அரசியல்

மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!

மும்பையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "மும்பையை 'பாம்பே' என மாற்ற வேண்டும்" என்று பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வரும் ஜனவரி 15ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழர்கள் உள்ள பகுதியில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜனவரி 9ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "மும்பை மாநகரம் மஹாராஷ்டிராவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது ஒரு சர்வதேச நகரம். இதனை மீண்டும் 'பாம்பே' என மாற்ற வேண்டும்" என பேசினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜ் தாக்கரே பேசுகையில், “தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்களுக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களை பால் தாக்கரே மஹாராஷ்டிராவிலிருந்து விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக இதுவரை அவதூறாகப் பேசிவிட்டு, இப்போது இப்படி பேசுகிறீர்களா?" என ஆவேசமாகக் கூறினார்.

மேலும், தாக்கரே ஆதரவாளர்களும், தொண்டர்களும் அண்ணாமலை கருத்துக்குக் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிலர் அண்ணாமலை திரும்பியும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால், அவரது காலையே வெட்டிவிடுவோம் என வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!

இதேபோல், உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்தும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க பாஜக சதி செய்வதையே அண்ணாமலையின் கருத்துமூலம் தெரிந்துகொள்ளவேண்டி உள்ளது. அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என்றார்.

தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்தும் அண்ணாமலை பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இருந்து மும்பை பிரியாது என்று பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால், பாஜகவின் பிரச்சாரத்திற்கு வந்த அண்ணாமலை மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமல்ல என்கிறார்.

யார் இந்த அண்ணாமலை? அவர் தான் பாஜக தேசிய தலைவரா? மராட்டியத் தியாகிகளை அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார். மேலும், அண்ணாமலையை லுங்கி அணிந்து வந்த நபர் என்று கடுஞ்சொற்களால் குறிப்பிட்ட சஞ்சய் ராவத், "எங்கிருந்தோ வந்து நம் கன்னத்தில் அறைகிறார். நமது தன்மானம் எங்கே போனது. அண்ணாமலை மீது ஆளும் பட்னாவிஸ் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் பின்னாலேயே மறைந்து கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!

இதுகுறித்து பதிலளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், “அண்ணாமலை பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அண்ணாமலைக்கு இந்தி பேச தெரியாது. அண்ணாமலை பாஜக தேசிய தலைவரும் இல்லை. அவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவரும் இல்லை. அவர் பேசியதை எடுத்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!

ஊரெல்லாம் சென்று பிரிவினையை விதைத்துவரும் வித்தையை மஹாராஷ்டிராவிலும் சென்று விதைக்க முற்பட்ட அண்ணாமலைக்கு சரியான பதிலடி கிடைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் பாஜகவினருக்கே இது பாதகமாக திரும்பியுள்ளது.

தற்போது, இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் பாஜகவினரே அண்ணாமலையை கைவிட்டு விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு, எதிர்கட்சிகளை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள பாஜக அரசு, இப்படிப்பட்ட பேச்சினால் மக்களை மராட்டிய மக்களை புண்படுத்தியுள்ள அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையமும், பாஜகவும் என்ற மக்களிடையே எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories