீரர்களோடு போர்க்களத்தில் நிற்பது போல் இருக்கிறோம். காபா டெஸ்ட் போட்டியின்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் யாரெல்லாம் மிஞ்சியிருக்கிறோமோ அவர்களைத்தான் இறக்கிவிட வேண்டும் போல' என நகைச்சுவையாக பேசிக்கொள்வோம். இந்த நேரத்தில் ஃபிசியோக்களுக்கு பெரிய நன்றியை சொல்லியாக வேண்டும். காயங்கள் அதிகமாகிக்கொண்டே போகும்போதும் அவர்கள் எந்த இடத்திலும் பதற்றமாகவில்லை. ரொம்பவே அமைதியாக எங்களை பொறுப்புடன் கவனித்தனர்.

“என்னாலும் அஷ்வினாலும் ஓடவே முடியவில்லை” - சிட்னி டெஸ்ட் பார்ட்னர்ஷிப் பற்றி பகிரும் ஹனுமா விஹாரி!

'98 ஓவர்களுக்கு ப்ளான் செய்வதெல்லாம் முடியாத காரியம். நாங்கள் வெற்றிக்காக ஆட வேண்டுமா ட்ராவுக்காக ஆட வேண்டுமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. எல்லோரும் அவர்களுடைய நேச்சுரல் கேமை ஆடுவோம். ஆட்டத்தின் போக்கை பொறுத்து வெற்றி பெற முடியுமாயின் அதற்கு கடைசி நேரத்தில் முயன்றுகொள்ளலாம் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது' – சிட்னி டெஸ்ட்டின் 5வது நாள் தொடங்கும் முன்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து இப்படி சொல்கிறார் விஹாரி.

ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பன்ட் மற்றும் புஜாரா ஆடிய ஆட்டத்தை பார்க்கும்போது வெற்றிக்காகவே ஆடலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திடீரென ரிஷப் பன்ட்டும் புஜாராவும் அடுத்தடுத்து அவுட்டாகிவிட இந்த முடிவு மாறியிருக்கிறது.

'புஜாராவும் பன்ட்டும் அவுட் ஆன பிறகு வெற்றி என்பது சாத்தியமில்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது. மேலும், அஸ்வின் முதுகுவலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். எனக்கு ஹேம்ஸ்ட்ரிங் பிரச்னை தீவிரமடைந்தது. ஜடேஜாவுக்கு விரலில் பெரிய காயம் இருந்தது. அஸ்வினாலும் ஓட முடியவில்லை; என்னாலும் ஓட முடியவில்லை. அந்த நேரத்தில்தான் டிரா செய்தால் போதும் என்கிற முடிவுக்கு வந்தோம்' என்கிறார் விஹாரி.

அஸ்வினும் காயத்தோடு அவதிப்பட்டார். அவருக்கு மேல் விஹாரியும் ஹேம்ஸ்ட்ரிங்கால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நடந்த விஷயங்கள் இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. அஸ்வின் பவுன்சர்களால் அடிபடும்போது ஹனுமா விஹாரி அஸ்வினிடம், 'உங்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை. நீங்கள் மூட்டுகளை மடக்கி குனிந்து ஆடினால் பவுன்சர்களை சிறப்பாக எதிர்கொள்ளலாம்' என்றிருக்கிறார். அதற்கு அஸ்வின், 'நான் குனிந்தால் அவ்வளவுதான்; எழவே முடியாது; அந்தளவுக்கு முதுகுவலி இருக்கிறது' என நகைச்சுவையாக கூறியிருக்கிறார். இந்தநேரத்தில்தான் இவர்களுக்கிடையே ஒரு உடன்படிக்கை ரெடியாகியிருக்கிறது.

விஹாரி ஹேம்ஸிட்ரிங்கால் அவதிப்பட்டதால் அவரால் கால்களை நகர்த்தக்கூட முடியவில்லை. அஸ்வினால் குனிந்து பவுன்சரை சமாளிக்க முடியவில்லை. 'உங்களால் கால்களை நகர்த்தி ஆட முடியும். எனவே, நீங்கள் லயனின் ஓவரை பார்த்துக்கொள்ளுங்கள். என்னால் கால்களை நகர்த்த முடியாது; எனவே நான் வேகப்பந்து வீச்சாளர்களை பார்த்துக்கொள்கிறேன்' என விஹாரி கூறியிருக்கிறார்.

இதன்படியே இருவரும் அழகாக பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர். ' 43 ஓவர்கள் நிற்க வேண்டும் என்பதை மனதில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. ஒரு ஓவரை மட்டும்தான் எதிர்கொள்ளப்போகிறோம் என நினைத்துக்கொண்டேன். எனக்கான ஒரு ஓவர் முடிந்தவுடன் அஸ்வின் அவருக்கான ஓவரில் பேட் பிடிக்கும்போது எனக்கு நான்கு நிமிடங்கள் ஓய்வு கிடைக்கும்' என அஸ்வினின் 'பத்து பத்து பாலா ஆடலாம்' கமெண்ட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார் விஹாரி.

“என்னாலும் அஷ்வினாலும் ஓடவே முடியவில்லை” - சிட்னி டெஸ்ட் பார்ட்னர்ஷிப் பற்றி பகிரும் ஹனுமா விஹாரி!

தீவிரமான ஹேம்ஸ்ட்ரிங் பிரச்சனையுடன் 161 பந்துகளை சந்தித்து 3:45 மணி நேரம் க்ரீஸில் நின்றது மிகப்பெரும் சாதனை. அந்த ஹேம்ஸ்ட்ரிங் வலியை எப்படி பொறுத்துகொண்டார் என்பது பற்றி பேசும் விஹாரி, 'அஸ்வின் க்ரீஸுக்குள் வந்தவுடன் வேகமாக ஒரு ரன்னை ஓடிவிட்டார். திடீரென அவர் அப்படி செய்ததால் எனக்கும் வேறு வழியில்லாமல் ஓடிவிட்டேன். ஆனால், அதற்கு பிறகு அஸ்வினிடம், 'எனக்கு ஜாகிங் கூட செய்ய முடியாது. நடக்க மட்டுமே முடியும் என கூறிவிட்டேன். அதன்பிறகு அதற்கேற்றவாறு நாங்கள் திட்டம் தீட்டிக்கொண்டோம். டீ ப்ரேக்குக்கு முன்பாக எனக்கு ஒரு மாத்திரை கொடுத்தார்கள். டீ ப்ரேக்கின் போது வலி நிவாரணி ஊசி போட்டார்கள். அதன்பிறகு, என்னுடைய வலதுகாலை என்னால் உணரவே முடியவில்லை. இருந்தாலும், அவ்வபோது சிங்கிள்கள் ஓடும்போது வலி இருக்கவே செய்தது'

'ஸ்டார்க் பவுலிங்கில் எனக்கு ஒரு கேட்ச்சை பெய்ன் ட்ராப் செய்யும்போது மட்டுமே கொஞ்சம் பதற்றம் உண்டானது. மற்றபடி, வேறு எங்கேயும் ஆஸி பௌலர்கள் எங்களை தடுமாற செய்யவில்லை' எனக் கூறும் விஹாரி அசாத்தியமான ட்ராவுக்கு பிறகான நிமிடங்கள் குறித்து கூறும்போது, 'முதல் இரண்டு டெஸ்ட்களிலும் நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. இப்போது அணி என்னிடமிருந்து எதிர்பார்க்கும்போது நான் அதை செய்துகொடுத்துவிட்டேன் என்பது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 130 கோடி இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது சிறப்பான உணர்வு. 10 வருடமாக முதல்தர கிரிக்கெட்டில் நான் போட்ட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதை நினைக்கிறேன்'

'இந்த நேரத்தில் ட்ராவிட் அவர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். அவரை ஒரு பயிற்சியாளர் என்பதை விட ஒரு Mentor என்றுதான் நான் கூறுவேன். எங்களுக்கு தேவைப்படும்போது அவர் சரியான நேரத்தில் ஆலோசனை கொடுப்பார்' என ஆசானுக்கும் உரிய மதிப்பைக் கொடுத்து பேட்டியை முடித்தார் விஹாரி.

Courtesy: ESPN cricinfo, Sports today

banner

Related Stories

Related Stories