தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஏற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
2. பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
3. தூய்மைப் பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
6. கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவை அனைத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் ஆகும். எனவே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.