விளையாட்டு

சம பலத்துடன் களமிறங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்... நாளை அனல் பறக்கப்போகும் ஆட்டம்! #INDvAUS

நாளை சிட்னியில் நடைபெறப் போகும் முதல் ஒருநாள் போட்டி நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சம பலத்துடன் களமிறங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்... நாளை அனல் பறக்கப்போகும் ஆட்டம்! #INDvAUS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் முடிந்த கையோடு துபாயிலிருந்து ஆஸ்திரேலியா பறந்து சென்ற இந்திய அணி நாளை முதல் ஒருநாள் தொடரில் ஆடவிருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர் இது. கடைசியாக பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தது மென் இன் புளூ. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற வேண்டிய தொடர், ஊரடங்கு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியும் ஊரடங்கிற்குப் பிறகு இங்கிலாந்தில் ஒரு தொடர் மட்டுமே ஆடியிருக்கிறது. அதன்பிறகு, இப்போதுதான் அவர்கள் சொந்தமண்ணில் முதல் தொடரை ஆடவிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்குமே இந்தத் தொடர் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்த சீரிஸை நடத்துவதில்தான் ஆஸி கிரிக்கெட் போர்டும் மும்முரமாக இருந்தது. இந்தத் தொடரின் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை இன்னமும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறது Cricket Australia.

ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என தோல்வியை தழுவியுள்ளது. ஆனால், இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் அவ்வளவாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய அணி ஒயிட் பால் கிரிக்கெட் ஆடி 300 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று ஆடியது கொரோனா அவசரத்தில் குறுகிய காலத்தில் நடைபெற்ற தொடர். அதனால், இந்த தொடர்களை வைத்து நிச்சயமாக இரு அணிகளின் நிகழ்கால ஃபார்மை கணக்கிட்டுவிட முடியாது.

பொதுவாக பார்த்தால், இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே இருக்கின்றன. ஆஸியை பொறுத்தவரையில் வார்னர் ஐ.பி.எல் தொடரில் வழக்கம்போல் வெறித்தனமாக ஆடியிருக்கிறார். அதேநேரத்தில் ஃபின்ச் இந்த ஐ.பி.எல் சீசனில் அவ்வளவாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. அப்படியிருந்தாலும் அவரை வெறுமென ஐ.பி.எல் தொடரை மட்டுமே வைத்து குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

ஸ்மித் இந்த ஐ.பி.எல் சீசனில் ஒன்றிரண்டு அரைசதம் அடித்திருந்தாலும் வழக்கமான ஸ்மித்தை நாம் பார்க்க முடியவில்லை. அவரின் பேட்டிங்கில் அத்தனை அவசரமும் பொறுப்பற்ற தன்மையும் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்மித்தே கூட அதை ஒப்புக்கொண்டிருந்தார். மேலும், இப்போது சரியான பேட்டிங் ரிதம் செட் ஆகிவிட்டதாக கூறி இந்திய பௌலர்களுக்கு எச்சரிக்கையெல்லாம் விடுத்திருந்தார்.

சம பலத்துடன் களமிறங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்... நாளை அனல் பறக்கப்போகும் ஆட்டம்! #INDvAUS

லாபுஷான் பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருப்பார். நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கே.எல்.ராகுலும் அவரை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருந்தார். மேலும், அவருக்கான ஒரு பிளானை நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். அவரது விக்கெட்டுக்கு இந்திய பௌலர்கள் செய்யப்போகும் ஸ்ட்ரேட்டஜி நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பலாம்.

ஸ்டாய்னிஸ், தொட்டதெல்லாம் தங்கம் என்கிற நிலையில் இருக்கிறார். பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி, இந்திய அணி இவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த லிஸ்டில் மேக்ஸ்வெல் மட்டுமே சமீபத்தில் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார். ஆனால், அவர் தொடர்ந்து சொதப்புவார் என எதிர்பார்க்க முடியாது. திடீரென வீறுகொண்டு ஆட்டத்தையே இந்திய அணியின் கையிலிருந்து தூக்கிச் சென்றுவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒரு நாள் போட்டியில் அலெக்ஸ் கேரியுடன் சேர்ந்து கையை விட்டுச்சென்ற ஆட்டத்தில் ஒரு சதம் போட்டு ஆஸியை வெல்ல வைத்திருப்பார். அந்த வெற்றிதான் ஆஸியை அந்த தொடரையும் கைப்பற்ற வைத்தது. அப்படியொரு பெர்ஃபார்மென்ஸைதான் ஆஸி அணி மேக்ஸ்வெல்லிடம் இருந்து எதிர்பார்க்கிறது. பௌலிங்கில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஆடம் ஜாம்பா, அகர் என ஒரு செட்டிலான டிபார்ட்மெண்ட் இருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா இல்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும் அவரின் இடத்தை நிரப்புவதற்கு மயங்க் அகர்வால் இருக்கிறார். பௌலிங்கிலும் இந்தியா நல்ல செட்டிலான அணியாகத்தான் இருக்கிறது. இரண்டு அணிகளையும் தராசில் வைத்துப் பார்த்தால் சரிசமமாகவே இருக்கும் என்பதால் நாளை சிட்னியில் நடைபெறப் போகும் முதல் ஒருநாள் போட்டி நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

banner

Related Stories

Related Stories