விளையாட்டு

IPL 2019 : முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி இந்த ஐ.பி.எல் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

IPL 2019 : முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் வீரர்கள் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே கெய்ல் அவுட்டாகி வெளியேற வேண்டியது. உமேஷ் யாதவ் முதல் ஓவரின் 5வது பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பெங்களூரு அணி இதனை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை. அதன்பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை தாக்கியது தெரியவந்தது.

இந்த கண்டத்தில் இருந்து தப்பிய கெய்ல் பவர்- ப்ளேவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். பவர்-ப்ளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது. சாஹல் ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ராகுல் இரண்டாவது பந்தில் இறங்கி வந்து ஆட முயற்சித்தார். பந்து அவரை ஏமாற்றிவிட பார்த்திவ் பட்டேல் ஸ்டெம்பிங் செய்து ராகுலை வெளியேற்றினார். அடுத்து வந்த அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார்.

IPL 2019 : முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கெயில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தனது 27-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சர்ஃப்ராஸ் கான் , சாம் கரண் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினாலும் கெயில் நிலைத்து நின்று விளையாடினார். இறுதியில் அவருக்கு மந்தீப் சிங் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெய்ல் 99 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேல், விராட் கோலி களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி, ஏபி-டி வில்லியர்ஸ் ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL 2019 : முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!

அதன்பின்னர் டிவில்லியர்ஸுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் நின்றதால் ஸ்டோய்னிஸுக்கு அழுத்தம் ஏற்படவில்லை. அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸும் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் இலக்கை எட்டி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார்.

banner

Related Stories

Related Stories