
“தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது” என தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,
“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; ஆணவக் கொலைகள்; காவல் மரணங்கள்; காவல்துறை கைதுக்கு பிறகு ஏற்படக்கூடிய மரணங்கள் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக்கூடிய சூழலை பார்க்கிறோம்.
அதைவிட கவலைக்குரிய ஒன்று, இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள்தான்.
ஆனால், குற்றங்களில் ஈடுபடும் த.வெ.க நிர்வாகிகள் மீது கடுமையான புகார்கள் எழுந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதனால் சட்டம் - ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது
மக்கள் சிக்கல்களை பேசவேண்டிய சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது என்பதற்கான உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”






