புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் அவசர கலந்தாய்வு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான இரா. சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் ஏற்கனவே பந்த் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடத்தினோம். அப்போது சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியும், மின்துறை அமைச்சர் நமச்சிவாயமும் புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியாரிடம் விற்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். இதுசம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் திடீரென அதானி செபிக்கு கொடுத்த கடிதத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த கடிதத்தை பார்க்கும்போது ஏற்கனவே அதானி குழுமம் மின்துறை பங்குகளை புதுச்சேரி அரசிடம் இருந்து பெற்றுவிட்டது தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மின்சார துறையை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அதானி குழுமத்துக்கு தாரைவார்த்துவிட்டனர். இது புதுச்சேரி மாநில மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம். சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். நீதிமன்ற வழக்கையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் நாங்கள் மின்துறை பங்குகளை விற்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைத்து, பொய்யான தகவல்களை பரப்புகிறார். அமைச்சர் நமச்சிவாயம் குஜராத்தில் அதானியை எதற்கு சந்தித்து பேசினார். அதானி செபிக்கு கொடுத்த கடிதம் பொய்யா? இதற்கு ஏன் அவர் விளக்கம் கொடுக்கவில்லை. புதுச்சேரியில் மின்துறையை தனியாரிடம் கொடுத்த முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பிற அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இதனை கண்டித்து வரும் செப்டம்பர் 8-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அமைச்சர்கள் விழாக்களுக்கு செல்லும்போது அவர்களை முற்றுகையிடுவோம். முக்கிய நகரப்பகுதிகளில் தீ பந்த ஊர்வலம் நடைபெறும். அடுத்தகட்டமாக ரயில் மறியல் பேராட்டம் நடத்தப்படும். புதுச்சேரி, வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். ரூ.20 ஆயிரம் கோடி சொத்துள்ள மின்துறையை ரூ.2,480 கோடி கணக்கிட்டு ரூ.500 கோடிக்கு அதானியிடம் தாரை வார்த்துள்ளனர். அதானிக்கு சலுகை செய்ய ரூ.380 கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர் வாங்கியிருக்கிறார்கள். மின்சார கட்டமைப்பை உருவாக்க நிறைய தொகையை செலவிட்டுள்ளனர்.
இப்படி ஒட்டுமொத்தமாக அதானியை மாநிலத்தின் உள்ளே விட்டு புதுச்சேரியை கபளிகரம் செய்கிறார்கள். புதுச்சேரியில் உள்ள அரசு சொத்துக்களை எல்லாம் அதானி கபளிகரம் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மின்துறையை இந்த அரசு தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்தும் வரை எங்களின் போராட்டம் தொடரும்"என்று கூறியுள்ளார்.