
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடுதான் நிதி மேலாண்மை பற்றி கற்றுக்கொடுக்கும் இடத்திலிருக்கிறது - கற்றுச் செல்லுங்கள் மனமிருந்தால்!
தமிழ்நாட்டின் நிதி மக்களுக்குச் செல்கிறது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் நிதி எங்கே செல்கிறது?
பா.ஜ.க. அரசு தரும் நிதி நெருக்கடிகளைச் சமாளித்து 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பது தமிழ்நாடு! பியூஷ் கோயல்(பல்ஸ்)களின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடுதான் நிதி மேலாண்மை பற்றி கற்றுக்கொடுக்கும் இடத்திலிருக்கிறது - கற்றுச் செல்லுங்கள் மனமிருந்தால்! தமிழ்நாட்டின் நிதி மக்களுக்குச் செல்கிறது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் நிதி எங்கே செல்கிறது? பா.ஜ.க. அரசு தரும் நிதி நெருக்கடிகளைச் சமாளித்து 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பது தமிழ்நாடு! பியூஷ் கோயல்(பல்ஸ்)களின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
குடுகுடுப்பைக்காரர் போலக் கூவியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்!
“தமிழ்நாடே திவாலாகப் போகிறது - திவாலாகப் போகிறது” என்று குடுகுடுப்பைக்காரர் போலக் கூவியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்! பா.ஜ.க.வினர் இதற்கு முன்னால் “நல்லகாலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது” (அச்சே தின் ஆயேகா) என்று அவர்களெல்லாம் கூவியபோதும், அதற்கென்ன மரியாதை இருந்ததோ அது தான் இப்போதும் என்றாலும், அவரது குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதையும், உண்மையில் பெரும் நிதிச் சிக்கலுக்கு ஆளாகியிருப்பது யார் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியது அவசியமாகும்.
அதற்கு முன்னால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது - தமிழ்நாட்டைத் திவாலாக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வினரின் ஆசை. அதற்குப் பல வழிகளிலும் முயன்று, நிதியை நிறுத்தி, மறுத்து, குறைத்து - இவையெல்லாம் பயனளிக்கவில்லை என்றதும் தங்கள் ஆசையை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்று தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் கடன்சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது என்றும், தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது; அது திவால் ஆகும் நிலையில் உள்ளது என்று குற்றம் சாட்டியிருப்பதுடன், ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது என்றும் கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல். பற்றாக்குறை பட்ஜெட் என்று பேசியிருக்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்தும், ஓர் அரசின் பட்ஜெட் எனப்படும் வரவு – செலவு அறிக்கை குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் அடிப்படைப் புரிதலுடன் தான் அவர் பேசியிருப்பார் என்று நம்பமுடியவில்லை.
தமிழ்நாட்டின் கடன் குறித்த உண்மை நிலவரம் என்ன?
கடந்த நிதி ஆண்டு வரை தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமார் 10.7 லட்சம் கோடி ரூபாய்.
தமிழ்நாடு, பாதுகாப்பான அளவில் தான் 26.43% கடன் பெற்றுள்ளது
இந்தியாவின் 15 ஆம் நிதி ஆணையம் (15th Finance Commission) பரிந்துரையின்படி, ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 28.70% வரை ஓர் அரசு கடன் வாங்கலாம். ஆனால், தமிழ்நாடு அதைவிட குறைவாக, பாதுகாப்பான அளவில் தான் 26.43% தான் கடன் பெற்றுள்ளது.
இன்னும் சொல்லப் போனால், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த கடனை விட, அதற்கடுத்து இரண்டு முறை வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் (2011-2016, 2016-2021) தலா 150% அதிகமாகக் கடன் வாங்கினர். ஆனால், 2021இன் கடன் அளவை விட, கடந்த அய்ந்து ஆண்டுகளில் 70% மட்டுமே அதிகம் கடன் வாங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து 2021 ஆம் ஆண்டு வெளியேறிய அ.தி.மு.க. என்ன நிலைமையில் தமிழ்நாட்டை விட்டுவிட்டுச் சென்றது? கஜானா காலி - ஏராளமான கடன்கள் - பொருளாதார முடக்கம் - இவைதானே அன்றைய நிலை!
2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த நிலையில் இருந்து, இந்த அய்ந்து ஆண்டுகளில் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சமாளித்து, பொருளாதாரத்தில் வளர்ச்சியை உண்டாக்கி, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தி முன்னேற்றப் பாதையில் முடுக்கிவிட்டது ‘திராவிட மாடல்’ அரசுதானே!
எல்லாமே பற்றாக்குறை பட்ஜெட் தானே!
தமிழ்நாட்டின் கணக்கு இருக்கட்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட் போடுகிறதே, எத்தனை முறை உபரி பட்ஜெட் (Surplus Budget) போட்டிருக்கிறார்கள்? எல்லாமே பற்றாக்குறை பட்ஜெட் (Deficit Budget) தானே!
இந்தியாவின் கடன் எவ்வளவு? கடந்த மாதம் வரைக்கும் 197.18 லட்சம் கோடி, அடுத்த ஆண்டிற்குள் இது ரூ.214.82 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். சராசரியாக ரூ.200 லட்சம் கோடி என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசு செலுத்தும் வட்டி மட்டும் ரூ.13 லட்சம் கோடி என்றும், இது மொத்த இந்திய அரசின் வருவாயில் 33.8% (மூன்றில் ஒரு பங்கு) என்றும் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

இந்த பா.ஜ.க. பொருளாதாரப் புலிகள் ஆண்டுக்காண்டு கட்டும் வட்டியை விட தமிழ்நாட்டின் மொத்தக் கடன் தொகையே ரூ.3 லட்சம் கோடி குறைவுதான்.
உண்மையில் கடுமையான நிதி நெருக்கடியில்
சிக்கித் தவிப்பது இந்திய ஒன்றிய அரசு தான்!
ஒரு தனி மனிதர் - ஒரு குடும்பம் பட்ஜெட் போடுவதற்கும், ஓர் அரசு கடன் வாங்குவதற்கும், பட்ஜெட் போடுவதற்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு என்பதை சாதாரணப் பொருளாதார அறிவு கொண்டவர்கள் அறிவார்கள். உண்மையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது இந்திய ஒன்றிய அரசு தான். மருத்துவரே முதலில் உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்பது தான் நமது அறிவுரை.
மேலும், நிதியைப் பயன்படுத்துவதில் திமுக அரசு பொறுப்பின்றி நடந்து கொள்கிறது என்றும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன என்றும், 50 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் பியூஷ் கோயல்.
தமிழ்நாட்டு அரசின் நிதி எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பும் பியூஷ் கோயலுக்குச் சொல்கிறோம். தமிழ்நாடு அரசு மனிதவளத்தில் முதலீடு செய்கிறது. கல்வியில், தொழில் வளர்ச்சியில், மகளிர் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறது. இதனை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகின்றன. நேரடியாக மக்களுக்கு நிதி செல்கிறது. சமூகத்தில் முதலீடு செய்கிறது.
தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு இல்லை; பள்ளி இடைநிறுத்தல் இல்லை - காலை உணவுத் திட்டத்தின் காரணமாக! மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்கள் இல்லாமல் நோயுற்றவரைச் சைக்கிளில் வைத்துத் தள்ளிவரும் அவலம் இல்லை. மக்களைத் தேடி மருத்துவம் செல்கிறது. இல்லம் தேடிக் கல்வி செல்கிறது. ஒருவரையும் விடமாட்டோம் என்று உறுதியேற்று அதற்கேற்ற திட்டங்களை வகுக்கிறது தமிழ்நாடு திராவிடமாடல் அரசு!
‘‘பியூஷ் கோயலின் கேள்விக்கு, பதில் கேள்வியாக, தமிழ்நாட்டு முதலமைச்சர் கேட்டுள்ளதையே நாமும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் கொடுக்கும் நிதி எங்கே செல்கிறது? தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் உரிய பங்கைத் தராமல், நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் அதில் 28 பைசாவை மட்டும் திருப்பித் தரும் ஒன்றிய அரசு, உத்தரப் பிரதேசத்திற்கும், பீகாருக்கும், தங்கள் ஆட்சி நாற்காலிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆந்திராவுக்கும் அள்ளிக் கொடுக்கிறதே! எங்களுக்கு நியாயமாக, உரிய காலத்தில் தர வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கை ஒன்றிய அரசு காலம் தாழ்த்தித் தாழ்த்தித் தருகிறதே! இதுதான் கூட்டுறவுக் கூட்டாட்சியா? (Cooperative Federalism).’’
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய கல்வி நிதியை, மும்மொழித் திட்டத்தை ஏற்றால் தான் தருவோம் என்று திமிர்வாதத்துடன் பேரம் பேசுகிறாரே ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையாலேயே
தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே!
எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பகிர்வு உரிய அளவில் வந்தால், தமிழ்நாட்டிற்கு நிதிச் சிக்கலே இருக்காதே! எங்கள் தேவைகளை நாங்களே நிறைவேற்றிக் கொள்வோமே! கடன் வாங்கும் நிலைமையை உருவாக்கியவர்களே நீங்கள் தானே! எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே! இப்போதே பொருளாதாரத்தில் 11.19% என்ற அளவைக் கடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் தடைகள், முட்டுக்கட்டைகள், பாராமுகங்கள், உரிமைப் பறிப்புகள் எல்லாம் இல்லாமல் இருந்தால், இன்னும் பல மடங்கு முன்னேறியிருக்குமே!
‘ஊழல்’ நிறைந்துள்ளது என்று குற்றம் சாட்டும் பியூஷ் கோயல்(பல்ஸ்)களால் அதை நிரூபிக்க முடியுமா? ஒன்றிய அரசு தொடுத்துள்ள வழக்குகளில் ஒன்றிலாவது உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் நிரூபிக்க முடிந்ததா? அவர்களின் கைகளில் தானே சி.பி.அய், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என்ற திரிசூலங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு தானே இந்தியாவின் எல்லா எதிர்க்கட்சிகளையும் வளைக்கிறார்கள்; ஆட்சிகளைப் பிடிக்கிறார்கள்; தமிழ்நாட்டிலும் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவற்றைக் கொண்டு ரெய்டு, ரெய்டு என்று அவ்வப்போது திமுக அமைச்சர்கள், முக்கியப் பொறுப்பாளர்களின் வீடுகளில் புகுந்து வருகிறார்கள். மனரீதியான தாக்குதலைத் தொடுக்கலாம் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. ஆனால், எந்த வழக்கிலாவது திமுகவினர் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா? கடந்த வாரத்திலேயே, முன்னாள் அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோர் வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளன. பறிமுதல் செய்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று உத்தரவு வருகிறது;
வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வருகிறது; திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வழக்கை நிறுத்தி வையுங்கள் என்று தீர்ப்பு வருகிறது. இந்தியாவில் அமலாக்கத் துறை தொடுத்த அரசியல் உள் நோக்கமுடைய வழக்குகளில் ஒரு சதவீதம் கூட நிரூபிக்கப்படவில்லையே! அபாண்டமான குற்றச்சாட்டுகள், அண்டப் புளுகுகளை எல்லாம் அள்ளிவிட்டுக் கொண்டே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிடலாம் என்று கருதுகிறார்களா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கடன் வாங்காமல் இருக்கிறார்களா?
நிதி மேலாண்மை பற்றி பாடம் எடுக்க விரும்புகிறவர்களைக் கேட்கிறோம் - உங்களுடைய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கடன் வாங்காமல் இருக்கிறார்களா? வட்டி கட்டவில்லையா? விவாதிக்கத் தயாரா?

பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் விற்றுக் கொண்டிருப்பது யார்? அதற்கென்று வெளிப்படையாக ஓர் அமைச்சகத்தை (Disinvestment Ministry) அமைத்தார் வாஜ்பேயி. ஆனால், அதை மறைத்து ஒளித்து நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாகவே Department of Investment and Public Asset Management (DIPAM) என்ற துறையை அமைத்துக் கொண்டு, விமான நிலையங்கள், துறைமுகங்களையெல்லாம் குத்தகைக்கு விடுவதும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தையே விற்றதும் யார்? பொதுத் துறை பற்றியெல்லாம் பேச ஒன்றிய அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் தகுதி உண்டா?
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கைத் தராமல், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒன்றிய அரசு விளம்பரங்களுக்குச் செலவிடுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளனவே!
தமிழ்நாடுதான் நிதி மேலாண்மை பற்றி கற்றுக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறது, வந்து கற்றுச் செல்லுங்கள்!
நிதி மேலாண்மை பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலான தமிழ்நாடுதான் நிதி மேலாண்மை பற்றி கற்றுக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறது, வந்து கற்றுச் செல்லுங்கள் - மனமிருந்தால்!






