பீகாரில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், Special intensive revision எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது. இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதிக்கு முன்பு கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்கப்படாத பெயர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் பெயர் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள், நீக்கப்பட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவிலும் தேர்தலை இப்படித்தான் அவர்கள் கையகப்பட்டுத்தினார்கள். ஒரு கோடி வாக்காளர்கள் அங்கு புதிதாக சேர்க்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை கேட்டோம். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. சிசிடிவி பதிவுகளை கேட்டோம். தேர்தல்களை தங்களுக்கு ஏதுவாக மாற்றுவதுதான் பாஜகவின் வழக்கமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.