அரசியல்

“நாட்டில் நடைபெறுவது மனுதர்மமா? சமதர்மமா? மதவெறி ஆட்சியா? மதச்சார்பற்ற ஆட்சியா?”- கி.வீரமணி ஆவேசம்!

மீண்டும் மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவருவதுதான் ஹிந்துத்துவாவாதிகளின் நோக்கம். நாட்டை ஆளவேண்டியது மனித தர்மமா? மனுதர்மமா? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டில் நடைபெறுவது மனுதர்மமா? சமதர்மமா? மதவெறி ஆட்சியா? மதச்சார்பற்ற ஆட்சியா?”- கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முக்கியமாக இடம்பிடித்துள்ள சோசலிஸ்டு, மதச்சார்பின்மை இரண்டையும் நீக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மீண்டும் மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவருவதுதான் ஹிந்துத்துவாவாதிகளின் நோக்கம். நாட்டை ஆளவேண்டியது மனித தர்மமா? மனுதர்மமா? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தொடக்கம் முதல் இன்றுவரை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதே இல்லை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள மூத்த தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் பலரது நடவடிக்கைகள் அமைச்சரவையில் பதவி ஏற்கும்போது, எடுத்த பிரமாணம், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான, அப்பட்டமான இரட்டை வேடப் போக்குயுடையன என்பதை நாடு புரிந்துகொள்ளவேண்டும்; மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு! :

இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், புதுடில்லியில் நேற்று (27.6.2025) வெளியிட்ட பதிவில்,

‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி தற்போது விலகியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பி.ஜே.பி.,யும் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்து அரசமைப்புச் சட்டம் அவர்களை எரிச்சலூட்டுகிறது. மனுஸ்மிருதியை அமுல்படுத்துவதுதான் அவர்களின் விருப்பம்.

ஏழைகள் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களை மீண்டும் அடிமைகளாக ஆக்கவேண்டும் என்பதுமே அவர்களின் விருப்பம். இந்தக் கனவைக் காண்பதை ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் நிறுத்தாது.

இதில், ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த முழு பெரும்பான்மை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குக் கிட்டியிருந்தால், இந்நேரம் அவர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பொருட்டாகக் கருதாமல், மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாக்கிட அனைத்து முயற்சிகளையும் செய்திருப்பார்கள்.

மைனாரிட்டி அரசாக, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு இருப்பதால், அதனை செயல்படுத்த வாய்ப்பில்லை.

என்றாலும், அதை அவர்கள் தங்களது மறைமுகத் திட்டமாகவே (Hidden Agenda) வைத்து, அவ்வப்போது நோட்டம் விட்ட நிலையிலேயே உள்ளார்கள்.

“நாட்டில் நடைபெறுவது மனுதர்மமா? சமதர்மமா? மதவெறி ஆட்சியா? மதச்சார்பற்ற ஆட்சியா?”- கி.வீரமணி ஆவேசம்!

அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க விரும்பும் ஆர்.எஸ்.எஸ். :

பிரதமர் மோடி அவர்களது பெருமுயற்சியால் ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச்செயலாளராக உள்ள தத்தாத்ரேய ஹோசபாலே, ‘‘புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படவேண்டும்; தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள முக்கிய கொள்கை நெறிகளில் இரண்டை – பகிரங்கமாகவே – நீக்கவேண்டும்’’ என்று வற்புறுத்தியுள்ளார்.

‘Socialist’ – சமதர்ம சமுதாயம் ‘Secular’ – மதச்சார்பற்ற என்ற இரண்டு வார்த்தைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்ற ஹிந்துத்துவ, ஆரிய, மனுதர்ம முறைக்கே நாட்டை இழுத்துச் செல்ல, ஆயத்தமாகி வருகிறார்கள்! இதை, தந்தை பெரியாரின் திராவிட இயக்கமும், மற்ற இடதுசாரி முற்போக்கு இயக்கங்களும், தற்போதைய இந்திய தேசிய காங்கிரசும் கடுமையாக எதிர்த்துக் கொண்டுள்ளன.

நாட்டில் நடைபெறுவது வெறும் அரசியல், தேர்தல் போராட்டமல்ல! :

எனவே, இப்போது நம் நாட்டில் நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல், தேர்தல் போட்டி அல்ல.

மனுதர்மமா? சமதர்மமா?

(ஹிந்து) மதவெறி ஆட்சியா? மதச்சார்பற்ற ஆட்சியா?

தமிழ்நாட்டினை மாற்றிட ‘கஜகர்ணம்’ போட்டுப் பார்ப்பதும், அதற்குப் பலரை அச்சுறுத்தியும், ஆசை காட்டியும், தங்களை விற்றுக்கொள்ளும் விபீடண, பிரகலாத, அனுமார் பட்டாளங்களையும், தேர்தல் கூட்டணி என்ற தூண்டில் போட்டுப் பிடிக்க, சாம, பேத, தான, தண்ட முறைகள் மனுதர்மம், ஆரிய பஞ்சதந்திரம் முறைகளையே கையாளுகிறார்கள்!

கடந்த 2014 ஆம் ஆண்டில், ‘‘பல்ராம் சிங் vs ஒன்றிய அரசு’’ என்ற வழக்கு ஒன்றை ஆர்.எஸ்.எஸ். கருத்தாளர்களை விட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

‘socialist’, ‘Secular’ என்ற இரண்டு வார்த்தைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டும் என்பதுதான் அந்த வழக்கின் முக்கியாம்சம்.

அதை உச்சநீதிமன்றம் அறவே நிராகரித்ததோடு, ‘‘42 ஆவது திருத்த அரசமைப்புச் சட்டம் செல்லும். அது எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பின்படியே, இரண்டு பதங்களும் (‘socialist’, ‘Secular’) கட்டாயம் அரசமைப்புச் சட்டத்தில் இருந்தே தீரவேண்டிய ஒன்றாகும்’’ என்று உறுதியான தனது தீர்ப்பைக் கூறிவிட்ட பிறகும், ஆர்.எஸ்.எஸ்., மீண்டும் அதனை வற்புறுத்துவதின் ரகசியம் புரியவில்லையா?

“நாட்டில் நடைபெறுவது மனுதர்மமா? சமதர்மமா? மதவெறி ஆட்சியா? மதச்சார்பற்ற ஆட்சியா?”- கி.வீரமணி ஆவேசம்!

மனுதர்ம மனப்பான்மைதான்! :

தந்தை பெரியாரின் தத்துவமும், திராவிட இயக்கமும் பெரியார் மண்ணை, கண்ணை இமை காப்பதுபோல், காத்து வருகின்றபடியால், ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி, அதன் ஆற்றல்மிக்க முதலமைச்சர் தலைமையில் மிகச் சிறப்பாக – சோதனைகளைக் கடந்து, நெருப்பாற்றில் நீந்தி, சாதனைச் சரித்திரம் படைப்பதாலும், தி.மு.க. அதன் அபார ஆளுமைத் திறனாலும், அதன் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது அரசியல் வியூகங்களாலும், வினைத்திட்பத்தாலும் மனு பரம்பரை ஆட்சி, இங்கே துளிர்விட முடியாத தடுப்பணைகள் – பாறைகளின் பாதுகாப்புபோல் உறுதி பெற்று நடைபெறுகிறது.

கொள்கைக் கூட்டணி, அதற்குக் கிடைத்துள்ள ஒரு தனித்துவமான அரசியல் போராயுதம்.

எனவே, மனுதர்மமா? மனிதநேயமா? என்ற போராட்டம் அடுத்த ஆண்டு வருகின்ற தேர்தலிலும், மனுவாத கனவின் முதுகெலும்பை முறித்துக் காட்டுவது உறுதி!

எது வெல்ல வேண்டும்? :

எனவே, இரண்டில் எது வெல்லும் – எது வெல்லவேண்டும்? என்பதில் நாடு தழுவிய விழிப்புணர்வு வெளிச்சத்தை ஏற்படுத்துவது இன்றியமையாத கடமையாகும். ஒவ்வொரு முற்போக்காளர்கள், மனிதத்தை மதிப்பவர்கள், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் – தி.மு.க. கூட்டணியை, மேலும் பலப்படுத்திடுவது தமது உயிர்க் கடமையாகும்!

banner

Related Stories

Related Stories