அரசியல்

திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !

திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (23-10-25)

‘தினமலர்’ சொல்லும் செய்தி!

“திராவிட மாடல் ஆட்சியில் வறுமை இல்லை, பட்டினிச் சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, சாதி மோதல்கள் இல்லை, மதக் கலவரங்கள் இல்லை, பெரிய வன்முறை இல்லை - இப்படி இல்லை, இல்லை, இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி காட்டி இருக்கிறோம்” என்று சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் சொல்லி இருந்தார்கள். அதற்கு ஆதாரமாக ஒரு கட்டுரையை 'தினமலர்' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தனிப்பட்ட விரோத வன்முறைகள், கொலைகளை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக சித்தரிக்க முயன்றார். 'தனிப்பட்ட முன்விரோதம் காரணமான கொலைகளை சட்டம் ஒழுங்கு மோசமாகச் சொல்ல முடியாது' என்று மாண்புமிகு முதல் அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனாலும் பழனிசாமி சொன்னதையே சொல்லி வருகிறார்.

16.10.2025 நாளிட்ட 'தினமலர்' நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. 'தமிழ்நாட்டில் குடும்பச் சண்டை காரணமாகத் தான் அதிகமான கொலைகள் நடக்கிறது' என்பதை ஆதாரத்துடன் எழுதி இருக்கிறது 'தினமலர்'.

2021,22,23,24,25 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளுக்கான காரணங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறது அந்த நாளிதழ். மதம் சார்ந்த கொலைகள் 2022,2025 ஆகிய ஆண்டுகளில் ஒன்று கூட இல்லை. 2023,2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கொலை நடந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது.

திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !

சாதி தகராறு அடிப்படையில் 5,4,3,4,0 ஆகிய எண்ணிக்கையில் (ஒவ்வொரு ஆண்டு வரிசைப்படி!) நடந்துள்ளன. சாதி முன் விரோதமாக 4,3,5,3,0 ஆகிய எண்ணிக்கையில் நடந்துள்ளன. அரசியல் ரீதியாக 2,4,1,0,0 என்ற அளவில்நடந்துள்ளன.

தீவிரவாத அமைப்புகள் ரீதியானவை இந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று கூட நடக்கவில்லை. அதேபோல் பயங்கரவாத அமைப்புகள் ரீதியான சம்பவங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒன்று கூட நடக்கவில்லை.

மற்றபடி காதல் விவகாரம், தகாத உறவு, குடும்பச் சண்டைகள், பண விவகாரம், சொத்துப் பிரச்சினை, முன் விரோதம், வாய் தகராறு போன்றவைதான் அதிகப்படியான கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளது 'தினமலர்'.

சாதி தகராறு, மதத்தகராறு, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய வன்முறைகள், கூட்டுத் தகராறுகள், கூட்டுச் சம்பவங்களைத் தான் சட்டம் ஒழுங்கின் சீரழிவுகளாகச் சொல்ல முடியும். அந்த வகையில் விரல் ஏதும் சொல்லிக் காட்டும் படி தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்பதையே அந்த நாளிதழின் கட்டுரை எடுத்துச் சொல்கிறது.

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று ஆகும்.

அனைத்து சம்பவங்களிலும் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கூலிப்படையினர் எனக் கருதப்படுவோரின் நடவடிக்கைகள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2017--2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வந்ததன. இது படிப்படியாக 2021 முதல் குறைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த ரவுடி கொலைகள் பதிவாகியுள்ளன. சாதி மற்றும் பழிவாங்கும் நோக்கம் கொண்ட கொலைகள் குறைந்துள்ளன.

திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !

காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்காரணமாக, 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம்ஆண்டில் தமிழ்நாட்டில் கொலைகள், காய வழக்குகள் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. கொலை வழக்குகளில் ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சரித்திரப் பதிவு குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதானது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். சிறைக்குள் இவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகிறார்கள். ரவுடிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் ரவுடிகளுக்குள் பழிவாங்குதல் குறைந்து வருகிறது.

காவல் துறைக்கு கடுமையான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வந்துள்ளார் முதல் அமைச்சர்.

"குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். குற்றங்கள் நடக்காத மாநிலமாக போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக -பாலியல் குற்றம் இல்லா மாநிலமாக - நமது மாநிலம் உருவாக வேண்டும்.

குற்றங்கள் எங்கும் யாராலும் நடக்கக் கூடாது, மீறி நடந்தால் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டாக வேண்டும்.சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனை பெற்றுத் தந்தாக வேண்டும்.

இத்தகைய உறுதிமொழியை நான் எடுத்தால் போதாது -காவல்துறையின் உயரதிகாரிகள் எடுத்தால் போதாது -ஒவ்வொரு காவலரும் எடுத்தாக வேண்டும். எனது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை - நடக்க விடமாட்டேன் என்று ஒரு காவலர் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்யத்துக்கு வந்துவிடும் என்பதில் இல்லை. மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு -குற்றச் சம்பவங்களில் பூஜ்யமாக இருந்தால்தான் அது நமக்கு பெருமை.

இதில் பூஜ்யம் தான் வாங்க - 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன் அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும்” என்று காவல்துறைக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் வேண்டுகோளாக மட்டுமல்ல; உத்தரவாக ஆணையாக பிறப்பித்துள்ளார்.

அப்படியே காவல் துறையும் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் மாநிலம் அமைதி மிகு மாநிலமாக இருக்கிறது. அதனால் தான் வளர்ச்சி மிகு மாநிலமாகவும் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories