விளையாட்டு

“ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யணும்” : பண்ட்டின் வெறித்தன இன்னிங்ஸால் சிட்னி டெஸ்டை டிரா செய்த இந்தியா!

யாரும் எதிர்பார்க்காத வகையில் நம்பர் 6–ல் வரவேண்டிய ரிஷப் பன்ட் நம்பர் 5 ல் இறக்கிவிடப்பட்டார். இந்த ஆச்சர்யத்துக்குப் பிறகுதான் அதிசயங்கள் நடக்கத் தொடங்கியது.

“ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யணும்” : பண்ட்டின் வெறித்தன இன்னிங்ஸால் சிட்னி டெஸ்டை டிரா செய்த இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நாம் எண்ணும் ஒரு விஷயத்திற்காக முழுமையாக முயன்று போராடும்போது ஏற்படும் மனதிருப்திக்கு முன்பாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. 'இந்தியா இனிமேல் இந்த ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை... நாம் முழுமையாக போராடியிருக்கிறோம் அதுவே போதும்' என பல கிரிக்கெட் ரசிகர்கள், சிட்னி டெஸ்ட் முடிவதற்கு முன் கருத்து தெரிவித்தனர். இந்த மனதிருப்தியை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் 'ரிஷப் பன்ட்'. ஒன்றரை செஷனுக்கு அவர் ஆடிய அந்த ஆட்டம்தான் இந்திய ரசிகர்களை பெருமையடையச் செய்திருக்கிறது.

407 என்கிற மாபெரும் இலக்கை நோக்கி இந்திய அணி நேற்று சேஸிங்கை தொடங்கியது. நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 98-2 என்ற நிலையில் இருந்தது. ஆட்டத்தை வெல்ல வேண்டுமாயின் கையில் இருக்கும் விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு 311 ரன்களை கடைசி நாளில் மட்டும் அடித்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலை. ஆட்டம் முழுமையாக ஆஸி பக்கமே இருந்தது. இந்திய அணி கொஞ்சமேனும் போராடியாவாது தோற்குமா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக இருந்தது. ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 'இந்திய அணி 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும்' என ஆருடம் கூறியிருந்தார். ஜடேஜா காயம் காரணமாக ஆடுவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. மேலும், மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஃபார்மில் இல்லை. இந்திய ரசிகர்களுக்குமே கூட ரஹானே-புஜாரா இந்தக் கூட்டணியின் மீது மட்டும்தான் முழுமையான நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய நாளில் 2 வது ஓவரிலேயே லயன் வீசிய ஒரு பந்தில் ஷார்ட் லெகிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தார் ரஹானே.

இருந்த ஒரே நம்பிக்கையும் உடையத் தொடங்கியது. இந்தியா எப்படியும் முதல் செஷன் முடிவதற்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்றே தோன்றியது. ஆனால், அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத வகையில் நம்பர் 6–ல் வரவேண்டிய ரிஷப் பன்ட் நம்பர் 5 ல் இறக்கிவிடப்பட்டார். இந்த ஆச்சர்யத்துக்குப் பிறகுதான் அதிசயங்கள் நடக்கத் தொடங்கியது.

இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக சிட்னி மைதானம் குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். 'பேட்டிங் பிட்ச்சான சிட்னியில் 5–வது நாளில் மட்டும் ஸ்பின்னுக்கு பெரிதாக உதவியிருக்கும்' என அதில் கூறியிருப்பார். ஆஸியின் இன்றைய பௌலிங் அட்டாக்கிலிருந்து அதை உணர முடிந்தது. இன்றைக்கு நாதன் லயன் தான் அவர்களின் மெயின் பௌலராக அதிக ஓவர்களை வீசினார். இன்று அவர் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் ரஹானேவின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

ஆனால், ரிஷப் பன்ட் டார்கெட் செய்து அடித்ததே லயனின் டெலிவரிகளைத்தான். முதலில் க்ரீஸுக்குள் வந்தவுடன் ரொம்பவே பொறுமையாக டாட்கள்தான் ஆடிக்கொண்டிருந்தார் பன்ட். லயன் வீசிய முதல் 12 டெலிவரிகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதன்பிறகுதான் தனது நேச்சுரல் கேமை ஆடத்தொடங்கினார். லயன் வீசிய அடுத்த இரண்டு ஓவர்களில் மட்டும் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் வந்தது. 57 வது ஓவரில் மீண்டும் லயனின் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார் பன்ட். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என ஆஸியின் வேகப்பந்து வீச்சாளர்களையும் அவ்வபோது கவர் ட்ரைவ் அடித்து மிரட்டினார். ஆனாலும், லயனை மட்டுமே குறிவைத்து அடித்தார் பன்ட். இன்னொரு எண்டில் புஜாரா விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதால் இந்தக் கூட்டணி ஆஸியை வெகுவாக பதற்றமடைய செய்தது. முதல் செஷனிலேயே ஆட்டத்தை முடித்துவிடலாம் என ஆஸி நினைக்க, இந்தக் கூட்டணி 100 ரன்களை கடந்து அடுத்த செஷனுக்கும் ஆட்டத்தை இழுத்துச் சென்றது.

“ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யணும்” : பண்ட்டின் வெறித்தன இன்னிங்ஸால் சிட்னி டெஸ்டை டிரா செய்த இந்தியா!

செஷனுக்கு இடையிலான ப்ரேக்கின் போது பன்ட்டின் ஆட்டத்தை கெடுக்கும் வகையில் ஸ்மித் அறமற்ற செயலில் ஈடுபட்டார். நேர்மையாக விக்கெட்டை வீழ்த்த முடியாததால், குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்குமளவுக்கு ஆஸி வீரர்களுக்கு பன்ட்டின் ஆட்டம் பயத்தை கொடுத்தது. அதற்காகவே அவருக்கு எத்தனை மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகளை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

25 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் பன்ட் 3 அரைசதங்களையும் 2 சதங்களையும் அடித்திருக்கிறார். 17 இன்னிங்ஸ்களில் 20+ ரன்களை அடித்திருக்கிறார். அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றுவதில் தடுமாறியிருக்கிறார். ஆனால், இன்று அவரால் நின்று அணிக்காக ஆடிக்கொடுக்க முடிந்தது. காரணம், முழுமையாக சொதப்பி வந்த ஹனுமா விஹாரிக்கு பதில் நம்பர் 5 ல் பன்ட் இறக்கிவிடப்பட்டார். இந்த முடிவிற்காகவே ரஹானேவை பாராட்டலாம்.

அமைதியாக இருந்தாலும் அவரின் கேப்டன்சியும் அக்ரஸிவ் தன்மையுடையதுதான் என்பதை இதிலிருந்து உணர முடியும். ஆட்டத்தை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்றோ அல்லது எப்படியாவது ட்ரா செய்துவிட வேண்டும் என்றோ பன்ட்டுக்கு ஆலோசனை கூறியதாகத் தெரியவில்லை. 'புஜாரா இருக்கிறார். அவர் அவருடைய கேமை ஆடட்டும்; நீ உன்னுடைய கேமை ஆடு!' என்பதே ரஹானே பாஸ் செய்த மெசேஜாக இருக்கக்கூடும். இது வெகுவாக ஆஸியை பாதித்தது.

ஹனுமா விஹாரியை உள்ளே இறக்கியிருந்தால் புஜாரா-விஹாரி இருவருமே வலதுகை பேட்ஸ்மேன்கள்; மேலும் இருவரும் ஒரே மாதிரியான ப்ளேயிங் ஸ்டைலை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் க்ரீஸில் இருந்தால் ஆஸி 2 in 1 ஆக ஒரே ப்ளானை யோசித்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ரஹானேவின் விக்கெட்டை எடுத்து நல்ல மொமண்டத்தில் இருந்த ஆஸிக்கு இது சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், பன்ட் உள்ளே வரும்போது அவர் ஒரு இடக்கை பேட்ஸ்மேன், இதுவே முதலில் ஆஸிக்கு சர்ப்ரைஸாக இருந்திருக்கும். புஜாரா-பன்ட் என இவர்களுக்கு வேறு வேறு லைன் & லெந்த்தை ஆஸி வீசியாக வேண்டும்.

“ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யணும்” : பண்ட்டின் வெறித்தன இன்னிங்ஸால் சிட்னி டெஸ்டை டிரா செய்த இந்தியா!

இருவரும் ப்ளேயிங் ஸ்டைலில் எதிரெதிர் துருவங்கள். இவர்களுக்கு மாற்றி மாற்றி ஃபீல்ட் செட் செய்வதும் கூடுதல் வேலை. இதில்தான் ஆஸி கேப்டன் டிம் பெய்ன் தடுமாறினார். புஜாராவுக்கு பிரச்சனையேயில்லை. லெக் கல்லி, லெக் ஸ்லிப், ஷார்ட் லெக் என லெக் சைடை கட்டம் கட்டி ஃபீல்ட் செட்டப் வைத்துவிட்டார். பன்ட்டை பொருத்தவரை அவருக்கு டிஃபன்ஸிவ்வாக ஃபீல்ட் செட் செய்வதா, அக்ரஸிவாக செய்வதா என்பதே பெய்னுக்கு குழப்பமாக இருந்தது. முதலில் டாட்கள் ஆடிய பன்ட் திடீரென லயனை வெளுக்கத்தொடங்கினார். உடனே ஃபீல்டை விரிவாக்கினால் அடுத்து வேகப்பந்து வீச்சில் டிஃபன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் பன்ட். ஸ்லிப்பை வைப்பதா, எடுப்பதா என்பதே பெய்னுக்கு பெரும் குழப்பமாக இருந்தது.

ஒருமுறை செகண்ட் ஸ்லிப்பை தூக்கினார். அடுத்த பந்தே அங்கே ஒரு கேட்ச் சென்றது. இடையே கேப்டன் பெய்னே இரண்டு கேட்ச்சுகளை பன்ட்டுக்கு கோட்டைவிட்டதால் திட்டங்கள் தீட்டுவதில் கூடுதல் அயர்ச்சியானார். ரஹானேவின் முடிவும் பன்ட்டின் ப்ளேயிங் ஸ்டைலும் ஆஸியை பயங்கரமாக சோதித்துவிட்டது. இரண்டாவது செசனில் நியுபால் எடுப்பதற்கு சில ஓவர்களுக்கு முன்பிருந்து பன்ட் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தார். லயனை இன்னும் வெறுப்பேற்றும் வகையில் பவுண்டரியாக அடித்துத்தள்ளினார். நியூ பால் எடுப்பதற்கு முன்பாக லயன் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து சதமடிக்க முயன்றபோது பாயின்ட்டில் கம்மின்ஸிடம் கேட்ச் ஆகி 97 ரன்களில் வெளியேறினார்.

பன்ட் அதிகமாக ஆஃப் சைடிலேயே ஷாட் ஆடினார். அடித்த 97 ரன்களில் 55 ரன்கள் ஆஃப் சைடில் வந்தவை. இதை வைத்துதான் அவருக்கான விக்கெட்டுக்கு திட்டம் போட்டது ஆஸி. தேர்டுமேன், பாயின்ட், கல்லி, கவர், எக்ஸ்ட்ரா கவர் என ஆஃப் சைடு முழுவதையும் அடைத்து லயனை எப்போதும் வீசுவதை விட இன்னும் கொஞ்சம் ஒயிடாக வீச வைத்தார் பெயின். அந்த டெலிவரியில்தான் பாயின்ட் ஃபீல்டரை க்ளியர் செய்ய முடியாமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரிஷப்.

அவர் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்கிற விமர்சனங்களும் அவர் மீது இருக்கிறது. ஆனால், அப்படி பொறுமையாக ஆடியிருந்தால் அவர் எப்போதோ விக்கெட்டை விட்டிருப்பார் என்பதுதான் உண்மை. அவருடைய நேச்சுரல் கேமை எந்த அழுத்தமும் இல்லாமல் அவர் ஆடியதன் விளைவுதான், இந்தியா இந்த போட்டியை டிரா செய்திருப்பதற்கு மிக முக்கிய காரணம். ஆனால், இந்த வெற்றி, தோல்வி, டிரா எல்லாவற்றையும் தாண்டி பன்ட்டின் அந்த போராட்டமும் அவர் செய்த சண்டையும்தான் ரொம்பவே முக்கியம். இந்தப் போட்டியில் இந்தியா தோற்றிருந்தாலும் கூட எந்த இந்திய ரசிகனும் இந்திய அணியை விமர்சித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் இந்திய வீரர்கள் போராடியிருக்கிறார்கள்! வெற்றி தோல்விகளுக்கு மட்டுமல்ல போராட்டங்களுக்கும் வரலாற்றில் எப்போதும் இடம் உண்டு.

banner

Related Stories

Related Stories