பாமக யாருக்கு சொந்தம் என்பதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனிடையே பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றதாக அன்புமணி தரப்பினர் ஆதாரத்தை அளித்தனர்.
ஆனால் அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் அளித்த ஆவணம் தவறானது என ராமதாஸ் தரப்பினர் கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியாக ராமதாஸ் தரப்பை சேர்ந்த மூத்த பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பா.ம.க நிறுவனராக இருந்த ராமதாஸ் தற்போது தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளார். முன்னதாக அன்புமணி தலைவராக 3 ஆண்டு பதவி வகித்தார். அவர் பதவி காலம் முடிந்ததும், நிர்வாக குழு கூடி மருத்துவர் ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்தது.
பின்னர் பொது குழுவிலும் மருத்துவர் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அன்புமணி ராமதாஸ் சில தவறான தகவல்களை கொடுத்து 2026 ஆம் ஆண்டு வரை தன் பதவி காலம் இருக்கிறது என்றும் சில பொய்யான ஆவணங்களையும், திருத்தத்தையும் மேற்கொண்டு கட்சியின் முகவரியை மாற்றி உள்ளார்.
2022 பொதுக்குழுவில் எட்டு தீர்மானமே நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒன்பதாவது ஆக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அது முகவரி மாற்றம் தொடர்பான தீர்மானம் என்றும் கூறி தவறான தகவல்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். பா.ம.க கட்சியின் தலைமை அலுவலக முகவரியை மாற்றி அன்புமணி முறைகேடு செய்துள்ளார்.
அதோடு பா.ம.க தலைவர் பதவி நீட்டிப்பு குறித்த தவறான ஆவணங்களை அன்புமணி கொடுத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தோம். அதனை பார்த்து விட்டு, பதவி நீட்டிப்புக்காக அன்புமணி கொடுத்த ஆவணம் தவறானது என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. பா.ம.க விவகாரத்தில் விரைவில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும். வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.