2014ஆம் ஆண்டு “Make in India” திட்டம் தொடங்கியபோது, உற்பத்தித் துறையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பங்குகளை 25% ஆக உயர்த்துவது, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அதிகரிப்பது, ஏற்றுமதி இறக்குமதி இடைவெளியைக் குறைப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது போன்ற நான்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் இந்த நோக்கங்கள் நிறைவேறினவா என்பது கேள்விக்குறியே!
2014ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு, 16.7%லிருந்து உற்பத்தித் துறையின் GDP பங்களிப்பை 2022க்குள் 25% ஆக உயர்த்துவோம் என்று அறிவித்தது. ஆனால், தற்போது இந்தியாவின் GDPயில் இதன் பங்கு 15.9% ஆக உள்ளது. இது 2014ஆம் ஆண்டில் இருந்ததைவிட மோசமான நிலை. அந்நிய முதலீடு எதிர்பார்த்த அளவு வராததும், உள்நாட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யாததும் இதற்குக் காரணம்.
2014ஆம் ஆண்டில் 36 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் அந்நிய முதலீடு செய்யப்பட்டபோது, 5.3 பில்லியன் டாலர்கள் திரும்பப் பெறப்பட்டன. அதேநேரத்தில், 2024ஆம் ஆண்டில் 71 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீடு செய்யப்பட்டாலும், 44.4 பில்லியன் டாலர்கள் திரும்பப் பெறப்படுகிறது. ஆகையால், தற்போது இந்தியாவுக்கு எவ்வளவு முதலீடு வருகிறதோ, அதே அளவு பணமும் வெளியேறுவதைப் பார்க்கலாம்.
இது நாட்டின் நிகர முதலீட்டைக் குறைக்கிறது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு பெருகுவதாக அரசு பெருமைப்படுகிறது. விளம்பரங்களாலும், வெற்று போட்டோஷுட்களாலும், “Make in India” அல்ல, “Assemble in India” என்ற உண்மையை ஒன்றிய பாஜக அரசு மறைக்கப் பார்க்கிறது.
இதை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ள கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அவர்கள் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு :-
2025ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையின் பங்கு 13-14% ஆகக் குறைந்ததற்கான காரணங்கள் பற்றிய விவரங்கள், ஆண்டு வாரியாக 2014-2025 வரை உற்பத்தித் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகள் பற்றிய விவரங்கள் என்ன? மேலும் 2025ல் "Make in India” திட்ட முன்னெடுப்பு, அதன் உற்பத்தித் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்கை 15% லிருந்து 25% ஆக உயர்த்தும் இலக்கை அடையத் தவறியதற்கான காரணங்கள் என்ன?
2014-2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரத்துகள் எவ்வளவு? மேலும் முன்னணி உற்பத்தி மாநிலங்களின் செயல் திறன்களின் ஒப்பீடு என்ன? அதில் வேறுபாடுகள் இருப்பின் அதற்கான காரணிகள் என்ன என்பதை மாநில வாரியாக தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.
உற்பத்தி சார் ஊக்கத்தொகை (PLI - Production Linked Incetive) திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்து பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு? மேலும் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.
மாநில அளவிலான உற்பத்தி கொள்கைகள் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அவற்றின் செயல்திறன், அதிக செயல்திறன் கொண்ட மாநிலங்களின் சிறந்த நடைமுறைகள் உட்பட, அரசாங்கத்தின் மதிப்பீட்டின் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.
மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தி போட்டித்திறன் மற்றும் ஏற்றுமதி செயல்திறனில் இந்தியாவின் தற்போதைய உலகளாவிய தரவரிசை என்ன? மற்றும் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் இதுவரை பூர்த்தி செய்யப்படாததால் அதற்காக மாற்றியமைக்கப்பட்ட வியூகங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.