அரசியல்

“தனித்துவம் கொண்ட தமிழ்நாடு மதவெறி அணி திரட்டலை அனுமதிக்காது!” : இரா.முத்தரசன் திட்டவட்டம்!

தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் இந்து முன்னணியின் பெயரால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

“தனித்துவம் கொண்ட தமிழ்நாடு மதவெறி அணி திரட்டலை அனுமதிக்காது!” : இரா.முத்தரசன் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு விடி சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல் கருத்தியலை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்டிரிய சுயம் சேவக் தன்னை அரசியல் அமைப்பாக காட்டிக் கொள்வதில்லை.

இந்த அமைப்பின் மூதாதையர்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமானவர்கள் என்பதாலும், பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடமைக் கருத்துக்கள் வலிமை பெற்றுத் திகழ்வதாலும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக செயல்பட முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த 1981-82 ஆம் ஆண்டுகளில் மீனாட்சிபுரத்தில் ஏற்பட்ட மதமாற்ற நிகழ்வையொட்டி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்பாக உருவானது. இதன் ஆரம்ப கால அமைப்பாளர் ராமகோபாலன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் மோதல்களை உருவாக்கி வந்ததையும், இதனால் ஏற்பட்ட பேரழிவுகளையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

வட மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கையில் எடுத்த இதிகாச நாயகன் ராமர், அரசியல் ஆதாயம் தேட கை கொடுத்தது போல், தமிழ்நாட்டில் பயன்படவில்லை என்பதால், அவர்கள் தேடி கண்டுபிடித்த கருவி, குறிஞ்சி நில சமூக அமைப்பில் கட்டமைக்கப்பட “முருக கடவுள்”.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஈரோடு மாவட்டத்தில் சிறுபான்மை குடும்பம் ஒன்று, அவர்களது வீட்டுக்குள் வழிபட்டு வந்ததை பலவந்தமாக தடுத்து, பெரும் பதட்ட சூழலை உருவாக்கியது. அண்மையில், வழிவழியாக அமைதியாக வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றம் பகுதியில் “முருகனின்” பெயரால் பெரும் பதட்டத்தை உருவாக்கி, அதனை அரசியல் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

“தனித்துவம் கொண்ட தமிழ்நாடு மதவெறி அணி திரட்டலை அனுமதிக்காது!” : இரா.முத்தரசன் திட்டவட்டம்!

இதன் தொடர்ச்சியாக நேற்று (22.06.2025) மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் விளைவுகளின் ஆபத்தை உணர்ந்த அரசு அனுமதி கொடுக்க தயங்கிய போது, உயர் நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட்டது. “முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துக்கள் இடம் பெறக் கூடாது” என்ற அறிவுரை வழங்கி, மாநாடு நடத்த அனுமதி வழங்கியது. நீதிமன்ற அறிவுரையை முள் முனையளவும் மதிக்காமல் அவமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், என்ன நடந்தது, முருக பக்தர்கள் மாநாட்டில், சனாதனக் கருத்துக்களை ஆதரிக்கும் சந்நியாசிகளும், ஆதீனங்களும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் முருகனை மட்டுமே ஏற்றுக் கொண்ட பக்தர்களா? என்ற வினாவும் எழுகிறது. அதே சமயம், உயர் நீதிமன்றத்தின் அறிவுரையை முற்றிலும் நிராகரிக்கும் முறையில் ஆர் எஸ் எஸ், பாஜக கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் உரை முழுவதும் அரசியல் சார்ந்தே அமைந்திருந்தது. பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர், ஜனசேனா கட்சி நிறுவனர், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் என்ற நிலையில் பங்கேற்று, மதச்சார்பற்ற அரசின் கொள்கையை சிறுமைப் படுத்தியுள்ளார். மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பம் முதல் கடைசி வரை, தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதாயம் தேடும் நோக்கம் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

மாநாட்டின் தீர்மானங்களில் ‘இந்து வாக்கு வங்கி உருவாக்குவது’ உட்பட பல தீர்மானங்கள் தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ள நடத்தை விதிகளை அத்துமீறியுள்ளன. உறுதி மொழி வாசகங்கள் “முருகனின் பெயரால் கலகங்களையும், மோதல்களையும் உருவாக்கும் தீய உள் நோக்கம் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து, உணர்ந்து மதவெறி அரசியலை நிராகரிப்பார்கள் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதியாக நம்புகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற தொன்மை மரபும், தமிழர் சமுக வாழ்வு மதச்சார்பற்ற மரபில் வளர்ந்துள்ளது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளை தரும் கீழடி ஆய்வும் தமிழர்களின் தனித்துவப் பண்புகளையும், கலாச்சாரத்தையும் முன்னெடுத்து வரும் தமிழ்நாடு மதவெறி அணி திரட்டலை அனுமதிக்காது.

தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் இந்து முன்னணியின் பெயரால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

banner

Related Stories

Related Stories