
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் புகைப்படத்தை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்ட நிகழ்விற்காக அகற்றியதைக் கண்டித்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் எளிய மக்களும் உலக அறிவைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில், மாவட்டந்தோறும் மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் மற்றும் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட அறிவுப் பெட்டகங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஆனால், தற்போதைய 'ரீல்ஸ் மாடல்' ஆட்சியில், நேற்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் புகைப்படம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அகற்றப்பட்டு, நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஐம்பதாண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர்..
மாநில உரிமைகளைக் காத்து நின்ற மாவீரர்..
மக்கள் நலத்திட்டங்கள் பல தந்த மகத்தான மனிதர்..

நம் உயிர் நிகர் தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றளித்த தலைமகன்..
இத்தனை வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் கலைஞர் அவர்களது புகைப்படத்தை அகற்றிடும் அளவிற்கு வன்மம் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி, தட்டுத் தடுமாறி ஆட்சி நடத்தும் உங்களுக்கு, இத்தகைய துணிச்சலைத் தந்தது யார்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அகற்றப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்களின் பதில் என்ன?
ஆட்சி - அதிகாரத்தினூடாக சிறிதும் அரசியல் நாகரிகமின்றி காழ்ப்புணர்ச்சியில் ஒரு மகத்தான தலைவரை இருட்டடிப்பு செய்ய நீங்கள் துணியலாம்..
ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழையோ – அவர் செய்திட்ட சாதனைகளையோ எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!”






