
சமீபகாலமாக தவெக-வினர் அத்துமீறி பள்ளிகளுக்குள் நுழைந்து செய்துவரும் அநியாயங்கள், பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து, பள்ளிகளை தங்களுக்கேற்ற அரசியல் களமாக மாற்ற நினைக்கின்றனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக தொழில்நுட்ப அணி, கல்விக் கூடங்கள் என்பவை அறிவை வளர்க்கும் ஓர் இடம், அவை எதிர்காலத் தூண்களை உருவாக்கும் புனிதமான இடங்கள். ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் சில அரசியல் கூத்துகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளன.
தவெக தலைவர் பிறந்தநாள் என்ற பெயரில், தவெகவினர் பள்ளிகளுக்குள் நுழைந்து, பிஞ்சு மாணவர்களைத் தங்களின் சுயவிளம்பரத்திற்காகப் பயன்படுத்தி வாழ்க கோசம் போட வைப்பது ஆபாச வரிகள் கொண்ட பாடலுக்கு நடனம் ஆட வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்னும் விவரம் தெரியாத பிஞ்சு உள்ளங்களில் இப்போதே உங்களின் அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?
தவெகவின் அமைச்சர் ஒருவர் கல்வி கற்கும் இடத்தில், ஆபாச வரிகள் கொண்ட சினிமா பாடல்களுக்கு மாணவர்களை நடனமாட வைப்பதுதான் நீங்கள் கற்றுக்கொடுக்கும் ஒழுக்கமா? உங்கள் அரசியல் புகழைப் பாடுவதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தான் உங்களுக்குக் கிடைத்த பகடைக்காய்களா?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது நல்ல ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்கத்தான். ஆனால், ஊரான் வீட்டு நெய்யில் தங்கள் சுய புகழைப் பாட நினைக்கும் இந்த கேடுகெட்ட அரசியல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலாகும்.
பள்ளிக் கல்வித்துறை இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளி வளாகங்களுக்குள் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவரையோ, நடிகரையோ முன்னிறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. மாணவர்களைத் தங்கள் அரசியல் சுயலாபத்திற்குப் பயன்படுத்தும் தவெகவினர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இனிமேலும் பள்ளிக்கூடங்களை அரசியல் வியாபாரக் களமாக மாற்ற நினைத்தால், தமிழ்நாட்டு பெற்றோர்களும் பொதுமக்களும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறோம்!








