முரசொலி தலையங்கம் (27-06-25)
சரியும் பா.ஜ.க. செல்வாக்கு!
நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது. இது பா.ஜ.க.வின் சரிந்து வரும் செல்வாக்கைச் சொல்கிறது.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.
பா.ஜ.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் குஜராத் மாநிலத்தில் காதி, விசாவதார் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் விசாவதார் தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி இருக்கிறது. காதி தொகுதியில் மட்டுமே பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்தது. காதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். காதி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை முதலில் இருந்தே சொல்லாமல் வைத்திருந்தது தேர்தல் ஆணையம். இதனை சந்தேகத்துக்குரியதாக எதிர்க்கட்சிகள் சொல்லத் தொடங்கி உள்ளன.
குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விசாவதர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பூபேந்திரபாய் கந்துபாய் பயானி திடீரென பா.ஜ.க. பக்கம் தாவிவிட்டார். பா.ஜ.க.வின் அழுத்தம்தான் அதற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
பூபேந்திரபாய் பதவி விலகியதால் விசாவதர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பூபேந்திரபாய் தங்கள் பக்கம் வந்ததால் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பா.ஜ.க. நம்பியது. ஆனால் பா.ஜ.க. தோல்வியையே தழுவியது. இது பா.ஜ.க.வுக்கு எதிர்பாராத தோல்வியாகும். ஏழு முறையாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் 2007 முதல் இந்த விசாவதர் தொகுதியில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. “பா.ஜ.க.வால் மக்கள் சலிப்படைந்து உள்ளனர் என்பதை இது காட்டுகிறது” என்று சொல்லி இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பா.ஜ.க. குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், பஞ்சாப்பில் ஒரு தொகுதியிலும் வென்றதை தங்களின் மாபெரும் வெற்றியாக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
கேரளாவின் நீலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்றது. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பா.ஜ.க. காங்கிரஸ் வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 77,727. மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 66,660. பா.ஜ.க. வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 8,648. பா.ஜ.க. டெபாசிட் இழந்துள்ளது கேரளத்தில்.
மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளரை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார் இவர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, குஜராத் (ஒரு தொகுதி) என அனைத்திலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் தங்களது செல்வாக்கை மெய்ப்பிக்கும் தேர்தலாக இடைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் எல்லாம் தொடர் தோல்வியையே பா.ஜ.க. சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றியது பா.ஜ.க.வுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணி. இரண்டே இடங்களில்தான் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பஞ்சாப்பில் ஒரு தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. பீகார் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வென்றார். மத்தியப் பிரதேசம் நீங்கலாக மற்ற ஆறு மாநிலங்களிலும் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
2024 ஜூலை தேர்தல் முடிவும், 2025 ஜூன் தேர்தல் முடிவும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிவதையே காட்டுகின்றன.
•