ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆகம கோயில்களை கண்டறியும் குழுவில் முருகவேல் என்பவரை நியமனம் செய்ததற்கு மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவரை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொடர்ச்சியாக இவ்வாறு தமிழக அரசால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தால் ஆகம விதியை பின்பற்றும் கோயில்களையும் இதர கோயில்களையும் கண்டறிய காலதாமதம் ஏற்படும் என்றும், அர்ச்சகர் நியமனம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் 46 ஆயிரம் கோயில்கள் உள்ளதாகவும், ஒரு லட்சம் இதர கோயில்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். அதோடு 4,600 அர்சகர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கிய பெயர்களின் படி ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி, அறநிலையத்துறை தலைவர், தவ திரு குன்றங்குடி அடிகளார், ஆதீன கர்த்தா அருள் மிகு பொம்மபுரம் ஆதீனம், சிவஞான பாலையா சுவாமிகள் ஆகிய 6 பேர் கொண்ட குழு மூன்று மாதத்தில் ஆகம விதிகள் மற்றும் ஆகம விதிகள் அல்லாத கோயில்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.