அரசியல்

குடியரசுத் தலைவரிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்! - பட்டியல் உள்ளே!

“தேர்தல் ஆணையத்தின் தனிநபர் ஆதிக்கத்தைத் தடுத்து, ஒவ்வொரு முடிவும் கூட்டு முடிவாக எடுக்கப்பட்டுவதை உறுதிசெய்ய வேண்டும்” என குடியரசுத் தலைவருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

குடியரசுத் தலைவரிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்! - பட்டியல் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision – SIR), தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகியவை குறித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விரிவான மனுவை அனுப்பியுள்ளார்.

அதில் குடியரசுத் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட ஒன்பது முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு,

அரசியலமைப்பின் 86(2)-ஆவது உறுப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தி அனுப்பி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுவிலும் பொதுவெளியிலும் உள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 324(5)-ஆவது உறுப்பு, 124(4)-ஆவது உறுப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 11-ஆவது பிரிவின்படி பதவிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

அரசியலமைப்பின் 78-ஆவது உறுப்பின்படி பிரதமரிடமிருந்து தகவல்களைப் பெற்று, இந்த நாடாளுமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் ஆணையத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தாதிருப்பதையும், ஒவ்வொரு முடிவும் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படி கூட்டு முடிவாக எடுக்கப்பட்டு அதன் கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

2025 SIR நடவடிக்கையின்போது தமிழ்நாட்டின் வரைவுப் பட்டியலில் இடம்பெறாமல் போன 97,37,832 வாக்காளர்களின் பெயர் நீக்கங்களின் சட்டப்பூர்வத்தன்மை, 23-02-2026 இறுதிப் பட்டியல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மீதான தாக்கம் ஆகியவை குறித்து அரசியலமைப்பின் 143-ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.

குடியரசுத் தலைவரிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்! - பட்டியல் உள்ளே!

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட SIR அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி, SIR-க்கு முந்தைய பட்டியலை மீண்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் SIR நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின்படி உரிய கால அவகாசம், தனிப்பட்ட அறிவிப்பு, விசாரணை வாய்ப்பு வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

ECINET, ERONET தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வெளியிலுள்ள நிபுணர்களால் தடயவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மென்பொருள் கட்டுப்பாடுகள், பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், 24-06-2025 உத்தரவு தொடர்பான கோப்புகள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், ஆணையர்களின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அதன் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகள் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படி செல்லத்தக்கவையா என்பது குறித்து அரசியலமைப்பின் 143-ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.

தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல்களில் VVPAT ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கக் குடியரசுத் தலைவர் தமது அரசியலமைப்பு அதிகாரங்களுக்குட்பட்டு தேவையான பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்!

banner

Related Stories

Related Stories