
தமிழ்நாடு - பெரியார் மண்! ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி மண்! பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது, நிலைக்காது! என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்கு ஆசிரியர் கி.வீரமணியின் அறிக்கை வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
தமிழ்நாட்டின் ஆளுநராக – தமிழ்நாடு தி.மு.க. அரசிற்கு சதா தொல்லைக் கொடுத்து, அவதூறு பரப்பி, சட்டப்பேரவை மாண்பைக் குலைத்து, ஜனநாயக மரபுகளைச் சிதைத்து, ‘தானடித்த மூப்பாக’ நடந்து, ஒரு போட்டி அரசினை நாளும் நடத்திக் கொண்டுவரும் ஆர்.என்.ரவி அவர்கள் அரசு சம்பளத்தை (மக்கள் வரிப் பணம்) வாங்கிக் கொண்டு, அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பிரச்சாரச் செயலாளர் போலவே நடந்துகொள்வது, அந்தப் பெரிய பதவியின் தன்மைக்கே மிக, மிக மிகக் கேவலமாகும்!
ஒவ்வொரு நாளும் தனது ராஜ்பவனை ஒரு தனி அக்கிரகாரம்போல ஆக்கி, ஆதாரமற்ற, ஜமுக்காளத்தில் வடிகட்டிய, கலப்படமற்ற பொய்களைப் பரப்பி வருகிறார் – இதற்கு ‘மேலிட’ ஜாடை காரணமாகவும், ஊடகங்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் கை ஆயுதங்கள் என்பதாலும், ஊடக ஒத்துழைப்பும், விளம்பரமும் பெற்று வருகிறார்!
‘இனமலர்’ நாளேடு அவரது அதிகாரப்பூர்வ கெசட்!
‘கீறல் விழுந்த கிராமஃபோன் தட்டுக்குரல்’ போல...
இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் (அது தேர்தல் காலத்தில் தேவைப் பூர்த்திக்கென தொடங்கப்பட்ட ஒன்றாக இருக்கக் கூடும்) பேட்டி என்ற பெயரில், முன்பு கூறிய அரைவேக்காட்டுத்தனமான – ‘கீறல் விழுந்த கிராமஃபோன் தட்டுக்குரல்’ போல, திரும்பத் திரும்பத் தனி ஆவர்த்தனத்தை, தினமும் செய்து வருகிறார்! உளுத்துப் புளித்துப்போன அவரது சில குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு அரசு, திராவிடர் இயக்கம், ‘திராவிட மாடல்’ அரசுமீது கூறியுள்ளதைப் படியுங்கள்.
முன்பு அரைத்த மாவுதான், மீண்டும் அரைத்துள்ளார்.

‘‘திராவிடர் ஒரு தனி இனம் என்கின்றனர். தமிழ் மொழி, மற்ற மொழிகளுடன் தொடர்பு இல்லாதது என்று கூறுகின்றனர். இவை அனைத்தும், அய்ரோப்பிய சிந்தனைகளால் விதைக்கப்பட்டவை.
ஜெர்மன் நாஜியின் இனக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்து.’’
இது சரியானதா?
அட, அறிவின் கொழுந்தே, அரசியலின் பிரகஸ்பதியே,
மனுதர்ம சாஸ்திரத்தின் 10 ஆம் அத்தியாயம், 44 ஆவது சுலோகம் கூறுவதென்ன?
அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, நாட்டின் மூலாதாரச் சட்டமாக மனுதர்மமே வரவேண்டும் என்று இன்றும் சிறிதுகூட அறிவுத் தெளிவின்றி கூறி வருகிறதே ஆர்.எஸ்.எசும்., அதன் அரசியல் ஆளுமையான பா.ஜ.க.வும், அந்த மனுதர்ம சாஸ்திரத்தின் 10 ஆம் அத்தியாயம், 44 ஆவது சுலோகம் கூறுவதென்ன?
=> ஆர்.என்.ரவி அவர்களே, படியுங்கள்! :
‘‘பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தநதம், கசம் – இத்தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய்விட்டார்கள்’’
‘‘திராவிடம் வேறு; பாரதம் வேறு’’ என்று நாங்கள் சொல்லவில்லை; மனுஸ்மிருதி அல்லவா கூறுகிறது!
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரப் பிரமுகர் அவர்களே, இதுவும் வெள்ளைக்காரன், நாஜி ஹிட்லருக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட மனுஸ்மிருதியா?

=> ‘நாட்டுப் பண்’ பாடலும் வெள்ளைக்காரன் மொழியா? :
நாளும் நீங்கள் எழுந்து நின்று மரியாதை காட்டவேண்டிய ‘தேசிய கீதம்’, (‘நாட்டுப் பண்’ என்று கூறினால், உங்களுக்குப் பிடிக்காது என்பதால்) பாடப்படுகிறதே!
அதில் வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களது பாடலில், ‘‘திராவிட, உத்கல வங்கா’’ வருகிறதே, அதுகூட வெள்ளைக்காரன் மொழியா? கிழக்கே உள்ள வங்கம் எப்படி பற்பலப் பகுதிகளையும் இப்படி இணைத்துக் கூறுகிறது?
‘திராவிட’ கால்டுவெல் காலமும், மனுதர்ம சாத்திரக் காலமும் ஒன்றா? முந்தையதா?
‘தனித்து இயங்கும் தன்மை தமிழுக்கு உண்டு!
தமிழே ஞாலத்தின் பண்டு’ என்று புரட்சிக்கவிஞர் கவிதை பாடியது பிரிவினையா?
சமஸ்கிருதம் முன்னே இருந்த மூத்த மொழியா?
‘பிராகிருதம்’ என்பது சமஸ்கிருதத்திற்கு முந்தையதா, இல்லையா?
‘சமஸ்கிருதம்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
‘நன்றாக சமைக்கப்பட்டது’ என்ற பின்னால் சரிபார்த்து உருவாக்கப்பட்டதா?
தமிழுக்கு அப்படிப்பட்ட நிலை – வரலாறு உண்டா?
பீகார் தொழிலாளர்பற்றி ‘ஹிந்தி’ யூடியூப் ஒன்று, தமிழ்நாடு அரசின்மீது பரப்பிய அவதூறுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட கதை மறந்துவிட்டதா? ஒன்றிய அமைச்சர் ஒருவர், வழக்கிலிருந்துத் தப்பிக்க மன்னிப்புக் கேட்டாரே!
=> பீகார் சமூகநீதியாளர்களுக்கு பெரியார் – திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு வரவேற்புத் தந்தது தமிழ்நாடு! :
மண்டல் கமிஷன் பரப்புரையாளர்களான பீகார் தலைவர்கள் – பி.பி.மண்டல் உள்பட, விஜயப் பிரகாஷ் நாராயணன், கர்ப்பூரி தாக்கூர், டி.பி.யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் – தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளைகள்போல வந்து செல்லும் பீகார் சமூகநீதியாளர்களுக்கு பெரியார் – திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு வரவேற்புத் தந்தது தமிழ்நாடு.
லாலுபிரசாத்துக்கென ஒரு தனிப் பேராதரவு – கைநீட்டி அவரது சமூகநீதிக் கொள்கையை வரவேற்றவை தமிழ்நாடும், திராவிடர் இயக்கமும்தானே! இப்படி எத்தனையோ கூறலாம்!
=> வெறுப்பு அரசியல் ஆர்.எஸ்.எஸ்.சுக்கே உள்ளது! :
ஹிட்லரின் நாஜி ‘ஸ்வஸ்திக்’ சின்னம் தானே முதலில் ஆர்.எஸ்.எஸ்.சின் சின்னம். முசோலினியைச் சந்தித்த தலைவர் எந்த மதத்தவர்? எந்த அமைப்பைச் சார்ந்தவர்? இப்படி உண்மைகள் உலாவரச் செய்யவேண்டுமா?
பெரியார் மண், ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி மண்!
இப்படிப் புளுகு மூட்டைகளை வைத்து, அற்ப அரசியல் – ஆதாரமில்லா – முரண்பாடுகளை முன்வைக்கும் முக்காட்டு அரசியல் முகமூடி தமிழ்நாட்டில் கழன்று விடுவது உறுதி. பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது, நிலைக்காது!






