விளையாட்டு

எடுபடாத ப்ளான் A... நாளை வெளிப்படுமா ப்ளான் B? - #IndvAus டெஸ்ட்டில் 166/2 குவித்த ஆஸி!

மழையின் காரணமாக ஆட்டம் இடையிடையே தடைபட்டதால் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய நாள் முடிவில் ஆஸி அணி 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

எடுபடாத ப்ளான் A... நாளை வெளிப்படுமா ப்ளான் B? - #IndvAus டெஸ்ட்டில் 166/2 குவித்த ஆஸி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. மழையின் காரணமாக ஆட்டம் இடையிடையே தடைபட்டதால் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய நாள் முடிவில் ஆஸி அணி 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

சிட்னி பேட்டிங் பிட்ச் என்பதால், டாஸ் வெல்லும் அணி சந்தேகமேயின்றி பேட்டிங்கைத்தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, டாஸ் வென்ற ஆஸி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸி அணியில் ஓப்பனர்களாக வார்னரும், அறிமுக வீரரான புகோவ்ஸ்கியும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் நவ்தீப் சைனி அறிமுகப்போட்டியில் களமிறங்கினார்.

இந்தியா சார்பில் முதல் ஸ்பெல்லை பும்ராவும் சிராஜும் வீசினர். பும்ரா முதல் ஓவரையே மெய்டனோடு தொடங்கினார். அறிமுக வீரரான புகோவ்ஸ்கியும் எந்த அவசரமும் இல்லாமல் பும்ராவை சிறப்பாக எதிர்கொண்டார். மிகப்பெரிய அபாயமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர்தான் ரொம்பவே சுமாராக ஆடி விக்கெட்டை கொடுத்தார். வார்னரின் ப்ளேயிங் ஸ்டைலே இன்றைக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐ.பி.எல் போட்டிகளில் எப்படி கிடைக்கிற கேப்பில் எல்லாம் தட்டிவிட்டு பரபரவென சிங்கிள் ஓடுவாரோ அதேமாதிரியேதான் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தார். பிட்ச் என்ன மாதிரியான தன்மையோடு இருக்கிறது... பௌலர்கள் என்ன மாதிரியான ப்ளான்களோடு வந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வார்னருக்கு பொறுமை இல்லை. எல்லா பந்துகளுக்கும் பேட்டை விட்டுக்கொண்டே இருந்தார்.

பாயின்ட் ஃபீல்டரை மட்டும் வைத்துவிட்டு கவரை ஓப்பனாக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நல்ல ரூம் கொடுத்து சிராஜை போட வைத்தார் ரஹானே. 4–வது ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடாக வீச, அதற்கு பேட்டை விடுவார் வார்னர். அது மீட் ஆகவில்லை. அடுத்த பந்தையும் அதே மாதிரி வீசினார் சிராஜ். எதைப் பற்றியுமே யோசிக்கும் மனநிலையில் இல்லாத வார்னர், சுலபமாக லீவ் செய்ய வேண்டிய அந்த பந்துக்கு பேட்டை விட்டு, அது எட்ஜ்ஜாகி, ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். டேஞ்சர் வார்னரை சீக்கிரம் வெளியேற்றிவிட்டது இந்திய அணி.

இதன்பிறகு, நம்பர் 3–ல் லபுஷேன் வர புகோவ்ஸ்கியும் லபுஷேனும் கூட்டணி போட்டனர். எட்டாவது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மழை குறுக்கிட, ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. மதிய உணவு முடிந்து மெதுவாக ஆட்டம் ஆரம்பித்தது. இந்த இரண்டாவது செஷன் முழுவதுமே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. லபுஷேனும் புக்கோவ்ஸ்கியும் அற்புதமாக இந்திய அணியின் பௌலிங்கை எதிர்கொண்டனர்.

லபுஷேன், புகோவ்ஸ்கி, ஸ்மித் மூவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பேட்டிங் ஸ்டைலை மட்டுமல்ல, தடுமாறுவதிலும் ஒரே மாதிரி ஸ்டைல் உடையவர்கள். இன்கம்மிங் டெலிவரிகளை எதிர்கொள்வதில் மூவருக்கும் சிரமம் இருக்கிறது. கடந்த போட்டிகளில் பும்ரா, அஸ்வின் இருவரும் லபுஷேன், ஸ்மித்தின் இந்த பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இன்றைக்கு இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி வைத்திருந்த ப்ளானும் இதுதான். ஆஃப் சைடை கொஞ்சம் ஃபீரியாக்கிவிட்டு லெக் ஸ்லிப், லெக் கல்லி, ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் என லெக் சைடை மொத்தமாக கட்டம் கட்டினார் ரஹானே. இந்த ப்ளானுக்கு ஏற்றவாறே சிராஜ், பும்ரா இருவரும் ஆங்கிள் கிரியேட் செய்து குட் லெந்தில் இன்கம்மிங் டெலிவரிகளை வீசினர். ஆனால், இந்த அட்டாக்கையும் புகோவ்ஸ்கி-லபுஷேன் கூட்டணி சிறப்பாகவே எதிர்கொண்டது.

புகோவ்ஸ்கி, லெக் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து ஆஃப் ஸ்டம்ப் வரை நகர்ந்து வந்து Front Foot ஐ பிரதானமாக வைத்து ஆடும் டெக்னிக்கில் பிழையிருப்பதாக கமென்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால், புகோவ்ஸ்கி பெரிதாக எந்த பந்துகளையும் எதிர்கொள்ள தடுமாறியதாகவே தெரியவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய இன்கம்மிங் டெலிவரிகளை பேடில் கூட வாங்காமல் சரியாக பேட்டில் மீட் செய்து கொண்டிருந்தார் அந்த அறிமுக வீரர். புகோவ்ஸ்கி கொஞ்சம் சீராக ரன்னை உயர்த்திக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் லபுஷேன் ரொம்பவே பொறுமையாக ஆடி நிலைத்து நின்றார்.

இவர்கள் பெரிதாக தடுமாறாத போதும் இந்திய அணி தொடர்ந்து அந்த இன்கம்மிங் டெலிவரிகளை வீசுவதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியது. இடையே ரிஷப் பன்ட் இரண்டு கேட்ச்சுகளையும் ட்ராப் செய்து ஏமாற்றினார். இந்த இரண்டாவது செஷன் முழுவதுமே இந்திய அணியால் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. இரண்டாவது செஷன் முடிவில் ஆஸி 93-1 என்ற நிலையில் இருந்தது. தன் அறிமுகப் போட்டியில் அரை சதம் கடந்தார் புகோவ்ஸ்கி.

இரண்டாவது செஷனின் தொடக்கத்திலேயே சைனி அறிமுகப்படுத்தப்பட்டார். சைனி வந்தவுடனேயே ஆஸியின் ரன் வேகமும் கூடியது. இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை அட்டாக் செய்து ஆட வேண்டும் என்பதை ஆஸி தொடக்கத்திலிருந்தே ஒரு ப்ளானாக வைத்திருக்கிறது. சைனியின் பந்தில் இரண்டு பவுண்டரிகளை அடித்த புகோவ்ஸ்கி, சைனியின் ஓவரிலியே ஆட்டமும் இழந்தார். சைனி வீசிய 35–வது ஓவரின் இரண்டாவது பந்தில் lbw ஆகி 62 ரன்னில் வெளியேறினார் புகோவ்ஸ்கி. அதுவரை குட் லெந்திலேயே வீசிக்கொண்டிருந்த சைனி அந்த பந்தை இன்னும் கொஞ்சம் ஸ்டம்ப் லைனுக்கு நெருக்கமாக ஃபுல் லெந்தில் பிட்ச் ஆகி இன்கம்மிங் டெலிவரியை 143 கி.மீ. வேகத்தில் வீச, வழக்கம்போல ஆஃப் ஸ்டம்பை நோக்கி நகர்ந்து வந்த புகோவ்ஸ்கி, வேகத்தை கணிக்க முடியாமல் காலில் வாங்கி lbw ஆனார்.

அடுத்ததாக நம்பர் 4–ல் ஸ்மித் உள்ளே வந்தார். ஸ்மித் க்ரீஸுக்குள் வந்த உடனே வேகவேகமாக ரன்களை குவித்தார். பும்ரா, சைனி இருவரின் ஓவர்களிலும் மூன்று பவுண்டரிகளை அடித்தார். ஸ்மித் செட்டில் ஆவதற்குள் வெளியேற்றிவிட வேண்டும் என்பதால் அஸ்வினை அழைத்து வந்தார் ரஹானே. அஸ்வினையும் தைரியமாக எதிர்கொண்டார் ஸ்மித். அஸ்வின் வீசிய முதல் 6 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை க்ரீஸை விட்டு இறங்கி வந்து அட்டகாசமாக ஆடினார். ஸ்மித் அடித்த ஐந்தில் 4 பவுண்டரிகள் டவுன் தி க்ரவுண்டில் ஸ்ட்ரைட் பேட்டாக அடிக்கப்பட்டவை. ஸ்மித் ஸ்ட்ரைட் பேட்டில் ஆடுகிறார் என்றாலே அவர் ரொம்பவே சௌகரியமாக ஃபார்முக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஐ.பி.எல் தொடரில் மோசமான ஃபார்முக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்த போதும் இப்படித்தான் ஆடியிருப்பார்.

அஸ்வின் மெல்பர்னில் 55% டெலிவரிகளை லெக் ஸ்டம்ப் லைனில் வீசியிருந்தார். இன்றைக்கும் அதேமாதிரியே லெக் ஸ்டம்பை குறிவைத்துதான் வீசிக்கொண்டே இருந்தார். அஸ்வின் என்றில்லை, இந்திய பௌலர்கள் எல்லாருமே இதையேதான் செய்து கொண்டிருந்தனர். இந்தத் திட்டம் அடிலெய்டு மற்றும் மெல்பர்ன் டெஸ்ட்டில் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்க்கில்லை. ஆனால், அந்தத் திட்டம் சொதப்பும்போது, கைவசம் வேறு திட்டங்களும் இருக்கவேண்டும். இந்தப் போட்டிக்கு முன்னதான ப்ரஸ்மீட்டில் ரஹானே, 'நாங்கள் Plan A,B,C,D என பல திட்டங்களை வைத்துள்ளோம்' என கூறியிருப்பார். ஆனால், இந்திய அணியிடம் இன்கம்மிங் டெலிவரிகளை வீசுவதைத் தவிர்த்து ப்ளான்-B இருந்ததாக தெரியவில்லை.

ஸ்மித், லபுஷேன் எல்லாம் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்வார்கள் என எதிர்பார்ப்பது மூடத்தனம். இன்றைக்கு அவர்கள் மிகச்சுலபமாக இந்தியாவின் அட்டாக்கை சமாளித்து ரன்கள் குவிக்க தொடங்கிவிட்டனர். இறுதியாக, இன்றைய நாள் முடிவில் ஆஸி அணி 162-2 என்ற நிலையில் இருந்தது. லபுஷேன் 67 ரன்களிலும் ஸ்மித் 31 ரன்களிலும் ஆட்டமிழக்கமாமல் இருந்தனர்.

ப்ரஸ்மீட்டில் ரஹானே சொன்ன ப்ளான் B,C,D ஆகியவை, நாளை களத்தில் வெளிப்பட்டாக வேண்டும். ஆஸியை 300 ரன்களுக்குள் சுருட்டினால்தான் இந்தியா இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

banner

Related Stories

Related Stories