
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர் சுதா மூர்த்தி, மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கு (ECCE) உத்தரவாதம் அளிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் 21பி என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி சேவைகள் மூலம் தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்த சுதா மூர்த்தியை வாழ்த்திய திமுக எம்.பி. இரா.கிரிராஜன்...
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று கல்வியின் அவசியம் குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் திருவள்ளுவர் எழுதியுள்ளதை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார்.
அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கன்வாடிகள் உருவாக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், ஆனால் இன்றைக்கு அவற்றில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்கும் நிலை உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

முன்னர் பிள்ளைகளை அங்கன்வாடியில் சேர்த்தது போன்ற சூழல் இப்போது இல்லை என்றும், கின்டர் கார்டன் பள்ளிகள், கிரெச்சகள் ஆகியவற்றில் சேர்க்கும் நிலையில் இருக்கிறோம் என்றும், ஏனென்றால் அங்கன்வாடிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, சரியான கட்டடம் இல்லை, சரியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை, சத்தான உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டுகளை அடுக்கிய கிரிராஜன், அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அளவை விட குறைவாக இருப்பதாகவும், அதுவும் சரியான ஊதியமாக இல்லை என தெரிவித்தார்.
அதனால் அங்கன்வாடிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதுடன், மாநில அரசுகள் நல்ல கல்வியை வழங்கி வருவதை குறிப்பிட்டு, முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை மட்டுமல்லாமல், கல்லூரி படிப்புவரை அந்தந்த மாநில அரசுகள் சிறப்பான கல்வியை வழங்கும்போது, அங்கன்வாடிகளை பராமரிப்பது ஒன்றும் கஷ்டமான பணி அல்ல என்றும் கிரிராஜன் உரையாற்றினார்.
தமிழ்நாட்டிலே முதலமைச்சர் மு,க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, ஏழை எளிய மக்களை கல்வியில் மேம்படுத்துவதற்காக பல முன்னோடித் திட்டங்களையும், புதுமையான கொள்கைகளையும் அறிமுகப்படுத்திவருவதாக பெருமைபட தெரிவித்த திமுக எம். பி. கிரிராஜன், அங்கன்வாடிகளை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும்படியும், அதற்கான நிதியை கொடுகக்கும்படியும் வலியுறுத்தி, நாங்கள் நல்லவிதமாக பேணிக்காத்துக்கொள்கிறோம் என உறுதி அளித்தார்.

அங்கன்வாடிகளுக்கு வருகின்ற சமுதாயத்திலே பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை, உற்சாகத்தை, ஊக்கத்தை அளிக்க வேண்டிய ஒன்றிய அரசு, எந்தவித உதவிகளையும் செய்யாததால் அங்கன்வாடிகளின் நிலைமை மிகவும் மோசசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன், தமிழ் வழிக் கல்வி படிக்கும் மாணவிகள் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கிவருவதையும், மாணவர்களுக்கும் தலா ரூ. 1000 வழங்கி தமிழ்நாடு அரசு கல்வியை வளர்த்து கொண்டிருக்கிறது என பெருமைபாட தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடாக இருந்தாலும், வேறு எந்த மாநிலமாக இருந்தாலும், அங்கன்வாடிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தினார்.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடந்த 7.5.2022 அன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணக்கர்களுக்கு இலவசமாக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 15 .09.2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ரூ. 33.26 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால் 1,545 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணாக்கர் பயனடைந்து வருவதாகவும் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு முதல் மாநிலம் என்ற பெருமையுடையது தமிழ்நாடு என்ற கிரிராஜன், எங்களை பார்த்துதான் கனடாவில் இதே திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்றும், அங்கன்வாடிகளை ஒன்றிய நடத்த முடியாது என்றும், அதனால் எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறோம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் பிள்ளைகளை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசால், 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பாதுகாக்க முடியாதா என கேள்வி எழுப்பிய திமுக எம். பி. கிரிராஜன், குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அங்கன்வாடிகள் என்றும், அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் கல்வியை போதிக்க வேண்டும், உலக அறிவை புரியவைக்க வேண்டும் என்றால் அவற்றை அவர்களின் தாய்மொழியில் சொல்லிக்கொடுத்தால் தான் சிறப்பாக வரும் என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கான கல்வியை அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப, அந்தந்த மாநில மொழிகளிலே கற்றுத் தருவதுதான் ஏதுவாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார்.
2020ஆம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கை என்பது இந்தியை பிரதானமாக கொண்ட மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் என குறிப்பிட்ட அவர், தேசிய கல்வி கொள்கை இல்லாமலேயே முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற அனைத்து மாநிலங்ககளுக்கும் பொருந்தாதது என்றும் தெரிவித்தார்.
படிப்பு, பண்பாடு, பயனுள்ள வாழ்க்கை என்பது தான் எங்கள் தமிழ்நாட்டின் தாராக மந்திரம் என்றும், தரமான கல்வியை வழங்குவதில் தான் எந்த ஒரு அரசாங்கத்தின் வெற்றியும் உள்ளது என்பதையும் ஒன்றிய அரசுகக்கு எடுத்துரைத்தார்.
நாடு முழுவதும் கல்வித் துறையில் தான் விரும்பிய இலக்கை ஒன்றிய அரசு அடைய விரும்பினால், தமிழ்நாடு அரசின் கல்வி கொள்கை, முன்னோடித் திட்டங்கள், புதுமையான கொள்கைகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.






