
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ தி.மு.இராசேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ இரா. செந்தில்செல்வன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்ததுடன் தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகவும் அளித்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் இருவரையும் வெற்றி பெற வைத்த கடையநல்லூர், சீர்காழி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும். எங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் எங்களது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனது தம்பிகளை வெற்றி பெற வைத்தால் ஐந்தாண்டு காலத்துக்கு சிறப்பான சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள் என்று தேர்தல் பரப்புரையின் போது தலைவர் வைகோ அவர்கள் சொன்னார்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு 23.5.2026 கடையநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்திலும் அதைக் குறிப்பிட்டார்கள்.
மே 4 முதல் ஜூன் 15 வரை சட்டமன்றத்தில் தி.மு.க. கொறடா உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள் என்றும், நடந்து கொள்வார்கள் என்றும் ஊடகங்களில் சொன்ன பொதுச்செயலாளர் வைகோவின் நிலைப்பாடு ஜூன் 16 அன்று தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின் சந்திப்புக்குப் பிறகு மாறத் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து எங்களை பொதுச்செயலாளர் வைகோ ராஜினாமா செய்யச் சொன்னார்.எங்களை ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்.
இதைத் தெரிந்து கொண்ட தொகுதி மக்களும், பொதுநல அமைப்பினரும், 'நீங்கள் ராஜினாமா செய்யக் கூடாது, சட்டமன்ற உறுப்பினராகவே தொடர வேண்டும்' என்று அறிவுறுத்தினார்கள். 'வாக்களித்த எங்களுக்கு மரியாதை தரும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தக் கருத்துக்களை பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் நேரில் சொன்னோம். அவர் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் ஆறு மாத காலத்துக்கு அமைதியாக இருப்பது என்று முடிவெடுத்து அமைதியாகவே இருந்து வந்தோம்.

இந்த சூழலில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், 'அவர்கள் இருவரும் ஒரு மாதத்துக்கு முன்பே விலை போய்விட்டார்கள்" என்றுபேட்டி அளித்து தொண்டர்கள் மத்தியில் எங்கள் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கியது எங்களை வேதனைக்கு உள்ளாக்கியது.
சுமார் நாற்பது ஆண்டு காலமாக வைகோ பின்னால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்த எங்களுக்கு இறுதியாக கிடைத்தது இது போன்ற இழிவான பழிச்சொல்லே. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறோம்.
ஆளும் கட்சி கூட்டணியில் சேர்வோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராகக் கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
சின்னஞ்சிறு வயது முதல் நாங்கள் நேசித்த திராவிட இயக்கத்தின் கம்பீரமான அடையாளமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றிட உறுதியேற்று இந்திய நாடு வியந்து பார்த்த திராவிட மாடல் ஆட்சியைக் கொடுத்த போற்றுதலுக்குரிய முன்னாள் முதலமைச்சர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை .8.2026 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
எங்களை அன்போடு அழைத்து அரவணைத்து வாழ்த்திய கழகத் தலைவர் அவர்களுக்கும், அரசியல் வானில் நம்பிக்கைக்குரிய எதிர்காலமாக விளங்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்கத்தின் அனைத்து முன்னணியினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கவும், திராவிடக் கொள்கைகள் இம்மண்ணில் வலிமை பெறவும் சிப்பாய்களாக களத்தில் நின்று கடமை ஆற்றுவோம்.
வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.






