விளையாட்டு

ரசிகர்களை ஏமாற்றிய புஜாரா - முதல் இன்னிங்ஸை கோட்டை விட்ட இந்திய அணி! #IndvAus

புஜாராவின் ஆட்டத்தினால்தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸை கோட்டை விட்டதா?

ரசிகர்களை ஏமாற்றிய புஜாரா - முதல் இன்னிங்ஸை கோட்டை விட்ட இந்திய அணி! #IndvAus
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான சிட்னி டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவடைந்திருக்கிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. புஜாரா வழக்கத்தை விட ஓவராக டிஃபன்ஸிவ் ஆட்டம் ஆடியிருந்தார். 176 பந்துகளை சந்தித்திருந்த புஜாரா 50 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக, புஜாராவை எப்போதும் குட் புக்கில் வைத்திருக்கும் ரசிகர்கள் கூட இன்று அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். புஜாராவின் ஆட்டத்தினால்தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸை கோட்டை விட்டதா?

சிட்னி ரொம்பவே ஃப்ளாட்டாக பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் பிட்ச் என்பது அனைவருக்கும் தெரியும். ஆஸி முதலில் பேட் செய்த போதும் கூட ஸ்மித்தும் லபுஷேனும் மிகச்சிறப்பாக ஆஸியை கரை சேர்த்திருந்தனர். வேகப்பந்து வீச்சுக்கு பெரிதாக எந்த உதவியும் பிட்ச்சில் இல்லை. இப்படிப்பட்ட பிட்ச்சில் ஆஸி முதல் இன்னிங்ஸில் எடுத்த 338 ரன்களே குறைவுதான். ஸ்கோர் நிச்சயம் 400 ரன்களுக்கு மேலாவது வந்திருக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்தது.

போகப்போக பிட்ச் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதால் இந்திய அணி ஆஸி எடுத்த 338 ரன்களைத் தாண்டிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்ததை போலவே இந்திய அணிக்கு பேட்டிங் ஆடுவதற்கு பிட்ச் ரொம்பவே சுலபமாக இருந்தது. ஓப்பனர்களான ரோஹித்தும் சுப்மன் கில்லும் எந்தவித சிரமும் இன்றி பவுண்டரிகளை அடித்தனர். இளம் வீரரான சுப்மன் கில் 101 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அரைசதமும் அடித்து அசத்தினார். இந்த ஓப்பனிங் கூட்டணியே 70 ரன்களை சுலபமாக சேர்த்து பிரிந்தது.

இதன்பிறகுதான், ஆட்டமே மாறத் தொடங்கியது. புஜாரா ரொம்பவே ஜாக்கிரதையாக விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக டிஃபன்ஸிவ் ஆட்டம்தான் ஆடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தளவுக்கு கட்டையை போடுவார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நேற்று கடைசி செஷனில் 53 பந்துகளை சந்தித்த புஜாரா வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். புஜாரா சந்தித்த முதல் 100 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. ஒரு பவுண்டரி கூட வரவில்லை. 101–வது பந்தில்தான் முதல் பவுண்டரியே வந்தது. 174 பந்துகளில் அரைசதம் அடித்து தனது கெரியரிலே ஸ்லோவாக அடிக்கப்பட்ட அரைசதம் என்கிற சாதனையை படைத்தார்.

ரசிகர்களை ஏமாற்றிய புஜாரா - முதல் இன்னிங்ஸை கோட்டை விட்ட இந்திய அணி! #IndvAus

இதை அவர் புற்கள் நிறைந்த பிட்ச்சிலோ அல்லது பௌலர்கள் அசாத்தியமாக வீசியோ ஆட்டத்திலோ செய்திருந்தால் கூட பரவாயில்லை. இந்தப் போட்டியில் இது இரண்டுமே இல்லை. ஆஸியில் ஃபார்ம் அவுட்டிலிருந்த ஸ்மித்தும் லபுஷேனும் இங்கேதான் ஃபார்முக்கு வந்திருக்கின்றனர். பௌலிங்கிலும் ஆஸி பெரிதாக பேட்ஸ்மேன்ஸ்களை நிலைகுலையச் செய்யும் வகையில் வீசவே இல்லை. இதை பேட் கம்மின்ஸே போட்டிக்கு பிறகு 'பிட்ச் பெரிதாக பௌலிங்குக்கு உதவவில்லை. நாங்களும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஸ்ட்ரெய்ட்டாக ஒரு லைனை பிடித்துக்கொண்டு பேட்ஸ்மேனை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்' என கூறியுள்ளார். ஒன்றுமே இல்லாத பிட்ச்சில்... பெரிய ப்ளானிங்கே இல்லாத பௌலிங் அட்டாக்குக்கு எதிராக இப்படியொரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் புஜாரா.

புஜாராவின் இந்த மந்தமான ஆட்டம் மற்ற பேட்ஸ்மேன்களையும் வெகுவாக பாதித்தது. 'புஜாராவின் அணுகுமுறை சரியாக இல்லை. அவர் களத்தில் இன்னும் துடிப்பாக இருந்திருக்க வேண்டும். அவரின் அணுகுமுறை மற்ற பேட்ஸ்மேன்களையும் பாதித்துவிட்டது' என ரிக்கி பாண்டிங் ட்வீட் செய்துள்ளார். ஓப்பனர்களான ரோஹித்தும் கில்லும் அவ்வளவு சுலபமாக ஆஸியின் அட்டாக்கை எதிர்கொண்டபோது, இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு நேர்மறையான எண்ண ஓட்டம் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், புஜாராவின் ஆட்டத்தை பார்த்த பிறகு, பிட்ச்சில் எதோ மர்மம் இருப்பது போல பிம்பம் உண்டாகி ஒட்டுமொத்த அணியின் மனநிலையுமே மாறிவிட்டது.

ஹனுமா விஹாரியின் ரன் அவுட்டுக்கெல்லாம் புஜாரா உருட்டிய உருட்டுதான் காரணம். 38 பந்துகளில் வெறும் 4 ரன்கள். காரணம், பிட்ச் என்னமோ பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வது போல புஜாரா ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு கடத்திய அந்த டிஃபன்ஸிவ் மனநிலை. 50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தால் கூட புஜாராவால் இன்னும் ஒரு 35-40 ரன்களை கூடுதலாக அடித்திருக்க முடியும். அந்த 35-40 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸுக்கு ஆட்டம் செல்லும்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட்டோ 28.41.

2020 ஜனவரி-பிப்ரவரியில் நடைபெற்ற நியுசி சீரிஸில் தோல்வியடைந்த பிறகு புஜாரா மீது இந்த குற்றச்சாட்டை மறைமுகமாக கோலியே முன்வைத்திருக்கிறார். நியுசிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் 28 பந்துகளுக்கு பிறகு முதல் ரன்னை எடுத்து 81 பந்துகளில் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்திருப்பார் புஜாரா. அவர் இவ்வளவு மெதுவாக ஆட இன்னொரு எண்ட்டில் ப்ரஷரில் விக்கெட்டுகள் விழுந்திருக்கும். 'பேட்டிங் ஆடும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பது எப்போதும் கைகொடுக்காது. ஒரு கட்டத்தில் நீங்கள் ஷாட்டுக்கு முயற்சிப்பதையே நிறுத்தியிருப்பீர்கள். சிங்கிள்கள் கூட வரவில்லையெனில், நம்மால் இந்த பிட்ச்சில் என்ன செய்ய முடியும் என உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும்' என புஜாராவை பெயரை குறிப்பிடாமல் காட்டமாக விமர்சித்திருப்பார் கோலி. இன்றைய ஆட்டத்திலும் புஜாரா, கோலி சொன்ன அதே தவறைத்தான் செய்தார். ஒரு கட்டத்தில் புஜாராவிடமிருந்து ஷாட் ஆடுவதற்கான எந்த முயற்சியுமே வெளிப்படவில்லை. விளைவு, ஸ்கோர்போர்ட் ப்ரஷரால் தேவையற்ற ரன் அவுட்கள்தான் நிகழ்ந்தது.

ராகுல் ட்ராவிட்டுக்கு பிறகு யார் என்கிற கேள்விக்கு இந்திய அணிக்கு பதிலாக கிடைத்தவர் புஜாரா. ஆனால், பல நேரங்களில் ராகுல் டிராவிட்டே இவ்வளவு டிஃபன்ஸிவ் ஆக ஆடியிருக்கவில்லை. இந்த சிட்னி டெஸ்ட்டில் ராகுல் டிராவிட் இருந்திருந்தால் கூட இவ்வளவு டிஃபன்ஸிவ்வாக ஆடியிருக்கமாட்டார். காரணம், டிராவிட் அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ய முற்படுவார். இதே ஆஸிக்கு எதிராக ஈடன் கார்டனிலும் அடிலெய்டிலும் லட்சுமணோடு சேர்ந்து இவர் ஆடிய அசாத்திய ஆட்டத்தில் கூட ஆஸிக்கு எதிராக கவுன்ட்டர் அட்டாக்தான் செய்திருப்பார். 'எங்களுக்கு ஸ்கோர்போர்டு ப்ரஷர் இருந்தது. விக்கெட் ப்ரஷர் இருந்தது. எந்த பந்திலெல்லாம் பவுண்டரி அடிக்க முடியுமோ அந்த பந்தில் எல்லாம் பவுண்டரி அடித்தோம்' என VVS லக்ஷ்மண் அந்த போட்டிகள் குறித்து பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வெறுமென டிஃபன்ஸிவ் ஆட்டம் ஆடுவதற்கானது மட்டுமல்ல; இங்கேயும் ரன்ரேட் ப்ரஷர் உண்டு என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

புஜாராவை மட்டுமே இந்த விஷயத்தில் குற்றம் சொல்ல முடியாது. புஜாரவை ஒரு எண்ட்டில் நிறுத்திவிட்டு ரஹானே இன்றைக்கு ஒரு சதம் போட்டிருந்தாலோ அல்லது கோலி இருந்து கவுன்ட்டர் அட்டாக் செய்திருந்தாலோ, புஜாராவின் ஆட்டம் நல்ல விதமாக பேசப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்கிறபோது, புஜாரா தன்னுடைய அணுகுமுறையை மாற்றிருக்க வேண்டும். அவர் அதை செய்யத்தவறிவிட்டார். புஜாராவை முழுமையாக ஒரு அட்டாக்கிங் பேட்ஸ்மேனாக மாறிவிடுங்கள் என யாரும் சொல்லவில்லை. அணிக்கு தேவைப்படும் நேரத்தில் 10 பந்துக்கு ஒரு சிங்கிள் எடுப்பதற்கு பதிலாக 5 பந்துக்கு ஒரு சிங்கிள் எடுக்கலாமே!

banner

Related Stories

Related Stories