அரசியல்

பாசிச ஆட்சி நடத்தும் பா.ஜ.க மிசா காலத்துக்காக கண்ணீர் விடுவது கேவலமானது - முரசொலி காட்டம் !

பாசிச ஆட்சி நடத்தும் பா.ஜ.க மிசா காலத்துக்காக கண்ணீர் விடுவது கேவலமானது - முரசொலி காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (28-06-25)

தீர்மானம் போடத் தகுதி இருக்கிறதா?

1975ஆம் ஆண்டு அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதை வைத்து கீழ்த்தரமான அரசியலைச் செய்கிறது பா.ஜ.க. அவசர நிலையின் போது உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இதுதான். இப்படித் தீர்மானம் போடுவதற்கான தகுதி, பா.ஜ.க.வுக்கு இருக்கிறதா?

“நாட்டில் கடந்த 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலையின் அடக்குமுறைகளால் உயிர்த்தியாகம் செய்தவர்களை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த" பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர நிலையின் போது அரசமைப்புச் சட்டம் அளிக்கும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு கற்பனை செய்ய முடியாத அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களுக்காக ஒன்றிய அமைச்சரவை இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பா.ஜ.க. அமைச்சர்களும் ஜனநாயகக் காவலர்களாக, மக்களாட்சியின் காவலர்களாக, அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர்களாக மாறிக் காட்சி அளிக்கிறார்கள். இந்த வேஷம் அவர்களுக்கு ஒட்டவில்லை, பொருந்தவில்லை என்பதுதான் உண்மை.

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட காலம் என்றும், அரசமைப்பு மாண்புகள் கைவிடப்பட்டன என்றும், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன என்றும், பத்திரிக்கைச் சுதந்திரம் முடக்கப்பட்டது என்றும், பலரும் கைது செய்யப்பட்டார்கள் என்றும், நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டது என்றும், நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன என்றும், ஏழை எளிய மக்கள் குறிவைக்கப்பட்டார்கள் என்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மிக உருக்கமான பதிவை இட்டுள்ளார். இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்?

பாசிச ஆட்சி நடத்தும் பா.ஜ.க மிசா காலத்துக்காக கண்ணீர் விடுவது கேவலமானது - முரசொலி காட்டம் !

மோடி பிரதமர் ஆனது முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அதிகமான தாக்குதலுக்கு உள்ளானது. இன்றைய கூட்டாட்சி இந்தியாவை ஒற்றைச் சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கு ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்தை மோடி கொண்டு வருகிறார். அவர்கள் நினைத்ததைப் போன்ற தனித்த பெரும்பான்மை உள்ள வெற்றியை பா.ஜ.க. பெற்றிருந்தால் இந்நேரம் அவர்களது ஆட்டத்தை இந்தியா பார்த்திருக்கும். நிதிஷ்குமார் தயவில், சந்திரபாபு தயவில் ஆட்சி நடத்துவதால் தான் அடக்கி வாசிக்கிறது பா.ஜ.க.. 'நாங்கள் 400 இடங்களை அடைய நினைப்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகத்தான்' என்று பா.ஜ.க. எம்.பி.ஒருவர் தேர்தல் நேரத்தில் சொன்னார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து பா.ஜ.க. விவாதம் நடத்தி இருக்கிறதா? சாதாரண விவாதத்தின் போதாவது பிரதமர் கலந்து கொண்டு பதில் சொல்லி இருக்கிறாரா? தான் உரையாற்றும் நாளை தவிர வேறு நாளில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து அமர்ந்து பதில் அளித்துள்ளாரா பிரதமர்? இந்தியாவின் எந்தப் பிரச்சினைக்காவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரதமர் நேரடியாக கருத்துக் கேட்டுள்ளாரா? நாடாளுமன்றத்துக்கோ ஜனநாயக அமைப்புகளுக்கோ அவர் என்றாவது மரியாதை தந்துள்ளாரா?

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். மாநிலங்கள் அனைத்தும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. அவற்றின் நிதி உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. ஒன்றியப் பட்டியல் - மாநிலப்பட்டியல் - பொதுப்பட்டியல் என அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுப்பட்டியலை அபகரித்து விட்டார்கள். மாநிலப் பட்டியலை ஆக்கிரமித்து விட்டார்கள். இவர்கள் அரசியலமைப்புச் சட்ட மாண்பைப் பற்றி பேசலாமா?

மாநிலங்கள் மீது படையெடுப்பு, மாநில மொழிகள் அழிப்பு, தேசிய இனங்களின் அடையாளங்கள் அழிப்பு - இவைதான் இன்றைய பா.ஜ.க. அரசின் கொள்கை ஆகும். காஷ்மீர் என்ற மாநிலம் சிதைதக்கப்பட்டு சின்னாபின்னம் ஆனது. சட்ட ரீதியாகவே செய்தார்கள். மணிப்பூர் பற்றி எரிகிறது. எரிய விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் பீதியில் வாழ்கிறார்கள். கலவரம் செய்ய ஒரு காரணம் கிடைத்தால் போதும். வெறுப்புப் பேச்சுகளின் புகலிடமாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் இருக்கின்றன. உச்- சநீதிமன்றமே பல முறை இதனைக் கண்டித்திருக்கிறது.

பாசிச ஆட்சி நடத்தும் பா.ஜ.க மிசா காலத்துக்காக கண்ணீர் விடுவது கேவலமானது - முரசொலி காட்டம் !

உச்சநீதிமன்றம், பா.ஜ.க. ஆட்சியாளர்களால் என்னவாக மதிக்கப்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. தேர்தல் ஆணையர் தேர்வில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைப் புறக்கணித்தது இந்தியாவின் நீதித்துறை மீதான மாபெரும் அச்சுறுத்தல் அல்லவா?

வாக்குறுதிகள் எவற்றையும் எதையும் நிறைவேற்றாமல், அப்பாவி மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் வைத்துள்ளது மோடி அரசு. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்படுகின்றன. கடன் வாங்கியவர்கள் தப்ப வைக்கப்படுகிறார்கள். இது யாருக்கான ஆட்சி என்பதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை.

இப்படி ஒரு பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.க., மிசா காலத்துக்காக கண்ணீர் விடுவது கேவலமானது. 'மிசாவில் கைதான தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி அமைக்கலாமா?' என்ற கேள்வியை இவர்கள் எழுப்புகிறார்கள். 23.1.1978 அன்று வடமாநிலத்தில் உரையாற்றிய பிரதமர் இந்திரா அவர்கள், மிசா சட்டத்தைக் கொண்டுவந்ததற்காக மன்னிப்புக் கேட்டார். ரேபரேலி தொகுதி பொதுக்கூட்டத்திலும் மன்னிப்பு கேட்டார். 1979 செப்டம்பர் 30 அன்று சென்னையில் உரையாற்றிய பிரதமர் இந்திரா அவர்கள், 'நாங்கள் செய்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்றார். இவை எல்லாம் வரலாறு.

பதினோரு ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலையை நடத்தி வரும் பா.ஜ.க. தலைமை எத்தனை தடவைகள் மன்னிப்புக் கேட்கப் போகிறது?

banner

Related Stories

Related Stories